இந்திய நாடோடிக்கதை - 2
பூனை
ஏன் புலியைப் பார்த்துப் பயப்படுகிறது?
ஆங்கிலம்
வழி தமிழில் - உதயசங்கர்
முன்னொரு காலத்தில் புலியும் பூனையும் அக்கா தங்கையாக இருந்தன. புலி
அக்காவின் குட்டிக்கு சித்தியாக பூனை இருந்தது. புலிக்குட்டிக்கு
பூனைச்சித்தியை மிகவும் பிடிக்கும். உருவத்தில் சிறியதாக இருந்த பூனைச்சித்தியுடன் புலிக்குட்டி
கட்டிப்புரண்டு விளையாடும். துரத்தும். பொய்க்கடி கடிக்கும். வாயில்
கவ்விக் கொண்டு அங்குமிங்கும் ஓடும். பூனைச்சித்தி தூங்கிக்
கொண்டிருக்கும் போது காதுக்கருகில் போய் உறுமும்.
சில சமயம் பூனைச்சித்திக்கு வலிக்கும். அது,
“ மியாவ்
மியாவ்.. என்னை விடறா..குண்டுப்பையா..மியாவ் ” என்று
கத்தினாலும் அந்தச் சத்தம் புலிக்குட்டிக்கோ புலி அக்காவுக்கோ கேட்காது. ஆனாலும்
பூனைச்சித்திக்கு புலிக்குட்டியை அவ்வளவு பிடிக்கும்.
ஒருநாள் புலி அக்கா இரை தேடப் போகும்போது காலில் மிகப்பெரிய
முள் குத்திவிட்டது. நொண்டிக்கொண்டே வந்த்து. மறுநாள்
நடக்கமுடியவில்லை. இரண்டாவது நாள் காய்ச்சல் வந்தது. மூன்றாவது
நாள் புலி அக்கா இறந்து விட்டது. இறப்பதற்கு முன்னால் பூனைத்தங்கையை அழைத்து அதனுடைய முன்னங்காலைத்
தூக்கித் தன் கையில் வைத்துக் கொண்டு,
“ தங்கச்சி.. என் பையனை
நீ தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..” என்று
கேட்டது. அதைக் கேட்ட பூனைத்தங்கை உருகிவிட்ட்து.
“ நிச்சயமாக
அக்கா.. நான் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று
உறுதிமொழி கொடுத்தது. புலி அக்கா இறந்து விட்டது.
இப்போது புலிக்குட்டிக்கு வயிறு பசித்தது.
“ பூனைச்சித்தி.. பூனைச்சித்தி.. வயிறு
பசிக்குது..கர்ர்ர்” என்று உறுமியது.
“ இதோ உனக்கு
உணவு கொண்டு வர்ரேன் செல்லம்..” என்று சொல்லிவிட்டு பூனைச்சித்தி புறப்பட்டது. இரை தேடி
இரை தேடி காட்டின் எல்லைக்கே வந்து விட்டது. அப்போது
இரவாகி விட்டது.
அங்கே ஒரு வீடு இருந்தது. அந்த
வீட்டிலிருந்த மனிதர்கள் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு
முடித்து மீதியிருந்த உணவையும் எலும்புகளையும் வெளியே கொட்டினார்கள்.
அந்த உணவைப் பார்த்ததும் பூனைச்சித்திக்கு எல்லாம் மறந்து
விட்டது. புலி அக்காவுக்குக் கொடுத்த உறுதிமொழியை மறந்து விட்டது. புலிக்குட்டியை
மறந்து விட்டது. ஆசை ஆசையாக எலும்பைக் கடித்துச் சாப்பிடத் தொடங்கியது.
பூனைச்சித்தியைக் காணவில்லையே என்று புலிக்குட்டி வழிமேல்
விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தது. பசி தாங்க முடியவில்லை. புலிக்குட்டி
அப்படியே பூனைச்சித்தியைத் தேடி நடந்தது. புலிக்குட்டியும் காட்டின்
விளிம்பில் இருந்த வீட்டையும் பார்த்தது.
அங்கே பூனைச்சித்தி நிதானமாக எலும்புகளைக் கடித்துக் கொண்டிருப்பதையும்
பார்த்தது. புலிக்குட்டி வந்ததைப் பூனைச்சித்தி பார்க்கவில்லை. அது கண்களை
மூடி ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு
தான்!
புலிக்குட்டிக்கு வந்ததே கோபம்!
“ கர்ர்ர்
உன்னை என்ன செய்கிறேன்.. பார்..” என்று ஒரு பெரிய உறுமலுடன் பூனைச்சித்தியின் மீது பாய்ந்தது.
நல்லவேளை! புலிக்குட்டியின் உறுமலைக் கேட்டதும், பூனைச்சித்தி
பாய்ந்து இருட்டுக்குள் ஓடி விட்டது.
பாருங்கள்! அன்றிலிருந்து புலிக்குப்
பூனையைக் கண்டாலே ஆகாது. பூனைக்கும் புலியைப் பார்த்தால் பிடிக்காது.
இப்போது கூடப் பாருங்கள்! இந்தக்
கதையைக் கேட்ட பூனை ஓடியே போய்விட்டது.
ஹ்ஹ்ஹ்ஹா ஹாஹா
1876 ஆம் ஆண்டு சிம்லாவில் கேட்ட கதை
No comments:
Post a Comment