நீலகண்டன் குள்ளநரியின் கதை
உதயசங்கர்
ஒரு நாள் நீலகண்டன் குள்ளநரி நொண்டி நொண்டிக்
கதைப்பாட்டியும், நண்பர்களும் கூடியிருக்கிற ஆலமரத்தடிக்கு பணிவுடன் தலையைக்
குனிந்தபடி வந்தது. அதைப் பார்த்தால் சாதாரணக் குள்ளநரியைப் போல தெரியவில்லை. உடல்
முழுவதும் நீலநிறத்தில் இருந்தது. குள்ளநரியைப் பார்த்தது மெகர்பா கோழி
கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். குள்ளநரி மெகர்பா கோழியின் மீதே கண்
வைத்திருந்தது.
கோழி என்ன ஒரு அழகு!அதைப் பொரித்துச்
சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்!
எப்படியாவது கதைப்பாட்டியையும்
நண்பர்களையும் ஏமாற்றி இன்று மெகர்பா கோழியைக் கொண்டு போய் விடணும். குள்ளநரியின்
மனதில் அதுதான் திட்டம்.
குள்ளநரியைப் பார்த்ததும் நாய்க்குட்டி
கேட்டது,
“ குள்ளநரியே குள்ளநரியே.. இங்கே என்ன
வேலை உனக்கு? “
“ கறுமுறுன்னுச் சாப்பிட்டேன்.. குர்ர்ர்
குர்ர்ர்னு தூங்கணும்..” என்று குள்ளநரி சொன்னது.
பூனைக்குட்டி கேட்டது,
“ என்ன குள்ளநரியண்ணே.. ஒரே நீலநிறத்தில்
இருக்கிறே? “
குள்ளநரி,
“ நேற்று இரவு காட்டில் வனதேவன் என்னை
நீலநிற ஒளியில் முக்கியெடுத்தார். தெய்வத்துக்கு மிகவும் பிடித்த நிறம் நீலநிறம்
தான் என்று சொன்னார்..”
அதைக் கேட்டுக் கொண்டே வாயைத்
திறந்தபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது கல்யாணிப்பசு.
“ அதனால் நான் இன்று முதல் துறவறம்
பூண்டு விட்டேன்..மாமிசத்தைத் தொடக்கூட மாட்டேன்.. ஒரு உயிரையும் மனதாலோ,
வார்த்தையாலோ கூட துன்புறுத்த மாட்டேன்..”
என்றது குள்ளநரி.
“ உண்மையாகவா குள்ளநரியே!” என்று
நாய்க்குட்டி கேட்டது.
“ மெகர்பா கோழி மீது சத்தியம்.. வருகிற
வழியில் என்னுடைய காலில் ஒரு முள்ளு குத்திவிட்டது.. என்னை யாராவது காட்டுக்குக்
கூட்டிக் கொண்டு போகவேண்டும்..”
என்று குள்ளநரி பரிதாபமாய்க் கேட்டது.
“ நான் வர்ரேன்..” என்று கல்யாணிப்பசு
எழுந்தது.
“ ஐய்யய்யோ, பால் கறப்பதற்கு ஆல்பெர்ட்
சார் வரும்போது நீ இல்லையென்றால் பெரிய குழப்பமாகிவிடும்..குழந்தைகள் பால்
குடிக்கவேண்டாமா?”
என்று குள்ளநரி கேட்டது.
“ நான் வர்ரேன் “ என்று பூனைக்குட்டி
சொன்னது.
“ ஐய்யய்யோ.. ஆற்றில் நீந்தணுமே.. உன்னால
முடியாது பூனைச்செல்லம்..”
என்று குள்ளநரி சொன்னது.
“ அப்படியென்றால் நான் வருகிறேன்..”
என்று நாய்க்குட்டி சொன்னது.
“ ஐய்யய்யோ.. உன்னைப் பார்த்தால்
செந்நாய்க்கூட்டம் பாய்ந்து வந்துவிடும்.. வேண்டாம் கண்ணா..”
என்று சொல்லிய குள்ளநரி ஆசையோடு
மெகர்பாவைப் பார்த்தது. மெகர்பா மெல்ல எழுந்து நின்று,
“ அப்படி என்றால் நான் வர்ரேன்..”
என்றது.
குள்ளநரி மகிழ்ச்சியுடன்,
“ அது போதும்.. உன்னை ஆற்றின் அக்கரைக்கு
என் முதுகில் வைத்து நீந்துகிறேன்.. கொஞ்சநாள் அங்கே தங்கியிருந்த பிறகு நானே
உன்னைக் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்..”
என்று சொன்னது.
இவ்வளவும் நடக்கும்போது கதைப்பாட்டி
சொன்னார்,
“ கொஞ்சம் பொறுங்கள்.. செல்லங்களா..
கசுமலா காக்கா வருகிறது. அதுகிட்டேயும் கேட்கலாம்..”
கசுமலா காக்கா மூச்சிரைத்தபடியே,
“ சின்னுவின் அம்மா நீலம் முக்குவதற்காக
கலக்கி வைத்திருந்த தொட்டியில் குளிச்சிட்டு வந்திருக்கு இந்தக் குள்ளநரி..” என்று
சொன்னது.
கதைப்பாட்டி கையிலிருந்த கம்பினால்
குள்ளநரிக்கு ஒரு அடி கொடுத்தாள். குள்ளநரியின் காலில் அடி பட்டது. தாங்கமுடியாத
வலியினால் ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி ஒரே ஓட்டம்.
அப்ப்டி ஓடும்போதே மெகர்பா கோழியைக்
கவ்விக் கொண்டு போய் விடலாம் என்று ஒரு பாய்ச்சல் பாய்ந்தது குள்ளநரி.
அப்போதும் கிடைத்தது ஒரு அடி, கதைப்பாட்டியிடமிருந்து..
நன்றி - புக் டே
No comments:
Post a Comment