Monday, 10 March 2025

குட்டத்தி புறாவின் கதை

 

குட்டத்தி புறாவின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

ஒரு தடவை சின்னுவின் வீட்டில் குட்டத்தி என்ற பெயர் கொண்ட ஒரு புறா வந்து முட்டையிட்டது. எத்தனை முட்டைகள் இட்டன என்று யோசிக்கிறீர்களா? பத்து முட்டைகள். சின்னு முட்டைகளை எடுத்து வீட்டுக்குள் கொண்டு போய் வைத்து விட்டாள். புறா எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. அதை நினைத்து கவலைப்பட்ட புறா போகும்போது கல்யாணிப்ப்பசு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.

“ எங்கே போகிறாய் குட்டத்திப்புறாவே! “ என்று கல்யாணிப்பசு கேட்டது.

“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை வீட்டுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டாள்.. கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் வீட்டு முற்றத்தில் நிற்கும் வாழையை முட்டித் தள்ளி விடு பசுவே..” என்று குட்டத்திப்புறா கேட்டது.

“ அய்யோ என்னால் முடியாது..” என்று கல்யாணிப்பசு தலையாட்டியது. அப்போது ஆடுமேய்க்கும் ஆல்பெர்ட் வந்தான்.

“ அட யாரு இது.. குட்டத்தி புறா தானே.. எங்கே போகிறாய்? “

என்று கேட்டான்.

  நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை வீட்டுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டாள்.. கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் வீட்டு முற்றத்தில் நிற்கும் வாழையை முட்டித் தள்ளி விடாத பசுவை அடிக்க வேண்டும் ஆல்பெர்ட்..”

என்று கேட்டது குட்டத்திப்புறா.

“ அய்யய்யோ எனக்கு முடியாது.. “ என்று சொல்லி ஆல்பெர்ட் ஓடிப்போய் விட்டான். அதன் பிறகு குட்டத்திப்புறா எலியைப் பார்த்தது.

“ எங்கே போகிறாய் குட்டத்திப்புறா..? “

என்று எலி கேட்டது.

 ” நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை ஒளித்து வைத்து விட்டாள்... கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் முற்றத்தில் இருக்கும் வாழையை முட்டித் தள்ளி விடாத கல்யாணிப்பசுவை அடிக்க மாட்டேன் என்று ஆல்பெர்ட்டின் சட்டையை கரும்பிச் சாப்பிட வேண்டும் எலி..”

“ ஏ ஏ நான் அப்படி ஆள் இல்லை..” என்று எலி சொன்னது. அதன்பிறகு பூனையைச் சந்தித்தது.

“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. சின்னு அவற்றை எடுத்துக் கொண்டு போய் விட்டாள்... கேட்டாலும் கெஞ்சினாலும் கொடுக்கவில்லை... சின்னுவின் முற்றத்தில் இருக்கும் வாழையை முட்டித் தள்ளி விடாத கல்யாணிப்பசுவை அடிக்காத ஆல்பெர்ட்டின் சட்டையை கரும்பிச் சாப்பிடாத எலியைப் பிடிக்கலாமா பூனையே! ..”

“ பழைய காலத்தில் என்றால் செய்து விடுவேன்.. இப்போது கதைப்பாட்டியின் முன்னால் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறேன்.. எதுவும் செய்ய முடியாது..”

என்று பூனை சொன்னது. அதன்பிறகு புறா நாய்க்குட்டியைச் சந்தித்தது.

“ நம்முடைய குட்டத்திப்புறா எங்கே போகிறது?  ஏன் முகம் வாடிப்போய் இருக்கிறது? “ என்று நாய்க்குட்டி கேட்டது.

“ நான் சின்னுவின் வீட்டில் பத்து முட்டைகளிட்டேன்.. எல்லா முட்டைகளையும் சின்னு எடுத்துக் கொண்டாள். சின்னுவின் வீட்டு முற்றத்தில் இருக்கும் வாழையை முட்டித் தள்ளாத கல்யாணிப்பசுவை அடிக்காத ஆல்பெர்ட்டின் சட்டையைக் கரும்பித் தின்காத எலியைப் பிடிக்காத பூனையைக் கடிப்பாயா நாய்க்குட்டி? “

என்று குட்டத்திப்புறா கேட்டது.

“ ஏய் பெரிய வெட்கக்கேடு.. நான் இப்போது பெரிய வீட்டில் இருப்பவனாக்கும்.. நான் இதைச் செய்யமாட்டேன்..” என்று கழுத்தை உயர்த்திக் கொண்டு சொன்னது.

குட்டத்திப்புறா சோகத்துடன் போகும்போது ஒரு எறும்பினைப் பார்த்தது. புறா எறும்பிடம் சொன்னது,

“ நான் இட்ட பத்து முட்டைகளை ஒளித்து வைத்த சின்னுவின் வீட்டு முற்றத்தில் வாழை மரத்தை முட்டித்தள்ளாத கல்யாணிப்பசுவை அடிக்காத ஆல்பெர்ட்டின் சட்டையைக் கரும்பித் தின்காத எலியைப் பிடிக்காத பூனையைக் கடிக்காத நாய்க்குட்ட்டியின் வாலில் கடிப்பாயா எறும்பே..”

உடனே எறும்பு சொன்னது,

“ அதுக்கென்ன! குட்டத்தியக்கா.. நான் செய்றேன்..”

எறும்பு நாய்க்குட்டியின் வாலில் கடித்தது. நாய்க்குட்டி பூனையைக் கடித்தது. பூனை எலியைப் பிடிக்க ஓடியது. எலி ஆல்பெர்ட் சட்டையைக் கரும்பித் தின்றது. ஆல்பெர்ட் கல்யாணிப்பசுவுக்கு அடி கொடுத்தான். கல்யாணிப்பசு சின்னு வீட்டு முற்றத்திலிருந்த வாழைமரத்தை முட்டித் தள்ளியது.

 சின்னு பயந்து போய் குட்டத்திப்புறாவின் பத்து முட்டைகளையும் திருப்பிக் கொடுத்தாள்.

நன்றி - புக் டே

No comments:

Post a Comment