புதிய வானம்! புதிய
பறவைகள்!
உதயசங்கர்
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்
ஒரு புதிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது. சிறார் இலக்கியத்தின் வகைமைகளான
பெரியவர்கள் சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களே சிறார்களுக்காக எழுதுகிற
இலக்கியம், சிறார்களை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதுகிற இலக்கியம் என்று பொதுவாகப்
பிரிக்கலாம். அதில் குழந்தைகளே குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியிருக்கும் மிகச் சிறப்பான
காலமிது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. குழந்தைகள் ஒரு புதிய வானத்தை
வரைந்து புதிய சிறகுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் உச்சி முகர்ந்து
நம்முடைய குழந்தைகளைப் பாராட்ட வேண்டும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை குழந்தைகளுக்கென்று முகிழ் என்ற அமைப்பை உருவாக்கி
அதில் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தைகளே பங்கு பெறும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகள் இப்போது ஜில் ஜங் ஜக் என்ற கதைத்தொகுப்புடன்
தங்கள் சிறகுகளை விரித்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் கற்பனைக்கு நம்முடைய
நடைமுறை வாழ்வின் தர்க்கம் கிடையாது. கவித்துவத்தர்க்கம் மட்டுமே உண்டு. கவித்துவத்
தர்க்கமென்றால் மண்ணும் மரமும் டி வி. யும் பிரிட்ஜும் நாயும் நரியும் குருவியும் கோழியும்
பேசும். பாடும். ஆடும். ஓடும். காரணகாரியம் கிடையாது. கதை எப்போது தொடங்கி எப்போது
முடியுமென்று யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும்
முடியலாம்.
சுயமான கருத்துகளோ சிந்தனைகளோ உருவாகாத குழந்தைப்பருவத்தில்
அவர்கள் எப்படி கதை எழுதுவார்கள்? பெரியவர்கள் எழுதுவதைப் போல ஒரு கருத்தை வலியுறுத்தியா?
அறநெறியைச் சொல்லியா? நீதி நன்னெறிக்கதைகளையா? அவர்கள் வாசித்ததை, கண்டதை, கேட்டதை,
கற்பனையை, அந்தக் கணநேரத்தில் தோன்றுவதைக் கதையாக்குகிறார்கள். கதை என்று கூட அவர்களுக்குத்
தெரியாது. உண்மையில் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள்.
அப்படி வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி தான் அவர்களுடைய
கலையின் சாராம்சம். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கதைகளுக்குள் கருத்தைத்
திணிக்கவோ தேடவோ கூடாது. ஆனால் நுட்பமாக வாசிப்பவர்களுக்கு குழந்தைகள் ஏதோ ஒரு வகையில்
யதார்த்த உலகத்தைத் தங்கள் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணர முடியும்.
அப்படித்தான் ” ஜில் ஜங் ஜக்
“ தொகுப்பிலுள்ள 22 கதைகளிலும் குழந்தைகலின் தங்களுடைய படைப்பூக்கத்தை மிகச்சிறப்பாக
வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் சுதந்திரமான அவர்களுடைய புனைவுத்திறனின்
தெறிப்புகளாக மின்னுகின்றன.
இளநிலாவின் மரப்பாச்சி கதையில்
பகையை மன்னிக்கச் சொல்லும் மரப்பாச்சிப்பொம்மை வருகிறது. பட்டாசு வெடிக்காத தீபாவளியைக்
கொண்டாடச் சொல்கிறார் தன்னுடைய கதையான ராமு கொண்டாடிய தீபாவளி கதையில் தீரன். ஜடை பறக்குமா?
பறக்குமென்கிறார் சுபவர்ஷனி. அதே போல சிவப்புக்கரடி பொம்மை பேசும்போது என்ன நடக்கிறதென்றும்
சொல்கிறார் சுபவர்ஷனி.
குட்டைநிலா, பந்தாடு, பந்தாடு.
சமையலறையில் மாயப்பெட்டி, தொட்டால் சிவக்கும் என்று நான்கு கதைகளையும் நான்குவிதமாக
எழுதிப்பார்த்திருக்கிறார் பிரணவ். நிவேதிதாவின் நண்பர்களான சிட்டுக்குருவியும் எழிலும்
கதை நட்பைச் சொல்கிறது. அபியும் புலியும் கதையில் அபி புலியிடமிருந்து எப்படித் தப்பிக்கிறான்
என்றும் ஒரு மரம் ஒரு நபர் கதையில் மரத்தின் முக்கியத்துவதை எளிய நிகழ்வின் வழியே சொல்கிறார்
அக்ஷலீணா.
பூங்காவில் நிலா என்றவுடன் நாம்
நினைப்பதற்கு மாறாக யார் அந்த நிலா என்று சொல்கிறார் ரித்விக். அத்துடன் உண்டிகோல்
சிறுவன் கதையில் எல்லாவற்றையும் பகிர்ந்து சாப்பிட வேண்டுமென்றும் சொல்கிறார் ரித்விக்.
விங்குகளைக் காப்பாற்றும் சகோதரர்களைப் பற்றி குணதீப் எழுதுகிறார். ஜில் ஜங் ஜக் கதையில்
மூன்று நண்பர்களைப்பற்றியும் எதையும் செய்யாமல் சாப்பிடுவதற்கு ஆசைப்படும் நண்பனைப்
பற்றியும் சொல்கிறார் கீர்த்தனா. வானவில்லின் கதையில் எப்படி வானவில்லுக்கு இத்தனை
நிறங்கள் ஒன்றாய் சேர்ந்தன என்று சொல்லும் கீர்த்தனா. டியானும் கியானும் கதையில் அவர்களுடைய
நண்பனான பூபாவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடினார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.
யானைக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கதையில் நண்பர்கள் சேர்ந்து எப்படி யானைக்குச் சர்ப்ரைஸ்
கொடுத்தார்களென்றும் உருளைக்கிழங்கும் முருங்கைக்காயும் கதையில் காய்கறிகள் மட்டுமே
வாழும் உலகத்தைப் பற்ரியும் எழுதியிருக்கிறார் கீர்த்தனா. சாய் பாக்கியவாவின் சிறு
காட்டு நண்பர்கள் கதையில், யானையின் அட்டகாசத்தை சிறுவிலங்குகள் எப்படி அடக்குகின்றன
என்று எழுதியிருக்கிறார். ரோஸ் டீ கதையில் அனு எப்படி ரோஸ் டீ போட்டாள் என்றும் டீக்கடையே
வைத்து நடத்துமளவுக்கு எப்படி மாற்றம் நிகழ்ந்ததென்றும் சொல்கிறார்.
எல்லாக்கதைகளிலும் உள்ள மிக முக்கியமான
அம்சமாகக் கருதுவது, குழந்தைமையின் கற்பனை சிறகுகள் விரித்து ஒரு புதிய இதுவரை யாரும்
யோசித்திராத ஒரு உலகத்தை நமக்குக் காட்டுகின்றன. அந்த உலகத்தைக் கண்டு களிப்பதும் முக்கியம்.
அதை விட முக்கியம் குழந்தைகளின் படைப்பூக்கத்தின் உயிர்த்துடிப்புகளை உணர்வது என்று
நினைக்கிறேன். இந்தக் கதைகள் குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் நம்முடைய அறிவை இன்னும்
விரிவடையச் செய்து மேலும் உயர்வாக்கும் என்று நம்புகிறேன்.
. கதைகளை எழுதியுள்ள அத்தனை குழந்தைகளுக்கும்
என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
கதைகளுக்கு மிகச்சிறப்பாகப் படங்களை
வரைந்திருக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்!
புதிய வானத்தில் புதிய பறவைகளின்
பயணம் தொடங்கிவிட்டது. இன்னும் இன்னும் உயரத்திற்குச் செல்லட்டும்.!
( ஜில் ஜங் ஜக் நூலுக்கு எழுதிய முன்னுரை )
No comments:
Post a Comment