Sunday, 20 July 2025

சிறார் இலக்கியமும் சமூகமும்

 சிறார் இலக்கியமும் சமூகமும்




1. உலகமுழுதுமுள்ள தலை சிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருப்பதிலேயே மிகவும் கடினமானது சிறார் இலக்கியம் எழுதுவது தானென்று சொல்லியிருக்கிறார்கள்.


2. அவர்களெல்லோரும் எழுதியும் பார்த்திருக்கிறார்கள். லியோ டால்ஸ்டாய் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன் வரை. 


3. அப்படிப்பட்ட சிறார் இலக்கியத்தின் யதார்த்த நிலைமை எப்படியிருக்கிறது தெரியுமா?


4.  இந்திய அளவில் கொடுக்கப்படும் பால புரஸ்கார் விருதுத் தொகை ரூ.50000/ மட்டுமே.  கொடுக்கப்படும் பட்டயம் முழுவதும் இந்தியில் எழுதப்பட்டிருக்கும்.  எனக்குத்தான் அந்த விருது கொடுத்திருக்கிறார்களென்பதை நாம் தான் சொல்ல வேண்டும்.


5. சிறார் இலக்கியம் பற்றி எந்த இலக்கிய அமைப்புகளும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அவர்களுடைய அஜெண்டாவில் இடம் பெறுவதுமில்லை.


6. வெளிவந்து கொண்டிருக்கும் சிறார் இலக்கியத்தை பெரிய்ய்ய எழுத்தாளர்கள் வாசிப்பதுமில்லை. தெரியாத்தனமாக அவர்களைப் பேசக்கூப்பிட்டால் சமகாலத்தில் வந்து கொண்டிருக்கும் எந்த நூலைப்பற்றியும் தெரியாமல் அவர்களுடைய பாலிய காலத்தில் வாசித்த புத்தகங்கள் குறித்தோ அல்லது இப்போதெல்லாம் அப்படி வருவதில்லையென்று பொத்தாம் பொதுவாகவோ பேசுவார்கள்.


7. அந்தக்கால அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரெக் உள்ளிட்ட புத்தகங்களின் உள்ளடக்கம், அதன் அரசியல் குறித்து எதுவும் தெரியாமலேயே அவை தான் சிறார் இலக்கியத்தின் உன்னதங்களென்று சொல்வதுமுண்டு.


8. அரசு விழாக்களில் புத்தகக்கண்காட்சி உள்பட சிறார் இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு இடம் கொடுப்பதே அரிது. அப்படியே கொடுத்தாலும் அதற்கான சன்மானம்  3000, 5000, அதிக பட்சம் 10000 தாண்டாது.


9. சிறார் நூல்களுக்கான விருதுத்தொகையிலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இத்துணூண்டு புத்தகத்துக்கு அவ்வளவு ரூபாய் கொடுக்க முடியுமா? என்று கேலி செய்வதுமுண்டு.


10. சிறார் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு எந்த மரியாதையும் கிடையாது. எந்த விருதும் கிடையாது.


11. பத்திரிகைகளில் சிறார்களுக்கான பக்கங்கள் கிடையாது அல்லது மிகவும் குறைவு. நவீன சிறார் இலக்கியம் குறித்த எந்தப் புரிதலுமின்றி பழைய சரக்குகளையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


12. சிறார் இலக்கியம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். ஆனால் பொதுச்சமூகமும் இலக்கிய உலகமும் அதைக் குறித்துக் கவலைப்படவில்லையென்றால் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். 


13. அறிவுச்சமூகமாக வளர வேண்டிய குழந்தைகள்  போலியான,மலினமான, வறட்டுத்தனமான, பழமையான, தேய்வழக்கான, இலக்கியப்பிரதிகளை வாசித்து அவர்களும் அப்படியே மாறிவிடும் ஆபத்து இருக்கிறது.


14. எதிர்காலத்தில் பெரிய்ய்ய இலக்கியவாதிகளென்று மார்தட்டிக் கொள்பவர்களுக்கும் சரி, மார்த்தட்ட நினைப்பவர்களுக்கும் சரி ஒரு வாசகர் கூட இருக்க மாட்டார்கள்.


15. வெளிவந்து கொண்டிருக்கிற சிறார் இலக்கியப்பிரதிகளை வாசித்து விமரிசனம் செய்யுங்கள். புதிய பிரதிகளை உருவாக்குங்கள். இயக்கவியல் ரீதியாக சிறார் இலக்கியம் முன்னேறிச்செல்ல துணை செய்யுங்கள்.

No comments:

Post a Comment