Thursday, 9 January 2025

அனைவருக்கும் பொது

 

அனைவருக்கும் பொது

உதயசங்கர்




கோவிலூர் காட்டில் உணவுப்பஞ்சம். இரண்டு வருடங்களாக மழை பெய்யவில்லை. விலங்குகள் எல்லாம் உணவில்லாமலும், தண்ணீர் தாகத்தாலும் தவித்தன. விலங்குகள் சபை கூடியது.

இனி மழைக்காலம் வருவதற்கு மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதனால் இருக்கும் உணவைச் சிக்கனமாகச் சாப்பிடவேண்டும். வீணாக்கக் கூடாது. இன்று முதல் ஒவ்வொரு விலங்குகளுக்கும் இவ்வளவு உணவு என்று தரப்படும். யாராக இருந்தாலும் நேரில் வந்தால் தான் உணவுப்பொருட்களைக் கொடுக்க வேண்டும்

என்று தலைவர் காட்டெருமை சொன்னது. எல்லாரும் சம்மதித்தனர். ரேஷன் பொருட்களைத் தருவதற்கு பின்னி முயலை நியமித்தனர். யார் யாருக்கு எவ்வளவு உணவு என்று பட்டியல் போட்டு பின்னி முயலிடம் கொடுத்தன.

மறுநாள் காலையிலிருந்து உணவுப்பொருட்கள் விநியோகம் தொடங்கியது. எல்லா விலங்குகளும் வரிசையில் வந்து பொருட்களை வாங்கிச் சென்றன.

காட்டு ஆடு வந்தது. அது பின்னிமுயலிடம்,

“ முயலே! என்னுடைய அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை..  கொஞ்சம் உணவுப்பொருளைக் கொடுத்து விடேன்..

என்றது. பின்னி முயலுக்குத் தெரியும் காட்டு ஆட்டின் அம்மாவை போன மாதம் தான் குள்ளநரி அடித்துச் சாப்பிட்டு விட்டது.

பின்னி முயல், “ அம்மாவை அழைத்து வா.. நான் தருகிறேன்..என்று சொல்லி விட்டு அடுத்த விலங்குக்கு உணவைக் கொடுத்தது.

மறுநாள் காட்டு ஆடு வந்தது. அது பின்னி முயலிடம்,

“ முயலே உனக்குன்னு இளம் புற்களை வளர்த்து வருகிறேன்.. என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை.. அதுக்கும் சேர்த்து உணவு கொடுத்து விடேன்..

என்றது. பின்னிமுயலுக்குத் தெரியும் அதனுடைய குட்டி பிறக்கும் போதே இறந்து விட்டது.

“ உன் குட்டியை அழைத்து வா.. உணவு தருகிறேன்.. என்றது. பிறகு வெகு நேரம் காட்டு ஆடு அங்கேயே காத்திருந்தது. எல்லா விலங்குகளும் போனபிறகு,

“ இந்தா என்னுடைய உணவில் கொஞ்சம் உனக்குத் தருகிறேன்.. எனக்கு கூடுதலாக உணவைக் கொடு..

என்று கேட்டது. அதற்கு பின்னி முயல்,

“ எவ்வளவு நெருக்கடியிலும் அனைவருக்குமான பொதுவிதியைக் கடைப்பிடிப்பது தான் நேர்மை.. எப்போது நீ கையூட்டு கொடுக்க நினைத்தாயோ நீ நல்லவன் இல்லை.. ஒழுங்காக ஓடிப் போய் விடு.. “

என்று கம்பீரமாக முழங்கியது. 

காட்டு ஆடு ஓடியே போய் விட்டது.


நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

 

1 comment:

  1. நல்லதொரு கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete