Saturday, 15 March 2025

விசித்திரனின் கதைகள்


1. விசித்திரனின் கதைகள்

அவனுக்குப் பெயரில்லை. விசித்திரன் என்று எல்லாரும் அழைத்தார்கள். விசித்திரன் ஒரு நாள் கடற்கரைக்குப் போனான். எங்கும் வெள்ளை மணல்வெளி. கைகளில் மணலை அள்ளினான்.

எண்ணத்தொடங்கினான்.

எண்ணி முடித்தானா என்று தெரியவில்லை.

விசித்திரன் ஒரு நாள் ஆற்றுக்குப் போனான். எங்கும் நீர்மை ததும்பிக் கொண்டிருந்தது. அவனும் நீராகி விட வேண்டும் என்று நீருக்குள் மூழ்கினான்.

நீராகி விட்டானா என்று தெரியவில்லை.

விசித்திரன் ஒரு நாள் மலைக்குப் போனான். மலையுச்சியில் பயங்கரக் காற்று. காற்றைக் கையில் பிடித்தான். பறப்பதற்காக மலையுச்சியிலிருந்து குதித்தான்.

பறந்தானா என்று தெரியவில்லை.

விசித்திரன் ஒரு நாள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கூட்டம் கூட்டமாய் மிதந்து கொண்டிருந்த மேகங்கள். மேகங்களாகி விட வேண்டுமென்று நினைத்தான்.

கையை நீட்டி மேகங்களை அழைத்தான்.

மேகமாகி மிதந்தலைந்தான் விசித்திரன்.

 

2.

வீட்டில் யாருமில்லை. இரவு விளக்கையணைத்துவிட்டுப் படுத்தான். திரைச்சீலைக்குப் பின்னால் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பதறியெழுந்து விளக்கைப் போட்டான்.

யாருமில்லை.

விளக்கையணைத்தான். யாரோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். விளக்கைப் போட்டான்.

யாருமில்லை.

விடிய விடிய அந்த யாரோ ஒருவனைக் கண்டுபிடிக்க விளக்கைப் போட்டு அணைத்துக் கொண்டிருந்தான்.

அவன் வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்தது.

3.

அந்த எறும்பு புற்றிலிருந்து வெளியே வந்தது. அங்குமிங்கும் அலைந்தது. அப்படியும் இப்படியும் சென்றது. சுவரில் ஏறியது. கீழே இறங்கியது.

சும்மா ஒரு இடத்தில் நின்றது. ஏன் அங்கே நின்றது? தெரியாது.

திடீரென ஒரு கால்பெருவிரல் அந்த எறும்பை நசுக்கியது.

என்ன நடந்ததென்று எறும்புக்குத் தெரியாது.

யார்? ஏன்? எதற்கு?

எறும்பு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறது.

4.

எதையாவது தேடிக் கொண்டிருப்பது அவனுடைய வழக்கம். இன்றும் அப்படித்தான். அடையாள அட்டையைத் தேடினான்.

பர்சைத் தேடினான். பையைத் தேடினான். சாவியைத் தேடினான். வண்டியைத் தேடினான்.

மனைவியிடம் கேட்கலாமென்று தேடினான். குழந்தைகளைத் தேடினான். வீட்டைத் தேடினான். தெருவைத் தேடினான். ஊரைத் தேடினான். நாட்டைத் தேடினான். உலகத்தைத் தேடத் தொடங்குமுன்பாக அவன் தொலைந்தே போனான்.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment