இடமாற்றம்
உதயசங்கர்
ஓங்கி உயர்ந்த மலைகள் மடிப்பு மடிப்பாய் விரிந்திருந்தன.
அதன் சிகரங்களில் எப்போதும் மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன.
குட்டி மேகம், பெரிய மேகம், குழந்தை மேகம், தாத்தா மேகம், பாட்டி மேகம், எல்லாம் இருந்தன.
மேகங்கள்
எல்லாம் தினம் ஒரு தடவையாவது அந்த மலைகளைச் சந்திக்காமல் போவதில்லை. அங்கே மலைகளுடன்
பேசி ஓய்வு எடுத்து விட்டுத் தான் மறுபடியும் பயணத்தைத் தொடரும்.
ஓயாமல் பயணம் போகும் மேகங்கள்.
ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம், என்று எல்லா இடங்களையும்
சுற்றி வரும் மேகங்கள் சொல்லும் கதைகளைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும். ஆர்க்டிக், அண்டார்ட்டிக்
குளிர்பிரதேசங்கள், பாலை வனங்கள், அமேசான் காடுகள், கிராமங்கள், நகரங்கள், என்று உலகின்
எல்லா அதிசயங்களையும் பர்த்து விட்டு வரும் மேகங்கள்.
மேகங்கள் சொல்லும் கதைகளைக்
கேட்கும் மலைகளுக்கு ஒரு ஆசை வந்தது. பிறந்ததிலிருந்தே ஒரே இடத்தில் அசையாமல் நின்று
கொண்டிருக்கிறோமே. கொஞ்சம் ஊர் சுற்றிப்பார்த்தால் என்ன? மேகங்களிடம் கேட்டது.
“ என்னையும் உன் கூட ஊர்
சுற்றிப்பார்க்கக் கூட்டிட்டுப் போயேன்..”
மேகங்கள் யோசித்தன. இதுவரை
யாரும் இப்படிக் கேட்டதில்லை. தாத்தா மேகத்திடம் ஆலோசனை கேட்டன. தாத்தா மேகமும் மலைச்சிகரத்தில்
இரண்டு நாட்கள் தங்கி யோசித்தது.
கடைசியில் மேகங்களும் மலைகளும்
சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன. ஒரு நாள் மேகங்கள் மலைகளைப் போல பூமியில் தங்கியிருப்பது,
மலைகள் மேகங்களைப் போல உயரே பறப்பது என்று
முடிவு செய்தார்கள்.
அடுத்த நாள் காலையில் பார்த்தால்
மேகங்கள் தரையில் கூட்டம் கூட்டமாகத் தங்கி விட்டன. மலைகள் எல்லாம் வானத்தில் மிதந்து
கொண்டிருந்தன.
காற்று வீசியபோது மலைகள்
குலுங்கின. மலைகளில் இருந்த உயிரினங்கள் பயந்து அலறின. சில விலங்குகள் மலைகளின் விளிம்பிலிருந்து
தவறி விழுந்தன. மரங்கள் முறிந்து பூமியில் விழுந்தன. மலைகளுக்கே பயமாக இருந்தது. கீழே
இறங்கி விடலாம் என்று இறங்கத் தொடங்கின.
கீழே மேகங்கள் எங்கும்
போகமுடியாமல் ஒரே இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தன. தாத்தா
மேகம்,
“ வாருங்கள் விரைந்து மேலே
போய் விடுவோம்..” என்றது. மேகங்கள் உயரே சென்றன.
இப்போது மலைகளும் மேகங்களும் தினமும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். மலைகள் இங்கே பூமியில் நடப்பவற்றைச் சொல்கின்றன.
மேகங்கள் உலகம் முழுவதும் நடப்பதைப் பற்றிச் சொல்கின்றன.
அதோ! ஒரு குட்டி மேகம்.
மேகமலையின் உச்சியில் இருக்கும் தேவதாரு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கதை
சொல்லிக்கொண்டிருக்கிறது.
என்ன கதை என்று கேட்போமா?
நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment