Saturday, 18 January 2025

சிட்டுக்குருவியின் கர்வம்

 

சிட்டுக்குருவியின் கர்வம்

உதயசங்கர்



ஒரு காட்டில் ஒரு சிட்டுக்குருவியும் நத்தையும் நண்பர்களாக இருந்தார்கள். சிட்டுக்குருவி எப்போதும் பறந்து கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் நிற்காது. விசுக் விசுக்கென்று அங்கும் இங்கும் தாவிக்குதித்துக் கொண்டிருந்தது.

நத்தை தன் முதுகில் கூட்டுடன் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு அடி தூரம் நகர்வதற்குள் சிட்டுக்குருவி ஒரு கிலோ மீட்டர் பறந்து போய் விட்டு வந்து விட்டது.

இன்னும் .. நீ இங்கே தான் இருக்கியா..

ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குப் போவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களாகி விடும். சிட்டுக்குருவி பறந்து போய் தான் பார்த்து வந்தக் காட்சிகளை எல்லாம் நத்தையிடம் சொல்லும்.

நத்தை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும்.

“ நான் எவ்வளவு தூரம் போறேன்.. எத்தனை காட்சிகளைப் பார்க்கிறேன்.. பாவம் நீ.. இந்தக் கூட்டைச் சுமந்துகிட்டு அதுக்குள்ளேயே வாழ்ந்துகிட்டு..

என்று சொல்லிய சிட்டுக்குருவி தலையைச் சிலுப்பியது. இறகுகளைக் கோதி விட்டது. நத்தை அமைதியாக இலையைக் கொரித்துக் கொண்டிருந்தது.

“ ஐயோ பாவம்..உனக்கும் என்னை மாதிரி சிறகுகள் இருந்தால்.. நீயும் பறக்கலாம்.. ஆனால் உன் கூட்டையே உன்னால் சுமக்கமுடியல.. பறக்கும் நத்தை நல்லாருக்குல்ல.. ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..

என்று கேலி செய்தது சிட்டுக்குருவி.

“ நண்பா.. இயற்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறது. நான் என் கூட்டுக்குள்ளே என் உலகத்தைப் பார்க்கிறேன்.. மண்ணின் மணம் தெரியும்.. தாவரங்களின் சத்துகள் தெரியும்.. மழை வருவது  தெரியும்.. எதிரிகளின் ஓசை கேட்டால் கூட்டுக்குள் பதுங்கத் தெரியும்…நான் நிதானமாக ஆனால் உறுதியாக முன்னேறுகிறேன்.. எனக்கு எந்த அவசரமும் இல்லை..

என்று பொறுமையாகச் சொன்னது நத்தை. சிட்டுக்குருவி தன்னுடைய கர்வத்தை நினைத்து வெட்கப்பட்டது.

“ மன்னித்து விடு நண்பா..என்று சிட்டுக்குருவி சொன்னது.

 நத்தை,

“ நண்பர்களுக்குள் மன்னிப்பா! ஹா ஹ்ஹா “ என்று சிரித்தது. 

சிட்டுக்குருவியும் சிரிப்பில் சேர்ந்து கொண்டது.


நன்றி - புலிக்குட்டியும் வண்ணத்துப்பூச்சியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்



 

No comments:

Post a Comment