ஊர் சுற்றிய சிங்கக்குட்டி
உதயசங்கர்
கிர் காட்டில் சுமி, சிமி,
டுமி, என்று மூன்று சிங்கக்குட்டிகள் அம்மா சிங்கத்தின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன.
மூன்று பேரில் டுமிக்குச் சேட்டை அதிகம். சுமியையும், கமியையும் சும்மா வம்பிழுக்கும்.
பால் குடிக்கவிடாது. காலைக்கடிக்கவும், வாலைக்கடிக்கவும் மேலே விழுந்து புரளவும் செய்யும்.
அம்மா சிங்கம்,
“ கர்ர்ர்.. சும்மா இரு
டுமி.. “ என்று அவ்வப்போது செல்லமாய் திட்டும். அம்மா திட்டுவதற்கு யாராவது பயப்படுவார்களா?
டுமி அம்மா சிங்கத்தின் முகத்தில் முத்தம் கொடுத்து தாஜா செய்து விடும். அம்மா சிங்கத்துக்கு
டுமியின் சுறுசுறுப்பைப் பார்த்துப் பெருமையாக இருக்கும்.
இப்போதே வேட்டைக்குத் தயாரானதைப்
போல பதுங்கும். பாயும். கீச்சுக்குரலில் கர்ச்சனை செய்யும்.
க்க்ர் கீச்ச்
அம்மா சிங்கத்துக்கு சிரிப்பாணி
பொங்கி வரும். மெல்லச் சிரித்துக் கொண்டே, “ டேய் படவா ராஸ்கல்..” என்று சொல்லும்.
அப்பா சிங்கத்தைப் பார்த்தால்
சுமிக்கும் சிமிக்கும் பயம். அருகிலேயே போக மாட்டார்கள். ஆனால் டுமி பயப்படாது. அப்பாவின்
பிரம்மாண்டமான உடல் மீது முட்டி மோதி விளையாடும்.
ஒரு நாள் அப்பா சிங்கத்தின் மீது ஏறி அதன் பிடறி
முடியைக் கடித்து இழுத்தது. என்ன நினைத்ததோ அப்பா சிங்கம். கோபத்தில் டுமியைக் கவ்வித்
தூக்கி வீசி விட்டது. அதைப் பார்த்த அம்மா சிங்கம் அப்பாவுடன் சண்டை போட்டது.
தூக்கி வீசப்பட்ட டுமிக்கு
அவமானமாகப் போய் விட்டது. அப்படியே தலையைத் தொங்கப் போட்ட படியே அங்கிருந்து நடந்தது.
வருத்தத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்த அதற்கு முன்னால் கரும்பச்சை நிறத்தில் ஒரு
பச்சோந்தி நின்று முதுகை மேலும் கீழும் தூக்கி ஆடியது. டுமிக்கு வேடிக்கையாக இருந்தது.
“ ஏய்.. யார் நீ? “ என்று
கேட்டது டுமி சிங்கக்குட்டி. அது கேட்டதும்
அதுவரை பச்சை நிறத்தில் இருந்த பச்சோந்தி சிங்கத்தின் பழுப்பு நிறத்துக்கு மாறி விட்டது.
“ ஐய்.. இது எப்படி பண்றே?
“ என்று கேட்டது டுமி.
ஒரு கணம் தன்னுடைய வட்டமான
கண்களை இரண்டு பக்கங்களிலும் உருட்டியது பச்சோந்தி. பிறகு,
‘ நீ என்னைச் சாப்பிட மாட்டீல்ல.. அதாவது என்னுடைய
தோலில் இருக்கிற நிறமிகள் தான் நான் நிறம் மாறுவதற்கு உதவுகின்றன.. எந்த இடத்தில் இருக்கிறேனோ
அந்த இடத்தின் நிறத்தை உடனே பிரதிபலிக்கும்..”
என்று சொல்லிக் கொண்டே
அடுத்த புதரில் இருந்த வெட்டுக்கிளையைப் பிடிக்க ஓடியது பச்சோந்தி.
டுமி சிங்கக்குட்டிக்கு
ஆச்சரியமாக இருந்தது. இப்படி இடத்துக்கு இடம் நிறம் மாறினால் ர்வ்வளவு அழகாக இருக்கும்
என்று நினைத்துக் கொண்டே நடந்தது.
கொஞ்ச தூரத்தில் ஒரு பந்து
கிடந்தது. உருண்டையான பந்தைப் பார்த்ததும் டுமி சிங்கக்குட்டிக்கு ஆசை வந்து விட்டது.
அதன் அருகில் சென்று பார்த்தது. கூர் கூரான முட்கள் நட்டமாய் நிற்க விசித்திரமாக இருந்தது
அந்தப் பந்து. காலால் எத்தி விளையாடலாம் என்று டுமி நினைத்து காலைத் தூக்கியது. அவ்வளவு
தான் பந்து குடுகுடுகுடு வென்று ஓடியது.
அது முள்ளம்பன்றி. முள்ளம்பன்றி
ஓடுவதைப் பார்க்க டுமிக்கு வேடிக்கையாக இருந்தது.
டுமியும் பின்னாலேயே ஓடியது.
“ ஏய்.. டுமி பின்னாலே வராதே.. நான் தோலைச் சிலிர்த்தா
முள்ளு குத்திரும்.. நான் வீட்டுக்குப் போறேன்.. என்னோட அப்பா தேடிக்கிட்டிருப்பாரு..
“ என்று சொல்லி விட்டு திரும்பிப்பார்த்தது. எதிரே குள்ளநரி வந்து கொண்டிருந்தது. உடனே
மறுபடியும் பந்து மாதிரி சுருண்டு கொண்டது.
எவ்வளவு நல்லாருக்கு. ஓட
வேண்டாம். ஒளிய வேண்டாம். இருந்த இடத்திலேயே பந்து மாதிரி சுருண்டு இருந்துக்கிடலாம்
என்று சிங்கக்குட்டி நினைத்தது. அப்பாவின் ஞாபகமும் வந்தது.
ச்சே! அப்பா மோசம்!
ஏதோ ஒரு காட்டுச்செடியை
முகர்ந்து விட்டது.
அச்சூ.. அச்சூ.. அச்சூ..
என்று ஒரே தும்மல்.
ஏதோ பிடறி முடி தொங்கிக்
கொண்டிருக்கிற மாதிரி தலையை உதறியது டுமி. வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை. இன்னும்
கொஞ்ச தூரம் போனது.
யம்மாடி! இது என்ன எவ்வளவு
பெரிசு! டுமி அப்படியே அருகில் இருந்த புதருக்குள் பம்மியது. எதிரேஒரு யானைக்கூட்டம்
வந்து கொண்டிருந்தது. காட்டில் புழுதி பறந்தது. தட தட வென யானைகள் நடந்து போயின. டுமிக்கு
மூச்சே நின்று போயிற்று.
காலை வைத்து ஒரு மிதி!
அவ்வளவு தான். இப்படி பெரிதாக இருந்தால் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டியதில்லை. அப்போது
அதன் மீது புஸ் புஸ் என்று மூச்சுக்காற்று பட்டது. ஒரு குட்டி யானை தும்பிக்கையால்
டுமியை முகர்ந்து பார்த்தது,
“ ஏய் இங்கே என்ன பண்றே..
உனக்கு அம்மா அப்பா இல்லையா? ப்ளாங் “ என்று பிளிறியது. டுமிக்கு என்ன சொல்வது என்று
தெரியவில்லை. அதற்குள் அம்மா யானை அழைத்தது. உடனே குட்டி யானை ஓடி விட்டது.
புதரில் இருந்து வெளியே
வந்தது டுமி. அதன் முகத்தை ஒரு வண்ணத்துப்பூச்சி சுற்றியது. அப்படியே மூக்கின் மீது
உட்கார்ந்தது. டுமிக்குக் கோபம். என்ன தைரியம்! ஒரே அடியில் நசுக்கி விடுவேன் என்று
நினைத்துக் கொண்டே முன்னங்காலைத் தூக்கி ஓங்கி மூக்கில் அடித்தது.
வண்ணத்துப்பூச்சியைக் காணோம்.
மூக்கு தான் வலித்தது. தலையை நிமிர்த்தி உயரே பார்த்தது. வண்ண வண்ண நிறங்களுடன் வானத்தில்
பறந்து கொண்டிருந்தது வண்ணத்துப்பூச்சி.
எவ்வளவு அழகு! இந்த வண்ணத்துப்பூச்சியைப்
போல வண்ணச்சிறகுகள் இருந்தால் எப்படியிருக்கும்! டுமியின் உடலில் சிறகுகள் முளைத்து
அப்படியே வானத்தில் பறப்பதைப் போல கற்பனை செய்தது.
ஆகா! என்ன அற்புதம்!
டுமி இதுவரை தனியே வந்ததில்லை.
நேரமாகி விட்டது. வயிறும் பசித்தது. அம்மா அப்பாவும் இருக்கும் குகைக்குப் போகவேண்டும்.
நின்று யோசித்தது. வந்த வழியே போகலாமா? எந்த வழியில் வந்தோம்?
அதற்குக் குழப்பமாகி விட்டது.
அப்போது ஒரு வித்தியாசமான
அழுகைச்சத்தம் கேட்டது. யார் இந்தக் காட்டுக்குள் அழுகிறார்கள்? டுமி ஆர்வத்துடன் சத்தம்
வந்த திசையைப் பார்த்து ஓடியது.
அங்கே வாயில் எச்சில் ஒழுக,
கூன் போட்ட முதுகுடன் ஒரு கழுதைப்புலி டுமி
சிங்கக்குட்டியைப் பார்த்தது. அம்மாடி! ஆபத்தில்
மாட்டிக் கொண்டேனே! அம்மா ஏற்கனவே சொல்லியிருக்கிறது.
யார் கண்ணில் பட்டாலும்
கழுதைப்புலியின் கண்ணில் படக்கூடாது. இப்போது என்ன செய்வது? அவ்வளவு தானா? என் உயிர்
போகப்போகிறதா? இதோ ஒரே நிமிடத்தில் என்னைக்கிழித்துச் சாப்பிடப்போகிறது இந்தக்கழுதைப்புலி
என்று பயந்து நடுங்கியது டுமி சிங்கக்குட்டி. ஓடி விடலாமா? சுற்ரிலும் இருக்கும் இந்தப்
புதர்க்காட்டில் ஓட முடியுமா?
டுமியின் மனதில் ஒருகணம்
அப்பாவும் அம்மாவும் சிமியும் சுமியும் வந்து போயின.
கழுதைப்புலி மெல்ல அடியெடுத்து
வைத்து டுமியை நோக்கி வந்தது. அதன் எச்சில் வாடை மோசமான நாற்றத்தை பரப்பியது. மூசு
மூசு என்ற மூச்சுக்காற்று கூட மேலே பட்டது. வாயைத் திறந்து டுமியின் கழுத்தில் கூர்மையான
பற்களைப் பதிக்கப் போன கழுதைப்புலி காள் காள் என்ற சத்தத்துடன் தூரத்தில் விழுந்தது.
அப்பாவின் கம்பீரமான கர்ச்சனையில்
காடே அதிர்ந்தது. அம்மா கழுதைப்புலியை விரட்டிக் கொண்டு ஓடியது.
டுமிக்கு அப்பாவையும் அம்மாவையும்
பார்த்ததும் கண்ணீர் வந்தது.
“ அப்பா நான் இனிமே தனியே
வரமாட்டேன்..”
என்றது.
அப்பா சிங்கம்,
“ இல்லை டுமி இன்னும் கொஞ்ச
நாட்களில் நீ தனியாக வரவேண்டும் வேட்டையாட வேண்டும். காடு முழுவதும் சுற்றி வரவேண்டும்..
இப்போது நீ .சின்னப்பையன்.. பாதுகாப்புடன் வருவது தான் நல்லது.. சரி வா என் முதுகில்
.ஏறிக்கொள்..”
என்று
அப்பா சிங்கம்.
டுமிக்கு மகிழ்ச்சி. அப்பா
சிங்கத்தின் முதுகில் ஏறிக்கொண்டது.
“ அப்பா ஐ லவ் யூ..” என்று சொல்லி
பிடறி முடியில் முத்தமிட்டது.
பின்னால் வந்த அம்மாவைப்
பார்த்து,
“ ஐ லவ் யூ டூ..” என்று பறக்கும் முத்தத்தை அனுப்பியது.
நன்றி - வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment