குழந்தைகளின் வெளி
உதயசங்கர்
குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்
வழியே இந்த பூமிக்கு வந்த இயற்கையின் படைப்புகள். அவர்கள் பெற்றோரின் தனிப்பட்ட சொத்தல்ல
என்று புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையும்
தனித்துவத்துடன் திகழ்கிறார்கள். இயற்கை தன்னுடைய படைப்புகளனைத்துக்கு அத்தகைய தனித்துவமான
குணத்தைக் கொடையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரே மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒன்று
போல இருப்பதில்லையெனும்போது குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்று போல இருப்பார்கள்? அவர்களுடைய
தனித்துவமான ஆளுமையை வளர்ப்பதில் சமூகத்தின் மூன்றுவெளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதலாவது குடும்பவெளி. அப்பா அம்மா
அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா அத்தை சித்தி சித்தப்பா என்று நெருங்கிய உறவு முறைகளைக்
கொண்டது. இந்த உறவுமுறைகள் எல்லாவித உரிமைகளையும் எடுத்துக் கொள்கிற உறவுமுறைகள். குடும்பவெளியென்பது
குழந்தையின் அடிப்படையான உணர்வுநிலைகளைக் கட்டமைக்கக்கூடியது. எப்போதும் மிரட்டப்பட்டும்,
அதட்டப்பட்டும், அடிக்கப்பட்டும் வளர்க்கிற குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையையும் தன்னம்பிக்கையில்லாமலும்
வளர்வார்கள். எதைச் செய்தாலும் ஒரு தயக்கமும் பயமும் வந்து கொண்டேயிருக்கும். எங்கே
குழந்தைகள் எந்தவித அச்சுறுத்தலுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே தான்
அவர்களுடைய படைப்பூக்கம் ( CREATIVITY ) சுதந்திரமாக மலரும். எனவே குடும்பத்தில் அவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களுடைய ஆளுமையும் மகிழ்ச்சியாக வளரும்.
ஏனெனில் ஒவ்வொரு வினையும் அதற்குச்
சமமான எதிர்வினையை உருவாக்கும். அப்படியென்றால் நாம் குழந்தைகளின் மீது செலுத்துகிற
வன்முறையை குழந்தையும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது இந்தச் சமூகத்திடம்
திருப்பிக் கொடுப்பான். அல்லது சமூகத்தில் பயந்து நடுங்கி வாழ்வான். இது மொத்த சமூகத்துக்கே
பொருந்துமென்றாலும் குடும்பம் தான் குழந்தைகளின் முதல்வெளியாக இருப்பதால் குழந்தைகள்
அங்கிருந்தே அடிப்படையான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள்., அந்த அனுபவங்களே அவர்களுடைய
உணர்வுவெளியைத் தீர்மானிக்கின்றவையாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தைகள்
குடும்பத்தைச் சார்ந்தே வாழவேண்டும். குடும்பச்சூழ்நிலைகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்
கொள்ள வேண்டும். தன்னுடைய உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிக்கட்டவோ வேண்டும்.
குடும்பம் என்பது குழந்தைகளின் ஆளுமைக்கான அடிக்கட்டுமானமாக இருக்கிறதென்பதைப் பெற்றோர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகப் பள்ளிக்கூடவெளி.
நம்முடைய கல்விமுறைகளில் எத்தனையோ
மாற்றங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகள் முழுமையான மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வதில்லை.
ஏன் என்பதை யோசிக்க வேண்டும்? கற்றல் என்பது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கணமும்
செய்து கொண்டேயிருக்கிற செயல்முறை தான். அது உயிரின் இயல்பு. தன்னைத் தகவமைத்துக் கொள்ள
இயற்கை உயிர்களுக்குக் கொடுத்திருக்கிற கொடையென்று கூடச் சொல்லலாம்.
ஆனால் கற்றல் முறை தன்னார்வத்துடனும்,
மகிழ்ச்சியாகவும் நிகழும் போது கற்றலின் வழியே குழந்தைகள் புதிதாக இந்த உலகத்தைப் பார்ப்பார்கள்.
புதிய சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழும். ஆனால் அப்படியான சூழல் இந்தியக் கல்விக்கூடங்களில்
இல்லை. அதிகாரமும் அடக்குமுறைகளும் நிறைந்ததாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இன்னமும்
கூட பள்ளிகளில் பிரம்புகள் குழந்தைகளை அடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நேரடியாகவும்
மறைமுகமாகவும் அடித்தால் தான் ஒழுங்காகப் படிப்பார்களென்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
எனவே தான் குடும்பத்துக்கடுத்தபடியாக அதிகாரமிக்கதாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
இந்த அதிகாரமும் அடக்குமுறையும் குழந்தைகளின் ஆன்மாவை ஒடுக்கி அவர்களை சுயமரியாதை இல்லாதவர்களாக்குகிறது.
நம்முடைய கல்விமுறையில் பெரும்
மாற்றம் நிகழவேண்டும். குழந்தைகளின் கற்றல்வெளியென்பது பல்வகைப்பூக்கள் பூக்கும் பூந்தோட்டமாக
இருக்கவேண்டும். எல்லாக்குழந்தைகளையும் ஒரே மாதிரி ஜெராக்ஸ் பிரதிகளைப் போல உருவாக்காமல்
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமையுள்ளவர்களென்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற
கல்விமுறைகளைக் கொண்டு வரவேண்டும். ஏனெனில் நம்முடைய கல்விமுறை ஆரோக்கியமானவர்களைச்
சேர்த்துக் கொண்டு நோயுற்றவர்களை விரட்டிவிடும் மருத்துவமனை போல விசித்திரமானதாக இருக்கிறது.
எந்தக் குழந்தைக்குக் கற்றல்குறைபாடு இருக்கிறதோ அந்தக் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை
தரவேண்டுமென்ற அடிப்படைகளை மறுக்கின்ற கல்விமுறையாக இருப்பதனால் தான் இடைநிற்கும் குழந்தைகள்
அதிகமாகிறார்கள். அவர்கள் சமூகத்தின் உதிரித்தொழிலாளிகளாகவோ, கலகக்காரர்களாகவோ, சமூகவிரோதிகளாகவோ
மாறுகிறார்கள்.
எனவே நம்முடைய கற்றல்முறை மாறும்போது
குழந்தைகளின் ஆளுமை இன்னும் பிரகாசிக்கும். ஒரு குழந்தையின் ஆளுமையென்பது ஆன்மாவின்
வெளிச்சம். கலவிமுறை அந்த வெளிச்சத்தை அணைத்து விடக்கூடாது.
மூன்றாவது சமூகவெளி
நம்முடைய சமூகத்தில் குரலற்றவர்களாகப்
பெண்களும் குழந்தைகளுமே இருக்கிறார்கள். அவர்களைக்குறித்து கிஞ்சித்தும் அக்கறையின்றியே
தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அடியாத மாடு பணியாது, கறிவேப்பிலையை ஒடித்து
வளர்க்கணும் பிள்ளையை அடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்று
குழந்தைகளுக்கு எதிரான பொதுப்புத்தியுடன் தான் இன்னமும் இருக்கிறது. பொதுவெளியில் குழந்தைகளைச்
சமூகம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. தங்களை விட சிறியவர்களை அரவணைப்பதில்லை.
மதிப்பதில்லை. பள்ளிக்குழந்தைகள் சாலைகளைக் கடக்கக் காத்திருப்பதைப் பார்க்கும் போதும்
அவர்களைப் பற்றிக் கவலையே படாமல் அவசர அவசரமாகச் செல்கிற இந்த சமூகம் குறித்து குழந்தைக்கு
என்ன விதமான பார்வை வருமென்று யோசிப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ
கடந்து செல்கிறது. போட்டிகளை உருவாக்கி தோல்வியாளர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது. போட்டிகள் தனித்துவத்தை மறுப்பவை. வெற்றியாளர்களை
மட்டுமே கொண்டாடுபவை. எதற்கும் லாயக்கற்றவன் என்று குழந்தைகள் தங்களைத் தாங்களே அவமானப்படுத்த
உருவாக்கப்பட்ட சதியென்று கூடச் சொல்லலாம்.
சமவாய்ப்புகளையும் சமத்துவத்தையும்
குழந்தைகளுக்குத் தருகிற சமூகத்தில் மட்டுமே குழந்தைகளின் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும்.
இந்த வாழ்க்கை ஒரு பயணம். போட்டியல்ல. இந்தப்பயணத்தில் மனிதர்கள் வாழும்காலம் வரை ஒருவருக்கொருவர்
அன்பு செய்தும் உதவி செய்தும் சமூக மனிதர்களாக வாழவேண்டுமென்றால் குழந்தைகளின் மூன்று
வெளிகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
எந்தச் சமூகத்தில் குழந்தைகள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த சமூகமே மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அப்படிப்பட்ட
சமூகமாக நம்முடைய சமூகமும் மாற குழந்தைகளைக் குறித்தும் அவர்களது உரிமைகள் குறித்தும் ஆழமான விவாதங்களும் உரையாடல்களும்
நடக்கவேண்டும்.
.
No comments:
Post a Comment