Monday, 3 March 2025

வண்ண வண்ணக்கதைகள் சிறகடிக்கும் வானம்.

 

வண்ண வண்ணக்கதைகள் சிறகடிக்கும் வானம்.

உதயசங்கர்



சிறார் இலக்கியம் இலக்கிய வானில் சிறகுகள் விரித்து பறக்கத் தொடங்கியிருக்கிற காலமிது. இதுவரை சொல்லப்பட கதைகளையே மறுபிரதியோ, மலிவான பிரதியோ எடுத்து இதுதான் சிறார் இலக்கியம் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்த காலத்தில் புதிய காற்றென பல எழுத்தாளர்கள் புதிய கதைகளை எழுத வந்தார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளுக்குச் சொந்தக்காரர் ஞா.கலையரசி. தன்னுடைய தனித்துவமான கதைகளால் சிறார்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.

அவருடைய சூரியனைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதை சமகாலச் சூழலியலைப் பேசுகின்றன. பழங்காலக் கதையை சமகாலத்துக்கேற்ப மறுவாசிப்பு செய்து அவசியமான வழிகாட்டுதலைச் செய்கின்றன. எது அழகு? எது உயர்வு? என்பதைக் குறித்து விவாதிக்கின்றன. உருவத்தில் சிறியதாயினும் செய்யும் காரியத்தில் பெரியதாவதைக் குறித்துப் பேசுகின்றன. தனக்குக் கிடைத்த சிறப்பை மற்றவர்களுக்கும் பகிர்வதைப் பற்றிப் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதீதபுனைவையும் சமகால அறிவியலையும்  இணைத்துப் பேசுகின்றன. கானுயிர் நலன் குறித்து, வலசை வரும் பறவைகளின் சரணாலயம் அழிவதைக் குறித்துப் பேசுகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் வானவில்லின் வண்ணங்களைப் போல குழந்தைகளின் மனதில் பல உணர்வுகளைத் தூண்டும். அவை ஆனந்தம் தரும். அறிவூட்டும். ஆற்றுப்படுத்தும். நம்பிக்கையளிக்கும். குதூகலப்படுத்தும்.

மனிதகுலத்திற்கு குழந்தைகளின் மகிழ்ச்சியைத் தவிர வேறு என்ன வேண்டும்?

இந்தக் கதைகள் குழந்தைகளிடம் மகிழ்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துமென்று சொல்லி முடிக்கலாம்.

( சூரியனைத்தேடி சிறார் நூலுக்கு எழுதிய முன்னுரை )

No comments:

Post a Comment