மெகர்பா கோழியின் கதை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு முறை மெகர்பா கோழி கதைப்பாட்டியிடம் பிடிவாதம் பிடித்தது. ஊர் சுற்றிப் பார்க்கப் போக வேண்டும் என்று சொல்லியது.
“ மற்ற பறவைகளைப் போல என்னால்
பறக்கமுடியாது.. அதனால் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்
கல்யாணிப்பசுவும் கதைப்பாட்டியும் கூட வரவேண்டும்.. நான் எப்போதும் முட்டைகள்
கொடுக்கிறேன்..இல்லையா? எனக்காக இதைச் செய்யக்கூடாதா? “
சின்னு சொன்னாள்,
“
ஐய்யோ நான் ஸ்கூலுக்குப் போகணும்..”
பூனைக்குட்டி சொன்னது,
” நான் வந்தால் ஆல்பெர்ட்டினுடைய சட்டையை
எலி கரும்பித் தின்று விடுமே..” என்று பூனைக்குட்டி சொன்னது.
“ அப்படியென்றால் ஆல்பெர்ட்டும் கூட
வரட்டும்..” என்றது கோழி.
“ ஐய்யோ ஆடுகளைக் நீலகண்டன் குள்ளநரி
கொன்று விடுமே? “ என்றான் ஆல்பெர்ட்.
கல்யாணிப்பசு சொன்னது,
“ நான் வந்தால் இந்தக் கிராமத்தில் உள்ள
குழந்தைகளுக்கு யார் பால் கொடுப்பார்கள்? தண்ணீர் சேர்த்தாலும் கூட யாரும்
வேண்டாம் என்று சொல்வதில்லை..”
அதைக் கேட்ட கோழி, தரையில் விழுந்து
புரண்டது.
“ க்கொக்கோ கொக்க்கோ “ என்று கூப்பாடு
போட்டது.
கடைசியாக கதைப்பாட்டி,
“ நாய்க்குட்டியை அழைத்துக் கொண்டு போ “ என்று சொன்னார்.
அப்படி மெகர்பா கோழியும்
நாய்க்குட்டியும் பயணம் புறப்பட்டார்கள்.
பல ஊர்களைச் சுற்றிப் பார்த்தார்கள். சில
ஊர்களில் மக்கள் சும்மா சுற்றித் திரிகிற கோழியைச் சூப்பு வைத்துக் குடிக்கலாம்
என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
நாய்க்குட்டி அவர்களை விரட்டியடித்தது.
இரவானதும் மெகர்பா உயரமான மரக்கொம்பில் உட்கார்ந்து கொள்ளும்.. நாய்க்குட்டி
மரத்தினடியில் உள்ள பொந்தில் படுத்திருக்கும்.
ஒரு நாள் கோழியைப் பார்த்த ஒரு குள்ளநரி, இரவில்
வந்து சொன்னது,
“ ஏ. அழகியே உன்னுடன் பேச
வேண்டும்..என்று ஆசைப்படுகிறேன்.. கீழே வாயேன்..”
அப்போது மெகர்பா சொன்னது,
“ குள்ளநரி அண்ணே.. நீ மேலே ஏறி வா..கீழே
என்னுடைய பாதுகாவலன் இருக்கிறான்.. தட்டி எழுப்பினால் மேலே வருவதற்கு வழி
சொல்லித்தருவான்..”
குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது.
ஆகா! எப்பேர்ப்பட்ட பேச்சு! என்ன ஒரு அழகு! அதன் இறைச்சி எவ்வளவு ருசியாக
இருக்கும். ஆவல் அதிகமாகி கீழே படுத்துக்
கிடந்த நாய்க்குட்டியை எழுப்பியது.
“ ஏய்.. காவல்காரா! மேலே போவதற்கு வழியைக்
காட்டு..”
நாய்க்குட்டி ஒரே பாய்ச்சலில்
குள்ளநரியின் வாலைக் கடித்துத் துண்டாக்கியது.
அவ்வளவு தான். குள்ளநரி ஓடியே போய்
விட்டது.
அதோடு மெகர்பா கோழியின் ஊர் சுற்றும்
ஆசையும் முடிந்தது. காலை விடிந்ததும் நாய்க்குட்டியுடன் கதைப்பாட்டியிடம் வந்து
சேர்ந்தது.
நன்றி - புக் டே
No comments:
Post a Comment