Wednesday, 5 March 2025

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

 

குழந்தைமையின் அற்புதத் தரிசனங்கள்

உதயசங்கர்




குழந்தைமை என்பதே மனிதனோ விலங்குகளோ பறவைகளோ மூளையின் செயல்பாடுகளான அறிவும் மனமும் உருப்பெரும்போது நிகழும் அற்புதங்கள். அனுபவங்களின் வழியே கிடைக்கும் உணர்வுகள் திரண்டு அறிவாக மாறுகிறது. ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடென்பது வெகுளித்தனமாகவும், கவித்துவமாகவும் அபத்தமாகவும் அர்த்தமில்லாததாகவும் தர்க்கமில்லாதாதாகவும் முக்கியத்துவமில்லாததாகவும் இருக்கும் நிலையையே நாம் குழந்தைமை என்கிறோம். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடும் தீவிர ஒருமை நிலையில் தான் குழந்தைமை தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளின் சொல்லும் நடவடிக்கைகளும் கணநேரத்தரிசனங்களைத் தரும். அவற்றைப் பார்ப்பதற்கோ உணர்வதற்கோ அறிவதற்கோ நேரமில்லாத பெரியவர்கள் அலட்சியப்படுத்திக் கடந்து போய்விடுவார்கள். கவிஞர்களும், எழுத்தாளர்களுமே அந்தக் கணநேரத்தரிசனங்களைக் கவிதைகளாக, கதைகளாக மாற்றுகிறார்கள். அப்படி கணநேரத்தரிசனங்களின் தொகுப்பு தான் கவிஞர். சலோனியா லியோ கமலத்தின் கவிதைகள்.

பொதுவாக சிறார் இலக்கியத்தை மூன்று வகைமைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளே எழுதுகிற குழந்தைப்படைப்புகள், குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுகிற படைப்புகள், குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற படைப்புகள் என்று சொல்லலாம். இதில் மூன்றாவது வகையான குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற இலக்கியப்படைப்புகளை கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, என்று தொடங்கி தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் வரை நீளும். இதில் குழந்தைகளை மையப்படுத்தி நவீன கவிதைகளை எழுதுபவர்களாக, பழ.புகழேந்தி, முகுந்த்நாகராஜன், அ.வெண்ணிலா, ந.பெரியசாமி, ஆகியோரை முக்கியமானவர்களாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்தச் சிறப்பான கவிதைத்தொகுப்பின் மூலமாக சலோனியா லியோ கமலமும் இணைகிறார்.

குழந்தைகள் எதையும் திட்டமிடுவதில்லை. ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதில்லை. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இருப்பதில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். அதில் சமாதானமடைகிறார்கள். வெற்றிடங்களை வேறொன்றால் நிரப்புகிறார்கள். அந்தக் குழந்தையின் மனதை கவிஞர் துல்லியமாக வரைகிறார்.

கங்காரு படம் வரைந்த

அனாதைக் குழந்தை ஒன்று

கங்காருவின் பையில்

தனது உருவத்தை வரைந்து

மகிழ்கிறது.

தாய்மைக்கான ஏக்கத்தை குழந்தையின் வரைதலின் மூலம் நிரப்பிக்கொள்கிறது. பெரியவர்கள் எதையும் பயன் நோக்கில் தான் அணுகுகிறார்கள். ஆனால் குழந்தைகள் வெகுளியாய் எல்லாவற்றின் மீதும் அன்பாய் இருக்கிறார்கள்.

‘ ச்சீ போ ‘ என நான் துரத்திவிடும்

காக்கையிடம்

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா எனச்

சொல்லி அனுப்புகிறது குழந்தை.

அனைத்தையும் அழகாகப்பார்க்கும் குழந்தைகளிடம் பெரியவர்கள் தானே பேதங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.

குழந்தைகளின் விரல்களால்

வரையப்படும்போது

பூக்கூடையும் மீன்கூடையும்

ஒரே மணத்தைப் பெற்று விடுகிறது.

 

குழந்தைகளின் விளையாட்டில் பொம்மைகளும் ஒன்று தான் சோப்பும் ஒன்று தான். பொம்மைகளைக் குளிப்பாட்டுவதைப் போலச் சோப்பையும் குளிப்பாட்டுகிறார்கள். சோப்பு கரையக் கரைய அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இத்தகைய அவதானிப்புகளைக் கண்டடைய முடியும்.

குளியல் சோப்புகளைக்

குளிப்பாட்டி

குளிப்பாட்டி

மகிழ்ச்சியில்

கரைந்து போகின்றன

குழந்தைகள்.

 

எப்போதுமே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இல்லாமையை அவர்கள் வார்த்தைகளால், செயல்களால், பாவனைகளால் மாற்றி இருப்பதாக நினைக்கிறார்கள். தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் இருப்பதை நினைத்து திருப்தியடைகிறார்கள்.

குருவிக்கூட்டை

குருவி வீடு என்றும்

எலிப்பொந்தை

எலி வீடு என்றும்

சிங்கக்குகையை

சிங்கவீடு என்றும்

எறும்புப்புற்றை

எறும்பு வீடு என்றும்

சொல்லி மகிழ்கின்றன

தெருவோரம் படுத்துறங்கும்

திக்கற்ற குழந்தைகள்.

 

இந்த உலகினைப் படைக்கும் வல்லமை மிக்கதாய் கடவுளைக் கற்பனை செய்த மனிதன் இத்தனை கடவுள்களையும் மதங்களையும் படைத்திருக்கிறான். ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது தெரியுமா?

அம்மாவின் இடுப்பில்

இருக்கும் குழந்தை

பல்லக்கில் வலம் வரும்

தெய்வங்களைப்

பெரிது படுத்துவதே

இல்லை.

 

உண்மையான தெய்வம் அருகில் இருக்கும்போது எதற்காக பொம்மைகளை வணங்க வேண்டும்?

வெறுப்பு, பகை, விரோதம், குரோதம், மனமாச்சரியங்களைப் போற்றிப்பாதுகாப்பது பெரியவர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒரே கணத்தில் வெறுப்பின் இடத்தில் அன்பை கொண்டு வந்து வைப்பார்கள். பகையை நேசமாக மாற்றி விடுவார்கள். காய் விடும்போதே பழத்துக்கான விரல்களையும் சேர்த்தே வைத்திருப்பார்கள்.

பேய்களின் கொம்புகளை

எரேசர் கொண்டு

அழித்து விட்டு

பென்சில்களால்

இறக்கைகள் வரைந்து

பேய்களை

தேவதைகளாக்கி விடுகின்றன

குழந்தைகள்

மிகச்சுலபமாக.

 

என்று எழுதும் கவிஞரின் மனது குழந்தையின் மனது தானே. அதனால் இத்தனை அழகாகக் கவிதைகளை எழுத முடிகிறது.

குழந்தையைத் தூங்க வைத்து விட்டு

எப்போதும்போல்

விழித்திருக்கிரது நிலவு

இயற்கையும் கூட தாய்மையின் குணங்களைக் கொண்டிருப்பதாக அதுவும் குழந்தைகளின் பார்வையில் சொல்லும் போது கூடுதல் அழகு பெறுகிறது.

இப்படி அனிச்சம் தொகுப்பு முழுவதும் புதிய தரிசனங்கள், கண்டடைதல்கள் உணர்வுகள், காட்சிகள், படிமங்கள் நிறைந்திருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல சின்னஞ்சிறு கவிதைகள் குழந்தைகளைப் பற்றிய நம்முடைய புரிதல்களை மேன்மையுறச் செய்கின்றன.

இன்னும் நிறைய எழுதுங்கள். 

குழந்தைகளின் மெசையாவாக இந்த உலகத்துக்கு நிறையச் சொல்லுங்கள்


( அனிச்சம்பூ நூலுக்கு எழுதிய முன்னுரை )


 

 

No comments:

Post a Comment