நம் காலத்தின்
கதைகள்.
உதயசங்கர்
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறார் இலக்கியம் தன்னுடைய
சிறகுகளை விரித்து இதுவரை பறந்திராத பிரதேசங்களில் பறக்கத் தொடங்கி விட்டது. யாரும்
சொல்லாத கதைகளை, யாரும் சொல்லாதவிதத்தில் குழந்தைகளிடம் சொல்லத் தொடங்கி விட்டது. வெறுமனே
விலங்குகள் பறவைகள் பழங்கால நீதிநெறி, நன்னெறி என்ற சுமைகளை மெல்லக் கீழே இறக்கி வைத்து
விட்டு, நம் காலத்தின் கதைகளைக் குழந்தைகளிடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறதென்பதைப் பறைசாற்றும்
விதமாகவே நாடறிந்த எழுத்தாளர். இரா.நாறும்பூநாதனின் பிரேமாவின் புத்தகங்கள் என்ற சிறார்
சிறுகதை நூல் வெளியாகிறது. குழந்தைகளிடம் அறிவுரை சொல்லும் தொனியிலோ, நிர்ப்பந்தப்படுத்தும்
விதத்திலோ, பயமுறுத்தும் விதத்திலோ, ( இதை, இப்படிச் செய்யாததினால் இப்படி ஆகிவிட்டது.
எனவே எச்சரிக்கை! ) இல்லாமல் குழந்தைகளின் உயரத்துக்குக் குனிந்து அவரகளுடன் சேர்ந்து
தோளில் கை போட்டு இனிமையான வார்த்தைகளில் பேசுகிற கதைகளை எழுதியிருக்கிறார் நாறும்பூநாதன்.
சமகாலப்பிரனைகளை குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான மொழிநடையில்,
கலைஅமைதி குறையாமல், ஆர்வமூட்டும் கதைப்பின்னலுடன் எழுதியிருக்கிறார். எல்லாக்கதைகளும்
சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற நேரடியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
ஆனால் பெரியவர்களுக்கே அவை எந்தெந்த சம்பவங்களென்று தெரியும். குழந்தைகளைப் பொறுத்தவரையில்
அவர்கள் இதுவரை வாசித்திராத கதைகள். அப்படியொரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்
நாறும்பூநாதன்.
யதார்த்த வாழ்வில் நாம் நம் காலத்தின் கொடூரமான பிரச்னையான சாதிப்பிரிவினை
பற்றி மூன்று கதைகள் இருக்கின்றன. மூன்றுமே குழந்தைகளிடம் இந்தப் பிரச்னையைக் குறித்து
எப்படிச் சொல்ல வேண்டும்? என்பதற்கு முன்னுதாரணமான கதைகள். ஆறறிவு கதையில் டிட்டு என்ற
குட்டிப்பறவையே கேள்விகளைக் கேட்கிறது. அந்தக் கதையின் முடிவு கவித்துவமானது. அதே போல
பாரவதி அத்தையின் சமையல் கதையில் குழந்தையின் மனது எப்படிப்பட்டதென்பதை கதை முடியும்
போது உணரமுடிகிறது. அந்தக் கடைசி பத்தியிலுள்ள வரிகளை வாசிக்கும்போது ,
“ மனுசங்க.. கடைசி வரைக்கும்
குழந்தைகளாவே இருந்துட்டா எவ்வளவு நல்லாருக்கும்..”
கண்ணில் நீர் துளிர்க்காமல் போகாது. உண்மையான சம்பவத்தை எப்படிக்
கலையாக மாற்றுவது என்பதற்கு நல்ல முன்னுதாரணமான கதை. மனிதருள் வேறுபாடு உண்டோ? என்ற
கதையிலும் மனமாற்றத்தை அழகாகச் சொல்கிற கதையாக விரிந்திருக்கிறது.
குழந்தைகளின் உலகை நாம் நம்முடைய அளவுகோல்களால் அளக்கிறோம்.
அந்த அளவுகோல்களின் போதாமையை உணர்த்தி, என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்கிற கதைகளாக
‘ மாடசாமி உண்மையில் மக்கு தானா? ’என்ற கதையும், ’ கணக்கு எனக்குப் பிடிக்கும் ’என்ற
கதையும் அழகாக அமைந்திருக்கின்றன.
நாற்பத்தியைந்து வருடங்களாக, சிறுகதை எழுத்தாளராகவும், பண்பாட்டு
ஆய்வாளராகவும், சிறந்த பேச்சாளராகவும், சிறந்த அமைப்பாளராகவும் திகழும் நாறும்பூநாதனின்
கலையனுபவமும், அனுபவமுதிர்ச்சியும், சிறார் இலக்கியத்துக்குள் புதிய வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்றன. உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களனைவருமே குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள்.
ஏனெனில் அது அத்தனை சவாலான காரியம். அதே நேரம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், அவசியம்
செய்ய வேண்டிய சமூகப்பங்களிப்பு என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதோ நாறும்பூநாதனும்
அந்த வரிசையில் இணைகிறார். அதற்கு பிரேமாவின் புத்தகங்கள் கதைத்தொகுப்பு முன்னறிவிப்பாகவும்
முத்திரைப்பதிக்கும் தொகுப்பாகவும் வெளிவருகிறதென்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும்
அறிவிக்கிறேன்.
இன்னும் யாரும் செல்லாத திசைகளில் உன் சிறகுகள் விரியட்டும்
நாறும்பூ என் அன்புத்தோழனே!
( பிரேமாவின் புத்தகங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை )
தங்களின் முன்னுரை நூலினை வாசிக்கத் தூண்டுகிறது.குழந்தைகளுக்கு எவற்றை எழுத வேண்டும் என்ற கற்பிதத்தையும் உணர்த்துகிறது.
ReplyDeleteதோழர் நாறும்பூநாதன் அவர்களின் கதை சொல்லும் விதம் அற்புதமாக இருக்கும்.
அவர் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.அப்படி ரசித்து ரசித்து அக்கதைகளின் கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.நெல்லை வட்டார மொழியில் அவர் கூறும் கதைகள் அந்நூலினை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும்..
அவருடைய எழுத்தில் சிறார் இலக்கியம் சிறப்பு தோழர்