Tuesday, 1 July 2025

குழந்தைகளிடம் கதைகள் என்ன செய்யும்?

 

குழந்தைகளிடம் கதைகள் என்ன செய்யும்?





1. 
குழந்தைகள் உணர்வுமயமானவர்கள் அந்தந்தக் கணத்தில் வாழ்பவர்கள், கற்பனைத் திறன் மிக்கவர்கள், எல்லாவற்றையும் உண்மை யென்று நம்புகிறவர்கள்.


2.
குழந்தைப் பருவம் முழுவதும் உணர்வுகளால் பாதிக்கப்படுகிற காட்சிச் சித்திரங்களை மூளை தன்னுடைய ஆழ்மனதில் சேமித்து வைத்துக் கொள்ளும்.


3.
வெளியில் புறவயமாக குழந்தைகள் எதைப் பார்க்கிறார்களோ, எதை உணர்கிறார்களோ, எதை கேட்கிறார்களோ, அவை அனைத்தும் அவர்களுடைய ஆழ்மனதில் அதற்கே உரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


4.
அதன் விளைவுகள் அவர்கள் பெரியவர்களாகும் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களுடைய ஆளுமையில் பிரதிபலிக்கும்.


5. 
ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்த சமூகமும் பெண்கள் குழந்தைகள் மீது அக்கறை இல்லாத ஆணாதிக்க சிந்தனைகளும்  குழந்தைகள் மனதில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொண்டோமானால் சிறார் இலக்கியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.


6. 
கதைகள் குழந்தைகளின் மனக்கண்ணில் ஒரு புதிய உலகத்தை படைக்கிறது. இதுவரை குழந்தைகள் கேட்டிராத, பார்த்திராத, கற்பனை செய்திராத, ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு காட்டுகிறது. அந்தக் கதையில் நிகழும் சம்பவங்கள் அதன் விளைவுகள் அதன் முடிவு அனைத்தும் குழந்தைகளின் ஆழ் மனதில் சென்று சேர்கிறது.


7.
எனவே தான் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லும்போது கதைத்தேர்வில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


8.
பண்பாடு என்ற பெயரில் போலியான சடங்குகள், மூடநம்பிக்கைகளை விதைக்கும் கதைகளைச் சொல்லக்கூடாது.


9.
ஏனெனில் குழந்தைகளுக்கான கதைகளில் வரும் சம்பவங்களில் குழந்தைகள் வாழத் தொடங்கி விடுவார்கள். கதைகளில் வரும் கதாபாத்திரங்களாக தங்களை கற்பனை செய்து கொள்வார்கள்.


10.
பண்பாடு என்பது பழமை போற்றுதல் அல்ல. மாறிவரும் சமூகச்சூழலுக்கேற்ப புதிய பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கதைகளைச் சொல்லவேண்டும்.


11.
தன்னை முன்னிறுத்தல், போட்டி, வெற்றிக்காக எந்த தந்திரமும் செய்தல், தன்னைத்தவிர மற்றவர்களை மதிக்க வேண்டியதில்லையென்ற பண்பு, உயர்ந்தோர் தாழ்ந்தோர் பிரிவினை போன்ற விழுமியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ  சொல்கிற கதைகளைச் சொல்லக்கூடாது.


12.
சமத்துவம், சகோதரத்துவம்எல்லோருக்கும் சமவாய்ப்பு, அனைத்துயிர்களையும் மதித்தல், அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு, சகிப்புத்தன்மை, பாலின சமத்துவம், போன்ற உயரிய பண்புகளைப் போற்றும் கதைகளைச் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment