சூசனாவுக்கு என்ன நடந்தது?
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் சின்னு நாய்க்குட்டிக்கும் நாய்க்குட்டி பூனைக்குட்டிக்கும் பூனைக்குட்டி காக்காவுக்கும் காக்கா கல்யாணிப்பசுவுக்கும் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது,
“ கதைப்பாட்டி! கதைப்பாட்டி! ” என்று அழைத்தபடி
சூசனா என்ற ஆட்டுக்குட்டி ஓடி வந்தது. நல்ல உச்சிப்பொழுது. கதைப்பாட்டி துள்ளி
எழுந்தார்.
“ என்னாச்சு சூசனா..” என்று கதைப்பாட்டி
பரபரப்புடன் கேட்டார். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும் சூசனாவைச்
சுற்றி நின்றார்கள். சூசனா மூச்சிரைத்தபடி,
“ நான் சிங்கத்தின் வாயிலிருந்து
கஷ்டப்பட்டு தப்பித்து வருகிறேன்..”
என்றது.
“” நீ எப்படி சிங்கத்தின் வாயில் போய்
விழப்போனே? “ என்று பூனைக்குட்டி கேட்டது.
“ நானாய் போய் விழலை.. ஆல்பெர்ட் எல்லா
ஆடுகளையும் ஆற்றங்கரையில் மேய்ப்பதற்காகக் கொண்டு போனான்.. நான் ஆற்றில் தவறி
விழுந்து விட்டேன்.. ஆல்பெர்ட் கவனிக்கவில்லை..”
“ பிறகு? “ கசுமலா காக்காவுக்குப்
பரபரப்பை அடக்கமுடியவில்லை.
“ முதலில் மூழ்கி எழுந்தபோது ஒரு உழக்கு
கிடைத்தது.. இரண்டாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு தொரட்டி கிடைத்தது. மூன்றாவது
தடவை மூழ்கி எழுந்த போது ஒரு கொட்டு கிடைத்தது. நான்காவது தடவை மூழ்கி எழுந்தபோது
ஒரு நீர்க்கோழி கிடைத்தது.
அப்படியே ஆற்றின் அக்கரைக்குப் போய்
விட்டேன். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் ஒரு குகைக்குள் போய் விட்டேன்.
குளிரைப் போக்குவதற்காக தீ மூட்டிக் காய்ந்து கொண்டிருக்கும் போது வெளியிலிருந்து
ஒரு சத்தம்.
“ உள்ளே யாரு? “
“ அப்புறம் ? “ என்று நாய்க்குட்டி
கேட்டது.
“ யார் வெளியே? ” என்று நானும் கேட்டேன்.
அப்போது சிங்கம் வெளியிலிருந்து
முழங்கியது,
“ நான் சிங்கராஜா..”
நான் சொன்னேன்,
“ அப்படியா.. நான் சூசனா ராணி..”
“ எங்கே உன்னுடைய கையைக் காட்டு..” என்று
சிங்கம் வெளியிலிருந்து கேட்டது. நான் தொரட்டியை நீட்டினேன்.
“ உன் வயிறைக் காட்டு..” என்ரது சிங்கம். நான் கொட்டை வெளியில்
காட்டினேன்.
“ உன் குரலைக் கேட்கட்டும்..” என்றது
சிங்கம். நான் நீர்க்கோழியின் கழுத்தைப் பிடித்து இறுக்கினேன்.
அது “ க்வா க்வா க்வா க்வா..” என்று
அலறியது.
சிங்கம் பயந்து ஒரே ஓட்டமாய் ஓடி
விட்டது. நான் அந்த நேரத்தில் ஆற்றின் இக்கரைக்கு நீந்தி வந்தேன். மூச்சிரைத்துக்
கொண்ட சூசனாவை சின்னு கட்டிப்பிடித்தாள். நாய்க்குட்டி சின்னுவைக் கட்டிப்பிடித்தது.
நாய்க்குட்டியை பூனைக்குட்டி கட்டிப்பிடித்தது.
பிறகு எல்லாரும் வட்டமாக நின்று ரிங்கா
ரிங்கா ரோசஸ் பாடி விளையாடினார்கள்.
நன்றி - புக் டே
No comments:
Post a Comment