Wednesday, 26 February 2025

கோழியும் குள்ளநரியும்

 

கோழியும் குள்ளநரியும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவின் பக்கத்து வீட்டில் மெகர்பா என்ற கோழி இருந்தது.

“ மெகர்பா..” என்று கதைப்பாட்டி நீட்டி முழக்கிக் கூப்பிட்டால் போதும், இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் சரி மெகர்பா பறந்து வரும்.

“ .. மெகர்பா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் கதைப்பாட்டி? “ என்று பொறாமையுடன் பூனைக்குட்டி கேட்கும்.

“ மெகர்பா.. என்று சொன்னால் இரக்கமுள்ளது  என்று அர்த்தம்..” என்று கதைப்பாட்டி சொன்னாள். கோழியிடம் என்ன இரக்கம்? அடுத்த வீட்டில் குடியிருந்தாலும் முட்டைகள் முழுவதுமாக சின்னுவின் வீட்டில் தான் இடும் மெகர்பா. அதனால் தான் கதைப்பாட்டி கோழியை மெகர்பா என்று அழைத்தாள்.

ஒரு நாள் கதைப்பாட்டி மதிய நேரம் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது கோழி அங்கே வந்தது. கதைப்பாட்டிக்குத் தானமாகக் கிடைத்த காய்ந்த நெல்லைக் கொத்திச் சாப்பிடத் தொடங்கியது. அப்போது கதைப்பாட்டியின் கால்களில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி துள்ளி எழுந்தது.

“ யாரது? “ என்று கேட்டது.

“ நான் தான் மெகர்பா..”

“ எதுக்கு வந்தே? “

“ நெல்லு சாப்பிட வந்தேன்..”

அதைக் கேட்ட பூனைக்குட்டி குதித்து,

“ நீ நெல்லு கொத்தாதே..” என்று சொன்னது. அப்போது சின்னு சொன்னாள்,

“ உன்னை விரட்டிப் பிடிப்பேன்..”

“ உனக்கு தொப்பை வைக்கும்..” என்று நாய்க்குட்டி சொன்னது. அருகில் இருந்த பூனைக்குட்டி,

“ மேசைக்கு வந்து நீயும் நெல்லைக் கொத்தாதே..” என்று பூனை சொன்னது.

சற்று தூரத்தில் இருந்த புதருக்குள் இருந்த ஒரு குள்ளநரி. இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தது.

என்ன ஒரு அழகான கோழி மெகர்பா! நல்ல இளம் பருவம். கிடைத்தால் ஒரு வாரத்துக்கு வைத்துச் சாப்பிடலாம். இரை தேடிப்போக வேண்டாம்.

பூனைக்குட்டி கோழியை விரட்டியபோது அது புதருக்கு அருகில் வந்து விட்டது. குள்ளநரி தலையை வெளியே நீட்டி,

“ மெகர்பா.. மெகர்பா.. கொஞ்சம் வாயேன் மெகர்பா.. எதற்காக இவர்களோடு சேர்ந்து சுத்தறே.. காட்டுக்கு வா.. உன்னை நான் காட்டுக்கு ராணியாக்குகிறேன்.. யானை கூட உன் கால்களில் விழுந்து கும்பிடும்.. சோளவயல் முழுவதும் நீ அலைந்து திரிந்து சாப்பிடலாம்..”

குள்ளநரியைப் பார்த்து பயந்து நடுங்கியபடி நின்றது மெகர்பா.

“ ஐய்யோ குள்ளநரியண்ணே.. ஒரு நிமிடம் நில்லு.. நான் கதைப்பாட்டியிடம் சொல்றேன்..” என்று சொல்லிய மெகர்பா “ க்க்கோ க்க்கோ கொகொகொ “ என்று கத்தியபடி ஒரே ஓட்டம்.

கதைப்பாட்டி விழித்து எழுந்தார். கையில் வைத்திருந்த கம்பைத் தூக்கி குள்ளநரியை நோக்கி எறிந்தாள். குள்ளநரியின் காலில் பட்டது கம்பு. காலை நொண்டியபடி ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி காட்டுக்குள் ஓடியே போய் விட்டது.

இப்போதும் சின்னுவும் பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் அவ்வப்போது கோழியைச் சுற்றி வந்து பாட்டுப்பாடிக் கேலி செய்வார்கள்.

“ மெகர்பா.. மெகர்பா

கோழிப்பெண்ணே மெகர்பா

காட்டுக்குப் போனால் குள்ளநரி

உன்னைச் சூப்பு வைக்கும் மெகர்பா..”

அதைக் கேட்டு கோழி தலையைக் குனிந்து கொள்ளும்.

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

No comments:

Post a Comment