விலக்குதல் தீட்டு, தீண்டாமை, …… வீட்டிலும் நாட்டிலும்
உதயசங்கர்
உங்களுக்குத்
தெரியுமா? தீண்டாமை ஒரு கொடிய பாவச்செயல் என்று சிறுவயதில் பள்ளிக்கூடப் பாடப்புத்தகம்
தொடங்கி அனைத்து அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள். அதை எல்லாம் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும்
கேட்கிறார்கள். வாசிக்கிறார்கள். ஆனாலும் தீண்டாமைக்கு அடிப்படையாக இருக்கும் சாதிப்பிரிவினையை
ஒழிக்க முடியவில்லை. என்ன வாசித்தாலும் பேசினாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் தீண்டாமையை
வீட்டில், வெளியில், ஏன் நமது உடலில் கூடக் கடைப்பிடிக்கிறோம்.
எப்படி
தெரியுமா?
விலக்குதல் அல்லது தீண்டாமை என்பது நாம் தொடக்கூடாது
அல்லது. நம்மைத் தொடக்கூடாது. அதாவது விலக்கி வைத்தல், அல்லது தூரமாக வைத்தல் என்று
அர்த்தத்தில் தான் நடைமுறையில் இருக்கிறது. கொரோனா காலத்தில் நாம் யாரும் யாரையும்
தொடாமலும் தூரமாகவும் இருந்தோம். அப்போது அது தீண்டாமை என்றோ விலக்கி வைத்து விட்டார்கள்
என்றோ யாரும் சொல்லவில்லை இல்லையா? ஏனெனில் கொரோனா சமூகத்தில் ஏழை, பணக்காரன், விவசாயி,
தொழிலாளி, நல்லவன், கெட்டவன், ஆண், பெண், குழந்தை, எந்த வேறுபாடும் இல்லாமல் உலகம்
முழுவதும் பரவிய தொற்றுநோய். அந்த நோயைப் பொறுத்தவரை அப்படி தொடாமலும் தூரமாகவும் இருந்தால்
மட்டும் தான் நாம் உயிரோடு இருக்கமுடியும் என்பதை சமூகம் உணர்ந்து கொண்டது. அந்த அறிவியல்
உண்மையைக் கடைப்பிடித்தது.
அதே போல
விலக்குதலை மிகச் சாதாரணமாக, எனக்குக் கத்தரிக்காய்
பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, கோழிக்கறி பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை
வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும். அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது. பச்சை
நிறம் பிடிக்காது. என்று பொதுவாக விலக்கி வைக்கிறோம். சில சமயங்களில் இது தற்காலிகமான
நடைமுறையாகவும் இருக்கிறது. அதாவது நோய்க்கு வைத்தியம் பார்க்கும்போது உணவுப்பத்தியம்
இருக்கச் சொல்வார்கள் மருத்துவர்கள். நோய் குணமாகும்வரை இதை இதைச் சாப்பிடாதீர்கள்.
இதை இதைச் சாப்பிடுங்கள் என்று. அது அவசியமானதாக இருக்கும். இதை நம்மால் புரிந்து கொள்ள
முடிகிறது.
ஆனால்
இத்தகைய விலக்குதல் சமூகத்தில் வரும்போது, ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம்
என்று மாறுகிறது... அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கம் இவை எல்லாம்
ஒரு ஊர் அல்லது சாதி அல்லது மதத்தின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக
அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்தின் அதிகாரச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி
நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்திலிருந்து விலக்கப்படும்.
ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும்
அந்த ஊர் அல்லது சாதி அல்லது மதத்தில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு.
அந்த
ஊர் அல்லது சாதி அல்லது மதத்தின் அதிகாரச்சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச்
செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல்.
விலக்கம் என்பது சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது.
இதையும்
தீண்டாமை என்று சொல்லலாம். ஆனால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான
நடைமுறையும் இருக்கிறது. இத்தகைய நடைமுறைகள் நம்முடைய சட்டங்களின் படியோ, நீதிமன்ற
தீர்ப்புகள் வழியாகவோ நடப்பதில்லை. கட்டப்பஞ்சாயத்து என்ற நடைமுறையின் வழியாக நடக்கின்றன.
இதை மக்களும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதனால் தான் சாதாரண மக்களே,
“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை
சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா?”
என்று சொல்வதைப் பார்க்க முடிகிறது. இதற்குள்
ஒளிந்திருக்கும் தீண்டாமையின் தற்காலிக வடிவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விலக்குதல்,
தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத்
தோன்றினாலும் அடிப்படையில் ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு
வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக்
கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான்.
ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத்
தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட
எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.
அடுத்ததாக தீட்டு என்ற சொல்லப்படுகிற நடைமுறை.
“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”
“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”
என்று சொல்வதை எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது.
மனிதனின்
பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து
வந்திருக்கிறார்கள்.
குழந்தை
பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க
‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும்
குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது
வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள்.
ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.
பெண்
பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, வெளியுலகிலிருந்து
விலக்கி வைப்பது நடக்கிறது. தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற
சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக்
கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை
மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் பெண்களைப் பொறுத்தவரை அந்தத்
தற்காலிகத்தீண்டாமை ஒவ்வொரு மாதமும் தொடர்கிறது என்பது பெரிய கொடுமை.. ஒவ்வொரு மாதமும்
மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ
கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள்.
அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய்
நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது
நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணங்களால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது
) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.
இறப்பு
வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும்
தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும்,
வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத்
தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை
தான்.
மேலே
குறிப்பிட்ட தீட்டு குறித்த நிகழ்வுகளில் பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால்
தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத்
தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக்
குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பிறகு குளித்து மற்றவர்களைத் தீண்ட
முடியும். ஆனால் மற்றவர்களுக்கு சடங்கு தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்டவர் குளித்தால்
தீட்டு கழிந்து விடும்.
. தீட்டு
நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே
குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.
இப்படிச்
சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள்,
, சில வைதீகச் சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள்.
இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று
மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும்
நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பார்ப்பனியம் தீண்டாமை என்ற வருணாசிரம தர்மத்தின்
இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. அதாவது தீட்டு நிகழ்வு நடந்த வீடும் மனிதர்களும்
அசுத்தமானவர்கள். எனவே அவர்களைத் தொடக்கூடாது. தொட்டால் சுத்தப்படுத்திக் கொள்ள குளிக்க
வேண்டும். சுத்தம் அசுத்தம் என்ற அடிப்படையிலேயே தீட்டு பார்க்கப்படுகிறது.
நிரந்தரமாக
அசுத்தமான வேலைகளைப் பார்க்கும் மனிதர்களை நிரந்தரமாகத் தீட்டானவர்கள். எனவே அவர்களைத்
தீண்டுதல் பாவம் என்று பார்ப்பனியம் மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறது. அதை சடங்குகள்
மூலம் நம்மையே செய்ய வைக்கிறது. சரி தான் என்று ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது
அனைத்து
உடல் உழைப்புகளையும் அசுத்தமான வேலைகளாக, தீட்டாக, தீண்டத்தகாததாக மனுதர்மத்தில் சொல்லப்
பட்டிருக்கிறது.
இது தான்
தீண்டாமையின் உளவியல் என்று சொல்லலாம்.
ஒரே நேரத்தில்
வர்க்கமுரண்பாடும், தீண்டாமையும் சாதியப்படிநிலையின் தத்துவார்த்தமாக செயல் படுகிறது.
ஆனால் வர்க்க முரண்பாடு அதன் உடலாக இருக்கிறதென்றால் தீண்டாமை அதன் உயிராக இருக்கிறது. அதனால் தான் சமூகத்தின் படிநிலையில் ஒவ்வொரு சாதியும்
வர்ணமும் மற்ற சாதிகளைத் தீண்டத் தகாதவர்களாகவே கருதுகிறார்கள்.
. தன்னை
சமூகத்தில் உயர்ந்தவராகக் காண்பித்துக் கொள்ள, மற்றவர்களுக்கும் தனக்கும் இடைவெளியை
ஏற்படுத்த பார்ப்பனியம் தீண்டாமை என்ற தத்துவத்தை உருவாக்கியது. அதை தீட்டு, சடங்குகளின்
மூலம் நடைமுறைப்படுத்தியது. அதற்காகவே மனுதர்மம் எழுதப்பட்டது. அதில் சாதியப்படி நிலைகளையும்,
தீண்டாமையையும் உறுதிப்படுத்தியது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடும் சட்டவிதிகளும் தண்டனை முறைகளும் எழுதப்பட்டன. அவற்றை
அரசு அதிகாரத்தின் வழியாகவும், புராண இதிகாச, புனைகதைகள் வழியாகவும் மக்கள் மனதில்
நிலைநிறுத்தியது..
அது மட்டுமல்ல
தங்களுக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை. ஆனால் தங்களுக்குக் கீழ் ஒருவராவது
இருக்கவேண்டுமென்கிற ஆதிக்கமனநிலையையும் மக்களிடம் பரப்பியது. இதன் விளைவு சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம், என்ற
பார்ப்பனியத் தந்திரங்களை பண்பாடு என்று புரிந்து கொண்டு பண்பாட்டைக் காக்கிறோம் என்ற
பெயரில் மீண்டும் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுகிற, தீண்டாமையைக் காப்பாற்றுகிற
காரியத்தை உழைப்பாளி மக்களும் சேர்ந்து செய்கிற அவலம் கண்கூடாகத் தெரிகிறது.
நடைமுறையில்
எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால்
தீண்டாமை என்ற கருத்தியலை இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம்,
சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் ஜனநாயக முற்போக்கு
எண்ணம் கொண்ட எல்லோரும் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத
யுத்தம் தொடுக்க வேண்டிய கடமை எல்லாருக்கும் இருக்கிறது.
அறிவியல் பூர்வமான சனநாயக, பண்பாட்டு நடைமுறைகளை உருவாக்கவும் அதை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லவும் வேண்டும்.
நன்றி - அணையாவெண்மணி காலாண்டிதழ்
No comments:
Post a Comment