Monday, 24 March 2025

கோழியும் குள்ளநரியும்

 

 

கோழியும் குள்ளநரியும்

உதயசங்கர்



 

ஒருநாள் காலையில் நீலகண்டன் குள்ளநரி பதுங்கிப் பதுங்கி மெகர்பாவின் கூட்டுக்குப் பக்கத்தில் சென்றது. பிறகு சாதாரணமாகச் சொல்லியது,

“ மெகர்பா.. உன்னுடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்று எனக்கு தீராத ஆசை உணடு.. ஆனால் அந்த பாழாய்ப்போன நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒத்துக்கொள்ளவில்லை. கதைப்பாட்டி என்ற அந்த வயதான கிழவியும் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் பொறாமை. நீ கூட்டைத் திறந்து வெளியில் வா..”

மெகர்பா கோழி பயந்து போய்,

“ க்கொ க்கொ க்கோ க்கொ..” என்று அழத்தொடங்கியது. அப்போது குள்ளநரி, கூட்டின் கதவைத் தட்டியபடியே,

“ஆகா! எத்தனை இனிமையான குரல் உனக்கு மெகர்பா..நீ வெளியில் வா.. நான் உன்னுடைய நண்பன் தானே.. உன்னை காட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்கிறேன்.. இந்த உலகத்தையும் மேல் உலகத்தையும் காட்டுகிறேன்..”

மெகர்பா சத்தமாக, “ க்கொ க்கொ க்கொ க்கொ க்கொ “ என்று அழத் தொடங்கியது.

அழுகையைக் கேட்டு ஓடிப்போன சின்னு குள்ளநரியின் வாலைப் பிடித்து இழுத்தாள். நாய்க்குட்டி பாய்ந்து ஒரு கடி கடித்தது. பூனைக்குட்டி வாலைக்கடித்தபடி தொங்கியது.

நீலகண்டன் குள்ளநரி வேதனை தாங்காமல் சத்தமாய் ஊளையிட்டபடி ஓடிவிட்டது. கிராமத்துமக்கள் எல்லாரும் கற்களை எறிந்துக் கொண்டும், கம்புகளை வீசிக்கொண்டும் பின்னாலேயே ஓடினார்கள். ஓடிய நீலகண்டன் குள்ளநரி ஆற்றின் கரைக்குச் சென்று சேர்ந்தது. 

வேறுவழியில்லாமல் ஆற்றில் குதித்து நீந்தி மறுகரையில் கரையேறியது.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment