Sunday, 2 March 2025

தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு புதுவரவு

 

தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு புதுவரவு

உதயசங்கர்



 

 கடந்த பத்து ஆண்டுகளாக நவீன தமிழ்ச் சிறார் இலக்கியம் நீண்ட வறட்சிக்கு பின் புது மழை பெய்து பெருகிவரும் காட்டாற்று வெள்ளத்தைப் போல பெருகி ஓடிக் கொண்டிருக்கின்றது.

 நவீன தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அறிவியல் கதைகள், புனைகதைகள், அதீதப் புனைகதைகள், வரலாற்றுக்கதைகள், சமூகப் பிரச்னை சார்ந்த கதைகள், கல்விக்கதைகள், என்று புதிய புதிய வகைமைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன

ஏராளமான குழந்தைகள் கதைகளை எழுதி நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில பல விமரிசனங்கள் இருந்தாலும் சரியான திசையிலேயே சிறார் இலக்கியம் சென்று கொண்டிருக்கிறது

சிறார் இலக்கியத்தில் யதார்த்தக்கதைகள் பொதுவாகக் குறைவு. மற்ற புனைகதை, அதீதப்புனைகதை, இவற்றை ஒப்பீடு செய்தால் இதை அவதானிக்கலாம். அதிலும் யதார்த்தக்கதைகளில் பகுத்தறிவு , அறிவியல், நகைச்சுவை, சாதிப்பிரச்னைகள் சார்ந்த கருப்பொருட்களை இயல்பாகக் கையாண்ட கதைகள் மிகவும் குறைவு என்று சொல்லலாம்.

இருவாச்சி சாமி என்ற இந்த நூல் அந்த வகைமையில் மிகச்சிறந்த நூலாக வெளிவந்திருக்கிறது

பூங்கொடி பாலமுருகன் சிறந்த கதைசொல்லியாகவும், பதின்பருவக்குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளை ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதுபவராகவும், நூல் விமர்சகராகவும் ஏற்கனவே அறியப்பட்டவர். அவருடைய முதல் சிறார் சிறுகதை நூலான இருவாச்சி சாமியில் உள்ள கதைகள் குழந்தைகளுக்கு எதைச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? எதற்காகச் சொல்ல வேண்டும் என்ற தெளிவுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒன்பது கதைகளிலும் இயல்பான எளிய மொழிநடை, குழந்தைகளின் மனதை அறிந்து கொண்டு அவர்களுடைய மனநிலையிலிருந்து எழுதப்பட்டுள்ள கதைகளென்பது சிறப்பு. நேரடியான கதை சொல்லல், இயல்பான மொழிநடை, மிக முக்கியமான கருப்பொருட்களென்று தனித்துவத்துடன் கதைகளிருக்கின்றன.

நீயும் நானும் ஒன்று தான், அவனுக்குப் படிப்பு தான் எல்லாம், யார் பெரியவங்க இந்த மூன்று கதைகளிலும் இப்போதும் நிலவும் சாதி ஏற்றதாழ்வுகளைப் பேணும் பெரியவர்களையும் அதை மிக இயல்பாக, யதார்த்தமாகக் கையாளும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் கதைகள். எந்தப் பிரச்சாரமோ, முழக்கமோ, அறிவுரையோ இல்லாமல் சொல்ல முடியுமென்பதற்கு இந்தக் கதைகள் முன்னுதாரணம். அதே போல இருவாச்சி சாமி கதையும் மிக எளிய இனிய தந்திரத்தின் மூலம் தங்கள் பிரச்னையை எப்படிக் கையாள்கிறார்கள் என்று சொல்லும் கதை. கதையை வாசித்து முடியும்போது அட என்று சொல்லவைக்கிறது. அத்துடன் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டவும் தோன்றுகிறது.

சிறந்த நகைச்சுவைக் கதையாக மின் தடையைச் சொல்லலாம். கதை முடியும்போது குபீரென்று சிரிப்பது உறுதி. ஒரு பள்ளிக்கூடம் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்கிற இன்னொரு வீடு உண்மையில் பள்ளிப்பருவ நாட்களை நினைவுபடுத்துகிறது.

இயற்கையின் மீது, விலங்குகளின் மீது, சக மனிதர்களின் மீதான அன்பு, தயை, கருணை, நட்பு, கேள்வி கேட்கும் பகுத்தறிவு என்று எல்லாக்குணாதிசயங்களும் இருக்கின்றன. அந்தக் குணங்களை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இந்தக் கதைகள். சிறார் இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்புகளைத் தரப்போகும் படைப்பாளியாக இந்தத் தொகுப்பின் மூலம் நம்பிக்கையளிக்கிறார் பூங்கொடி பாலமுருகன்.

தமிழ்ச்சிறார் இலக்கியத்துக்குப் புதுவரவு

நல்வரவு பூங்கொடி பாலமுருகன்

இன்னும் இன்னும் எழுதுங்கள்

வாழ்த்துகள்!

 

 ( இருவாச்சி சாமி நூலுக்கு எழுதிய முன்னுரை )

1 comment:

  1. இருவாச்சி சாமி புத்தகத்தின் பெயரே வாசிக்க தூண்டும் படியாக இருக்கிறது.

    இன்றைய காலத்திற்கு ஏற்ப எழுதுவது என்பது தான் சிறார் இலக்கியத்தில் ஆகச் சிறந்தது என்பதை உணர்ந்து கதைகளை எழுதியுள்ள தோழர் பூங்கொடி பாலமுருகன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் 💐💐💐

    முன்னுரை புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்கிறது.பகிர்ந்தமைக்கு நன்றியும் பேரன்பும் தோழர் 🙏

    ReplyDelete