எதையும் நம்பாதே
உதயசங்கர்
வளைக்குள்
மூன்று குட்டி எலிகள் இருந்தன. அம்மா எலி வெளியே இரை தேடிப் போய் இருந்தது. போவதற்கு
முன்னால் ,
“ நான்
வரும்வரை எங்கும் போகக்கூடாது.. “
என்று
சொல்லிவிட்டுப் போனது. மூன்று குட்டி எலிகளும் நல்லபிள்ளைகளாகத் தலையாட்டின. அம்மா
போனபிறகு மூன்று எலிகளும் ஒன்றின் மீது ஒன்று ஏறி விளையாடின. செல்லக்கடி கடித்து விளையாடின.
அம்மா இன்னும் வரவில்லை. போரடித்தது. அண்ணன் எலி,
“ வெளியே
போய் எட்டிப் பார்த்துவிட்டு வந்து விடலாம்.. “ என்று சொன்னது. அதைக்கேட்ட தம்பி எலியும்
தங்கை எலியும்,
“ வேண்டாம்
அண்ணா அம்மா சொன்னதை மறக்கக்கூடாது..”
என்று
கூறின. அப்போது வளைக்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது.
கிலுகிலுகிலு
என்று கிலுக்குச்சத்தம் கேட்டது. விடாமல் தொடர்ந்து கேட்டது. அழகாக இருந்தது. விட்டு
விட்டு ஒரு இசையைப் போலக் கேட்டது.
“ எவ்வளவு
நல்லாருக்கு.. இந்தச் சத்தம்..வாங்க என்னன்னு போய்ப் பார்க்கலாம்..”
அண்ணன் எலி மெல்ல வளையின் வாசலை நோக்கி ஓடியது.
“ போகாதே..
போகாதே.. “ என்று தம்பி குரல் கொடுத்தது. வெளியே ஓடிய அண்ணன் எலி திரும்பி வரவில்லை.
கிலுக்கு சத்தமும் கேட்கவில்லை.
மறுபடியும்
கிலுகிலுகிலு என்று கிலுக்குச்சத்தம் கேட்டது.
இப்போது
தங்கை எலி,
“ வா
அண்ணா.. போய் அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு பாப்போம்..” என்றது.
“ இல்லைம்மா..
வேண்டாம்.. அம்மா வரும் வரை காத்திருப்போம்..”
ஆனால்
தங்கை எலி கேட்கவில்லை. வளையின் வாசலுக்குச் சென்றது. பிறகு திரும்பவில்லை. கிலுக்குச்
சத்தமும் கேட்கவில்லை.
தம்பி
எலிக்குக் கவலையாகி விட்டது.
சிறிது
நேரத்துக்குப் பிறகு மறுபடியும் கிலுக்குச்சத்தம் கேட்டது.
தம்பி
எலிக்குக் குழப்பம். போவதா வேண்டாமா. என்ன வந்தாலும் சரி அம்மா சொன்னபடியே இங்கேயே
இருப்போம் என்று முடிவு செய்தது. அப்போது பின்னாலிருந்து
அம்மா எலியின் குரல் கேட்டது
“ தம்பி
போகாதே..”
“ ஏம்மா..”
“ வாசலில்
ஒரு கிலுக்குப்பாம்பு உட்கார்ந்திருக்கிறது. அவசரப்பட்டு யோசிக்காமல் செய்த வேலையினால்
உன் அண்ணனும் தங்கையும் கிலுக்குப் பாம்பின் வயிற்றுக்குள் போய் விட்டன...”
என்றது
அம்மா எலி. தம்பி எலி வாயடைத்துப் போய் அப்படியே இருந்தது.
இப்போதும்
கிலுக்குச்சத்தம் கேட்டது.
ஆனால்
தம்பி எலி அதைக் கவனிக்க வில்லை.
கதை நன்று. கிலுக்குப் பாம்பு - புதிய சொல் - எனக்கு!
ReplyDelete