Friday, 28 March 2025

கசுமலா காக்காவுக்கும் , பூனைக்குட்டிக்கும் சண்டை

 


கசுமலா காக்காவுக்கும், பூனைக்குட்டிக்கும் சண்டை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

நடுப்பகலில், சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பூனைக்குட்டி கசுமலா காக்காவிடம்,

“ நீ ஏன் இப்படிக் கருப்பாய் இருக்கிறாய்? “

என்று கேட்டது. கசுமலா காக்காவுக்கு சங்கடமாக இருந்தது. முன்பு ஒரு நாளைக்கு நான்கு வேளையும் தேய்த்துக் குளித்தும் பார்த்து விட்டது. காக்கா குளித்தாலும் கொக்காக முடியாது என்று புரிந்து கொண்டது. கசுமலா காக்கா தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் இருந்தது.

பூனைக்குட்டி வெயிலில் உடம்பை நீட்டி படுத்துக் கிடந்தது. தன்னைத் தானே நக்கிக் கொடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டே,

“ நான் எவ்வளவு வெள்ளையாயிருக்கிறேன்னு பார்த்தியா? என்ன காரணம் தெரியுமா? முந்திய பிறவியில் நான் ஒரு இங்கிலீஷ்க்காரியாக இருந்தேன்.. இங்கிலீசில் பேசுவேன்.. இங்கிலீஷிலே கனவு காண்பேன்.. இங்கிலீஷிலே உறங்குவேன்..” என்று சொன்னது.

சின்னுவும், நாய்க்குட்டியும், கசுமலாக்காக்காவும் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ இங்கிலீஷ் என்றால் என்ன மொழி? “ என்று காக்கா கேட்டது. நாய்க்குட்டி,

“ கம் ஹியர், ஸிட், கோ ஔவுட், இதுதான் இங்கிலீஷ்..” என்று சொன்னது.

” ஏ பி சி டி ஒரு பீடி அது தான் இங்கிலீஷ் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்..” என்று சின்னு சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட பூனைக்குட்டி விழுந்து விழுந்து சிரித்தது,

“ இதுவா இங்கிலீஷ்? நான் இங்கிலீஷ்காரியாக இருந்தபோது இங்கிலீஷ் வெள்ளம் மாதிரி கொட்டும்.. அதைக் கேட்டு ராஜாவே என் நாக்கை அறுத்து விட்டார் தெரியுமா? “

“ அப்புறம்..” எல்லாரும் ஒன்றுபோலக் கேட்டனர்.

“ பிறகு நான் கடவுளிடம் வேண்டி வெள்ளைப்பூனையாகப் பிறந்து வந்தேன்..”

என்றது பூனைக்குட்டி. அப்போது கசுமலாக்காக்கா,

“ கா காக்கா கக்கா கா கா “ என்று சிரித்தது.

  என்ன சிரிக்கிறாய்? “ என்று பூனை சந்தேகத்துடன் கேட்டது.

“ உன்னுடைய நாக்கை வெட்டி எறிந்த பிறகும் நீ இவ்வளவு பொய் சொல்கிறாயே.. நாக்கை அறுக்காமல் இருந்திருந்தால் என்னெல்லாம் பொய் சொல்லியிருப்பாய்..”

என்று கசுமலா காக்கா பதில் சொன்னது. அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.

பூனைக்கு அவமானமாகி விட்டது.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment