Monday, 31 March 2025

எலியும் கல்யாணிப்பசுவும்

 

எலியும் கல்யாணிப்பசுவும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்

ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.

கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!

நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம், நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி கடித்தது.

கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி எழுந்து எலியின் பின்னால் ஓடியது.

எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில் போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப் பார்த்தது.

இந்த சத்தம் கேட்டு சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது. பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.

பசு மறுபடியும் சுவரில் முட்டியது. பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி கிடைத்தது.  வேதனையில் கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது. 

இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து விட்டது.

நன்றி - புக் டே


 

No comments:

Post a Comment