பெருமைக்குரிய நல்வரவு ஈரோடு சர்மிளா!
இலக்கிய
வகைமைகளில் மிகவும் கடினமானதென்று சிறார் இலக்கியத்தையே சொல்லமுடியும். மற்ற நாவல்,
சிறுகதை, கவிதை, கட்டுரை, போன்ற வடிவங்களை எதிர்கொள்கிற வாசகர்கள் அவர்களுடைய உலக அனுபவங்களின்
வழியே இலக்கியத்தை உரசிப்பார்த்து அதை எடுத்துக்கொள்ளவோ, விட்டுத்தள்ளவோ முடியும்.
ஆனால் சிறார் இலக்கியத்தின் வாசகர்களாக உள்ள குழந்தைகள் இந்த உலகத்தில் இப்போது தான்
பூத்திருக்கிற மலர்கள். அவர்கள் பார்க்கிற, கேட்கிற, வாசிக்கிற, உணர்கிற, எல்லாவற்றையும்
நுகர்ந்து தங்களுடைய ஆழ்மனதில் உணர்வுகளாகப் பதிந்து கொள்வார்கள். அவர்கள் இன்னும்
எழுதப்படாத வெள்ளைத்தாள். அதில் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் அவர்களுடைய ஆளுமைத்திறனுக்கு
அடிப்படையாக அமையும். குழந்தைகளுக்கு எழுதும்போது மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்,
பயத்துடனும், எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
குழந்தைகள்
எப்போதும் தங்களுக்கான கற்பனையுலகினைப் படைப்பதில் நிகரற்றவர்கள். படைப்பூக்கம் அவர்களுடைய
இயல்பாக இருக்கும். யாராலும் கற்பனை செய்யமுடியாத விநோதமான உலகை அவர்களால் படைக்க முடியும்.
அதனால் தான் அவர்கள் யதார்த்தத்திலில்லாத விந்தையான உலகத்தையும், விநோதமான உயிர்களையும்,
அதிசயமான செயல்களையும் நம்புகிறார்கள். நேரடியான எந்த விஷயமும் அவர்களுக்கு சலிப்பூட்டுகிறது.
கற்பனைகளின் வழியே அவர்கள் தங்களுக்கென ஒரு பிரத்யேகமான புதிய உலகைப் படைத்துக் கொள்கிறார்கள்.
அந்த உலகத்தில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல பறந்து திரிகிறார்கள்.
குழந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்வதென்பதே குழந்தை இலக்கியத்தின் முதலும் முடிவுமான
நோக்கமாக இருக்கவேண்டும்.
குழந்தைகள்
மகிழ்ச்சியடையும்போது தான் அவர்களுக்கு தாங்கள் வாழும் இந்த பூமியைக் குறித்தான மதிப்பு,
தங்களுடைய வாழ்க்கை குறித்தான பெருமிதம், தோன்றும். எனவே குழந்தைகளுக்குக் கருத்துகள்
சொல்வதையே நோக்கமாகக் கொண்டு வரும் படைப்புகளை குழந்தைகள் பாடப்புத்தகமாகவே கருதுவார்களென்பதை
சிறார்களுக்காக எழுதுகிறவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இன்றைய
நவீன சிறார் இலக்கியத்தில் புதிய காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. ஏராளமான பெண் எழுத்தாளர்கள்
எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். குழந்தைகளின் உலகத்தில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமான
பெண்கள் எழுதும்போது இன்னும் குழந்தைகளின் மனவுலகத்துக்குள் முக்குளித்து செய்து இலக்கிய
முத்துகளை எடுக்க முடியும். அத்தகைய முயற்சிகளைப் பெண் எழுத்தாளர்கள் மேற்கொண்டு விட்டார்களென்பதற்கான
உதாரணமாக சர்மிளாவின் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் கட்டியம் கூறுகின்றன.
ஒவ்வொரு
கதையும் ஒவ்வொரு விதமாக வண்ணவண்ணப்பலூன்களைச் சேர்த்துக் கட்டியது போல வாசகர்களை ஈர்க்கும்
விதத்தில் எழுதப்பட்டிருப்பது மிகச்சிறப்பு. எந்த ஒரு கதையிலும் இன்னொரு கதையின் எந்தச்
சாயலுமில்லையென்பது சாதாரண விஷயமில்லை.
மனிதர்களின்
கனவைப் போலவே விலங்குகளும் கனவு காணும் பாக்கியலட்சுமியின் கனவாகட்டும், சொந்த ஊரை
விட்டு வேறு ஊருக்குப் பிழைப்புக்காகப் போய்ச்சேரும் குடும்பத்திலுள்ள பாப்பு தன்னுடைய
தனிமையில் வானத்திலேயே தனக்குப் பிரியமான எல்லாவற்றையும் காண்கிற பாப்பு வானத்தில்
கண்ட காட்சியாகட்டும், மரங்கொத்தியும் ஆந்தையும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிற
மூக்கழகி மரங்கொத்தியும், கண்ணழகி ஆந்தையும் கதையாகட்டும், காட்டு மரங்களை வெட்டித்தள்ளுகிற
மனிதர்களை விரட்ட புலியின் உதவியை நாடுகிற பட்டுவும் சிட்டுவும் கதையாகட்டும், அபூர்வக்குளத்தில்
பார்க்கிற கொக்குகள் பூத்திருக்கிற கொக்கு மரம் கதையாகட்டும், கூண்டுகளில் சிறைப்பட்ட
விலங்குகள் தங்களுடைய சொந்த வாழ்விடத்துக்குத் தப்பித்துச் செல்கிற தப்பிக்குமா தங்க
மீன் கதையாகட்டும், நாயின் நன்றியைச் சொல்கிற பார்த்தியும் மணியின் நன்றியும் கதையாகட்டும்,
கதைகளில் ராஜாவாகவே சொல்லப்படுகிற சிங்கம் புலம்புகிற புலப்பத்தில் நமக்கு பல வெளிச்சம்
கிடைக்கிற எவஞ்சொன்னது நான் ராஜான்னு கதையாகட்டும், எதிர்காலத்தில் பறவைக்காதலனாக மாறவேண்டுமென்று
ஆசைப்படுகிற அன்புராஜின் அன்பு கதையாகட்டும், நவீன கேட்ஜெட்டுகளின் பிடியில் மாட்டிக்கொண்ட
குழந்தைகளிடம் உரிமையோடு கோபப்படுகிற மரப்பாச்சியின் கோபம் கதையாகட்டும், சாதாரணப்பொருட்களின்
மீது அசாதாரணமான மூடநம்பிக்கைகளை ஏற்றிப் பின்பற்றுபவர்களை அந்தப் பொருட்களே சாடுகிற
வழக்கு எண் 005 கதையாகட்டும், எல்லாக்கதைகளும் ஒரு புதிய காற்றைச் சுவாசிப்ப்பதைப்
போல புத்துணர்வூட்டுகிறது.
குழந்தைகள்
விரும்பிப்படிக்கிற கதைகளாக இந்த முதல் தொகுப்பிலேயே எழுதியிருக்கிறார் சர்மிளா. இன்னும்
தொடர்ந்து எழுதும்போது பல சாதனைகளைப்
படைக்கும் வல்லமை சர்மிளாவுக்குக் கிடைக்குமென்று நம்புகிறேன். அதற்கான நம்பிக்கையை
தருகின்ற தொகுப்பு என்ற வகையில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
( 10-11-21 - ல் எவஞ்சொன்னது ராஜான்னு நூலுக்கு எழுதிய முன்னுரை )
No comments:
Post a Comment