பறக்க முடியுமா?
உதயசங்கர்
லில்லி பனிக்கொக்கம்மா
தன் குஞ்சான லல்லியிடம்,
“ இன்னும் கொஞ்சம் நாட்களில்
நாம் நீண்ட தூரம் வலசை போக வேண்டும் நீ நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொள் லல்லி....”
என்று சொல்லி முடிக்கும்
முன்னால்,
“ வலசைன்னா என்ன? “ என்று
லல்லி குஞ்சு கேட்டது.
“ நாம் ஒரு இடத்தில் இருந்து
இன்னொரு இடத்துக்குப் போய் கொஞ்சநாட்கள் இருந்து விட்டு திரும்பி வருகிறோம்.. அதைத்
தான் வலசை என்று சொல்கிறோம்..”
என்று லில்லி பனிக்கொக்கம்மா
விளக்கம் சொல்லியது.
“ எவ்வளவுதூரம் நாம் பறந்து
வருகிறோம்? “
“ உன்னுடைய கேள்விகளுக்கு
முடிவே கிடையாதா? கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோ மீட்டர்..”
“ ஏயப்பா அவ்வளவு
தூரமா? இங்கேயே இருந்துட்டா என்ன? “
“ அட என் லல்லிச்செல்லமே..
பூமியில் வ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமான தட்பவெப்பம் இருக்கும்டா..
எல்லாக்காலத்திலும் நம்மால் இருக்க முடியாது.. உணவு கிடைக்காது.. தண்ணீர் இருக்காது..
ஏன் குடும்பம் நடத்தவோ, முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கவோ முடியாது…”
அதைக்கேட்ட லல்லி உடம்பைச்
சிலிர்த்துக் கொண்டது. அம்மாவைப் பார்த்து,
“ அவ்வளவுதூரம் என்னால்
பறக்கமுடியுமா? “
“ ஏன் முடியாது.. நானும்
உன்னை மாதிரி என்னுடைய அம்மா கூட பறந்து
.. போனேன்..”
“ எனக்குப் பயமா
இருக்கும்மா..””
” பயந்தால் வாழமுடியாது..
லல்லி.. நீ இனிமே ரொம்பநேரம் பறக்கும் பயிற்சி எடுக்கணும்..”
தினமும் லில்லி பனிக்கொக்கம்மா
லல்லியையும் அழைத்துக் கொண்டு பறந்தது. காற்று வீசும்போது அதை எப்படி எதிர்கொள்வது?..
காற்றை எதிர்த்துப் பறக்கும் போது என்ன செய்யவேண்டும்?.
காற்றுடன் பறக்கும் போது என்ன செய்ய வேண்டும்?.” என்று ஒவ்வொன்றாகச்
சொல்லிக் கொடுத்தது.
ஆனாலும் லல்லிக்குப் பயம்
போகவில்லை.
அன்று அதிகாலை பனிக்கொக்குக்
கூட்டம் வலசைக்குத் தயாரானார்கள். கூட்டத்தின் தலைவர் முன்னால் போகப் பின்னாலே எல்லாப்பறவைகளும்
பறந்தன.
லல்லியும் பறந்தது. பறக்கப் பறக்க பறத்தலின் ஆனந்தம்
லல்லிக்குத் தெரிந்தது.
உயரே உயரே பறந்தது லல்லி. இப்போது அதன் மூளையில் பறக்கும் திசை ஓவியம் போலத் தெரிந்தது. இதுவரை இந்தத் திசையில் பறந்ததில்லை. ஆனால் காலம் காலமாகப் பறந்ததைப் போல ஞாபகங்கள் பொங்கி வந்தன.
அருகில்
பறந்த மற்ற பறவைகளிடம்,
” நான் சைபீரியப் பனிக்கொக்கு..”
என்று கம்பீரமாக
முழங்கிக் கொண்டே பறந்தது.
நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
This comment has been removed by the author.
ReplyDeleteவலசை என்றால் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தபோது, கதையிலும் அந்தக் கேள்வி லல்லி கொக்கு வாயிலாக எழுகிறது.
ReplyDeleteகதையினூடே பதிலை ஆசிரியர் லில்லி கொக்கு வாயிலாக தருகிறார்.
தங்களது கதைகள் சில நிமிடங்களில் வாசிக்க கூடிய அளவில் இருந்தாலும், தகவல் பொக்கிஷங்களாக விளங்கி நெஞ்சில் நிறைவை தரும் வடிவம் பெற்றிருக்கிறது.
நினைவில் எளிதில் தங்கும் உள்ளடக்கம், இரவின் பொழுதில் குழந்தையின் கதை கெஞ்சல்களுக்கு மத்தியில் பெற்றோர்களுக்கான மாபெரும் கொடையாக திகழ்கிறது.
நாளைக்காக காத்திருக்கிறேன்!