Sunday 13 December 2015

சந்திரஹாசம்-விமரிசனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் சந்திரஹாசம்!

சந்திரஹாசம் விமரிசனம்
ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் சந்திரஹாசம்!
உதயசங்கர்

தமிழ் நாவல் இலக்கியம் 1876-ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரத்தில் தொடங்கி இன்று வரை எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்து சமீபகாலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களின் படைப்புக்களமாக மாறியிருக்கிறது. இன்று ஒரு தமிழ் இலக்கிய வாசகன் பெருமையோடு குறைந்தது பத்துப்பேரையாவது நாவல் இலக்கியத்தில் சாதித்தவர்கள் என்று சொல்ல முடியும். நவீன நாவல் இலக்கிய வடிவம் வெறும் புனைவைத் தாண்டி எழுத்தாளனிடம் வேறு பல விஷயங்களையும் வற்புறுத்துகிறது. வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், இனவரைவியல், என்று நவீன அறிவுலகின் தரவுகள் அனைத்தையும் தன்னுடைய புனைவிலக்கியத்தில் நெய்வதன் மூலம் படைப்பின் அடர்த்தியையும், ஆழத்தையும், பரப்பளவையும், நம்பகத்தன்மையையும், கலையாளுமையையும், செழுமைப்படுத்துகிறான். இன்றைய நாவலாசிரியன் தன்னுடைய புனைவெழுத்தை உண்மையைப் போல புனைவையும், புனைவு போல உண்மையையும் குழப்பித்தருவதன் மூலம் வாசகனுக்கு கலைப்பரவசத்தை அளிக்கிறான். கலைஞனே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தன் படைப்பில் முன்னுணர்ந்து வடிவமைக்கிறான். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைக்கூட சில வரலாற்றுக்குறிப்புகளின் துணையோடு வாசகனின் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி விடுகிறான். இதிகாசங்கள், புராணங்கள், நாட்டுப்புறக்கதைகளில் உள்ள பேசப்படாத பக்கங்களைப் பேச வைக்கிறான். வெளிச்சம் படாத கதாபாத்திரங்களை பிரம்மாண்டமாய் உருப்பெருக்குகிறான். ஏற்கனவே நிலைநிறுத்திய மதிப்பீடுகளை மறுவாசிப்பு செய்கிறான். இண்டு இடுக்குகளில் நுழைந்து கலையின் ஒளியினால் நமக்கு வேறொன்றாகக் காட்டுகிறான்.
மனித மனதின் கோடிக்கணக்கான விசித்திரங்களையே உலகெங்குமுள்ள படைப்பாளிகள் கோடிக்கணக்கான பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கலைடாஸ்கோப்பின் சித்திரங்களைப் போல ஒரு சிறு சலனத்தில் அற்புதமான சித்திரங்களை உருவாக்கும் மனித மனம் எழுதித்தீராத மர்மங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய முதல் நாவலான காவல்கோட்டத்தின் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தடத்தை உருவாக்கிய சு.வெங்கடேசன், இந்திய அளவில் மிகக்குறைந்த வயதில் அதுவும் தன்னுடைய முதல் படைப்புக்கு சாகித்ய அகாடமி வாங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்த சு.வெங்கடேசன் இப்போது சந்திரஹாசம் என்ற அடுத்த படைப்பின் வழியாக மற்றுமொரு புதிய தடத்தைப் பதித்திருக்கிறார். மேலைநாடுகளில் மிகப்பிரபலமாக விளங்குகிற கிராபிக் நாவல் என்ற வடிவத்தை ஓவியர் பாலசண்முகத்தோடு இணைந்து மிகப்பிரம்மாண்டமாக விகடன் குழுமத்தின் வழியாக நம் கண்களை விட்டு அசையாக்காட்சிச் சித்திரங்களாகக் கட்டி எழுப்பியுள்ளார் சு.வெங்கடேசன்.
கிராபிக் இலக்கிய வடிவம் தமிழுக்குப் புதியது. எழுத்தின்வழி எழுப்பும் மனச்சித்திரங்களை விட காட்சியும் எழுத்துமாக எழும்பும் சித்திரங்கள் மனித மனதில் கல்வெட்டுச்சித்திரங்களாக என்றும் நிலைத்திருப்பவை. சினிமா என்ற நவீன கலைவடிவத்தின் ஈர்ப்பு சக்தியை இப்போதும் நாம் உணர்ந்து கொண்டேயிருக்கிறோம். மனம் முழுவதும் ஆக்கிரமிக்கும் வல்லமை காட்சிரூபத்துக்கு உண்டே. அத்தகைய காட்சிகளை கட்டி பிரம்மாண்டமாய் எழுப்பியிருக்கிறார்கள் சந்திரஹாசத்தில் சு.வெங்கடேசனும் ஓவியர் பாலசண்முகமும்.
வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் சான்றுகள் மட்டும் போதாது. நம்முடைய இனக்குழுவின் ஆதிக்கிழவி தன்னுடைய உடலெங்கும் கதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் கதைகளால் உருவாக்கப்பட்டவள் தான் அந்த ஆதிக்கிழவி. அவளுடைய சடைபிடித்த தலைமயிரில் எத்தனை லட்சம் கதைகள் ஈரும் பேனுமாய் அடைந்து கிடக்கின்றன. அவைகள் எப்போதும் கதைக்குஞ்சுகளைப் பொரித்துக் கொண்டேயிருக்கின்றன. அவளுடைய உடல் சுருக்கங்களிலிருந்தும், மீன்செதில் பாய்ந்த தோல் பரப்பிலிருந்தும் கதைகள் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆதிக்கிழவி தலைமுறைகள் தோறும் பண்பாடு, பழக்கவழக்கம், தொன்மங்கள், வழியாக உருவாகும் கதைகளைச் சேகரித்து தன்னுடம்பில் ஒளித்து வைத்துக் கொண்டேயிருக்கிறாள். அந்தக்கதைகளின் மூலமே எத்தகைய இடரையும் மனித இனம் தன் ஆன்மபலத்தினால் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனை விஞ்ஞானங்கள், புதிய கண்டுபிடிப்புகள் இந்தப்புவியில் வந்தாலும் என்றும் கதைகளுக்கு அழிவில்லை. மற்றொரு வகையில் சொல்லப்போனால் கதைகள் இந்தப்பூமியில் என்று அழிந்து போகிறதோ அன்று மனித இனமே அழிந்து விடும். அதனால் தான் இந்தப்பூமியெங்கும் அலைந்து திரிந்து ஆதிக்கிழவி கதைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் காலம் பிழைத்தவள். நித்தியமானவள். அதனால் அந்தக்கிழவியிடமிருந்து கடந்த காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். எதிர்காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். அவளுடைய கதைகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. ஆனால் உண்மைகளும் உள்ள புனைவுகள். புனைவுகளுக்குள் உண்மையை உருமாற்றி கண்ணாமூச்சி ஆடுகிறாள் ஆதிக்கிழவி. ஏன் தெரியுமா? சில நேரம் உண்மை குரூரமானது. உணர்ச்சியற்றது. சாய்வில்லாதது. நேரடியானது. ஒரு கொலைக்கருவியைப் போல. அதனால் மனித இனமே கூட அழிந்து போய்விடலாம். ஆதிக்கிழவிக்குத் தெரியும். அதனால் தன் குழந்தைகளைக் காப்பாற்ற புனைவுகளை கலந்து வைக்கிறாள். இந்தப் புனைவுகளே மனிதகுலம் இன்னும் நம்பிக்கையோடு மேலும் மேலும் முன்னேறக் காரணமாக இருக்கிறது.
சந்திரஹாசம் ஒரு முடிவில்லாத யுத்தத்தின் கதை. அரசியல் என்பதே சூழ்ச்சிகளும், தந்திரங்களும், சாமர்த்தியங்களும் நிறைந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற அன்றிலிருந்து இன்றுவரை எந்த நேர்வழிகளும் இல்லையே. இந்த ரகசியப்பாதைகளை வரலாற்றிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது சந்திரஹாசம். வரலாற்றின் வழிநெடுக அவிழ்க்கப்படாத ஏராளமான மர்மப்பிரதேசங்கள் இருக்கின்றன. இருள் சூழ்ந்த அந்தப் பிரதேசங்களுக்குள் மனிதமனதின் சிடுக்குகள் பின்னிக் கிடக்கின்றன. அந்தப்பிரதேசங்களுக்குள் நுழைய கலைஞர்களால் மட்டுமே முடியும். அப்படியான ஒரு பிரயாணத்தை சு.வெங்கடேசனும், பாலசண்முகமும். சந்திரஹாசத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே 600 ஆண்டு கால மதுரையின் வரலாற்றை துல்லியமாக தன் எழுத்தாளுமையின் மூலம் மிகப்பெரிய கேன்வாசில் சித்திரம் தீட்டியிருந்தார் சு.வெங்கடேசன். சந்திரஹாசத்தில் இன்னும் சற்று முன்னால் போய் பாண்டியப்பேரரசின் கீர்த்திவாய்ந்த அரசரான குலசேகர மாறவர்மனிடம் தொடங்குகிறார். இலங்கை யுத்தம், மார்கோபோலோ, மாலிக் கபூர் என்று வரலாற்றினைச் சுழட்டி புனைவுக்குள் துள்ள வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் நாவலின் அடுத்த கட்ட நகர்வுக்கான ஆவலைத்தூண்டுகிறது. ஓவியங்களும் கதையும் வாசகனை அபூர்வமான மகிழ்ச்சியில் திளைக்கச்செய்கிறது. கையில் எடுத்தால் பார்த்து படித்து முடிக்காமல் கீழே வைக்க விடாதபடிக்கு அழகு. அழகு. அழகு.
ஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சந்திரஹாசம் என்ற பாண்டியரின் குலச்சின்னம் பற்றிய கதை என்று மேலோட்டமாகச் சொன்னாலும் உண்மையில் இந்த நாவல் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் வீரமும் விளையாடும் அரசியல் களத்தை நம் கண்முன்னே விரிக்கிறது. இலங்கைக்கு எதிரான யுத்தகளத்தையும் கவுள் வியூகம் என்ற யுத்தவியூகத்தையும் அந்த நிலப்பரப்பினையும் இவ்வளவு துல்லியமாக யாரும் எழுதியிருக்கிறார்களா என்பது சந்தேகம் தான். அதே போல மாலிக்கபூரின் படையணிகளையும் அதில் தலைமை தாங்கிய படைத்தளபதிகளையும் வாசிக்கும் போது வரலாற்றினுள் நாமும் பங்கேற்கிற மாதிரியான உணர்வு ஏற்படுகிறது.
 “இரும்பென்றாலும் பனியென்றாலும் வெப்பத்தால் உருகக்கூடியதே ஆனால் எக்காலத்திலும் உருக்குலையாதது கதைகளால் உருவாக்கப்படும் நம்பிக்கை மட்டுமே “
என்ற வரிகளிலும், இலங்கை மன்னன் பராக்கிரமபாகு சரணடைந்து உயிர்ப்பிச்சை கேட்டு மீளும்போது “ பேரரசின் வலிமையை தனது உடலெங்கும் உணர்ந்த அவன் கடலில் துள்ளும் மீன்களைக் கண்டால் கூட வணங்கத் தயாராக இருந்தான். “ என்ற வரிகளிலும் உள்ள பெருமிதமும் கம்பீரமும் சு.வெங்கடேசனுக்கே உரியது. இப்படி சு.வெங்கடேசனின் எழுத்து தன் வலிமையை புறத்திலும், ஓவியங்களின் நுணுக்கமான விவரணைகளிலும், கதாபாத்திரங்களின் முகபாவங்களில், காட்சிச்சித்தரிப்பில் உள்ளும் கலந்து இந்த கிராபிக் நாவலை குறிப்பிடத்தக்கதாக மாற்றியிருக்கிறது. வரலாற்றை மீட்டெடுப்பதிலும் அதில் புனைவின் சவால்களை எதிர்கொள்வதிலும் சு.வெங்கடேசனின் கடும் கலைஉழைப்பு நம்மை அசர வைக்கிறது. சு.வெங்கடேசனின் எழுத்தோவியத்துக்கு வண்ணங்களும், அழகும் சேர்த்து நம் கண்ணைப் பறிக்கிற மாதிரி பாலசண்முகம் வரைந்துள்ளார். அதோடு வரலாற்றுக்கென ஒரு அடர்வண்ணத்தைத் தேர்வு செய்து அதை பின் திரையாக அனைத்துப்பக்கங்களிலும் தீட்டியுள்ளது அவரது கலைமேதைமைக்குச் சான்று. அதே போல வேறு வேறு திணைப்பரப்பினையும், (மருதம், பாலை, நெய்தல்,குறிஞ்சி, ) வேறு வேறு வண்ணங்களில் தீட்டியுள்ளார் ஓவியர். வரைகின்ற கோணத்திலும் பார்வை-வாசிப்பாளனைப் பரவசப்படுத்துகிறார் பாலசண்முகம். ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் நம் கண்முன்னே கொண்டு வருகிற மாதிரி பிரம்மாண்டமாக உச்சிக்கோணத்தில் ( TOP ANGLE ) பறவைப்பார்வையில் தீட்டிய காட்சிகள் காட்சிப்புலனுக்கு கொள்ளை இன்பம் அளிக்கிறது. புத்தகத்தினுள் ஒரு சினிமா என்ற வரிகளில் பாலசண்முகத்தின் அருகாமைக்காட்சி,( CLOSEUP ), மத்தியக்காட்சி, ( MIDDLE ), இன்னும் பல கோணங்களில் அவர் வரைந்துள்ளார். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அந்தக்காட்சிகளும் மதுட்நிலப்பரப்பை, அரண்மனையை அவர் நுட்பமாகத் தீட்டியுள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் புதிய அநுபவங்களைத் தருகிறது. மதுரையின் பாண்டியர் தெருக்களும் பாண்டியப்பேரரசின் கருவூலக்காட்சிகளும், தர்பார் மண்டபக்காட்சிகளும் ஓவியரின் திறமையைப் பறை சாற்றுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திரத்தின் குணாதிசயத்தையும் அதன் முகபாவத்திலேயே கொண்டு வந்திருப்பது ஓரிரு வரிகளிலேயே கதையில் திருப்பங்களையும், சுவாரசியத்தையும் அளித்திருப்பது சந்திரஹாசத்தின் சிறப்பு. சு.வெங்கடேசனுக்கும், பாலசண்முகத்துக்கும் விகடன் குழுமத்துக்கும் சந்திரஹாசம் ஒரு மைல் கல்.

சந்திரஹாசத்தை பார்த்து படித்து முடிக்கும் போது தமிழ் இலக்கியம் அடுத்த கட்டத்தை நோக்கி பெரும்பாய்ச்சலாக பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணரமுடியும். தமிழின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான சு.வெங்கடேசனும் புதிய திறமையின் ஊற்றுக்கண்ணாய் திகழும் பாலசண்முகமும் சேர்ந்து ஒரு புதிய சகாப்தத்தை விகடன் குழுமம் வழியாகத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படைப்பிற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய குழுவே செயல்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேரின் உழைப்பே இதை மிகப்பிரம்மாண்டமான படைப்பாக மாற்றியிருக்கிறது. இந்தப் புதிய சகாப்தத்தை தமிழ் வாசகர்கள் தங்களுடைய இரண்டு கரங்களையும் விரித்து வரவேற்பார்கள் என்று சொல்வதில் தயக்கமோ, மிகையோ இல்லை. இலக்கியத்தில், ஓவியத்தில், பதிப்புலகில் ஒரு புதிய வரலாற்றின் துவக்கப்புள்ளியாக சந்திரஹாசம் என்றென்றும் திகழும். 

1 comment: