Wednesday 18 July 2012

படைப்பும் விமரிசனமும்

 

உதயசங்கர்

116

விமரிசனம் என்பது ஒரு படைப்பைச் சார்ந்து இயங்க வேண்டியது. படைப்பைப் போலவே உயர்ந்து நிற்கவும் கூடியது. சில சமயங்களில் அதன் ஆழ அகல விரிவினால் படைப்புக்குச் சமமாகவும் விமரிசனம் அமையும். என்றாலும் பொதுவாக விமரிசனம் படைப்பினை ஆதார சுருதியாகக் கொண்டு படைப்பிலுள்ள நுட்பதிட்பங்களை வாசகனுக்கும், சிலநேரங்களில் படைப்பாளிக்கே கூட விளக்கும். அதோடு படைப்பிலக்கியக் கொள்கைகளை ஆராய்ந்து ஒப்பிட்டு படைப்பையும் அதன் தாத்பரியங்களையும் துலங்கச் செய்யும். ஆதலால் விமரிசனம் படைப்பின் அளவுக்குச் சுயமாகவும் இயங்கும்.

அழகியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, அதன் வெளிச்சத்தில் படைப்பின் சார்பு நிலையை இனங்கண்டு படைப்பின் சூட்சுமங்களை, அது தொற்ற வைக்கும் அநுபவச்சிலிர்ப்பை தெரிவிக்கும் ஆதாரக்கருத்தினை எடுத்துரைத்து படைப்பின் உள்வெளி அழகினைச் சிலாகித்து, படைப்பின் போதாமைகளை அக்கறையோடு எடுத்துக்காட்டி படைப்பாளி தனது எழுத்துப் பயணத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல ஊக்குவித்தும், வாசகனுக்கு அந்தப் படைப்போடு ஒரு அந்நியோன்யமான உறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாகவும் விமரிசனம் அமைய வேண்டும்.

வாசகனைப் பொறுத்தவரை விமரிசனம் படைப்பை நெருங்கிச் செல்ல உதவுகிற பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். பாலமே பெருந்தடையாகவோ, முன் அபிப்ராயங்களை ஏற்படுத்துகிற பெருஞ்சுவராகவோ மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால் வாசகன் படைப்பிலிருந்து அந்நியப்பட்டு விடவோ, படைப்பை முன் முடிவுகளோடு அணுகவோ நேரிடும். அப்போது படைப்பை முழுமையாக அதன் அழகோடும் அசிங்கத்தோடும் வாசகன் தரிசிக்க முடியாமல் போகலாம். அப்படி நேருமானால் வாசனுக்கும், படைப்புக்கும், படைப்பாளிக்கும் பெரும் நஷ்டம்.

விமரிசகன் ஒரு வகையில் படைப்பாளியை விடவும் அறிவார்த்தமாக மிகுந்த பலவானாக இருக்க வேண்டும். படைப்பின் நுட்பங்களான வடிவ அழகு, மொழி, நடை, உத்தி, செய்நேர்த்தி, தொழில்திறமை, குறித்த விரிந்த அறிவு வேண்டும். உலக இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள், உலகளாவிய சமீபத்திய இலக்கியப்போக்குகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். மொழி வரலாறு, இலக்கிய வரலாறு குறித்த பொதுவான கண்ணோட்டமும், தனக்கேயுரிய பிரத்யேகக் கண்ணோட்டமும், வேண்டும். இது வரை வந்துள்ள படைப்புகளைக் குறித்த பரந்த அறிவும், விமரிசனம் செய்யும் படைப்பின் வீரியம் குறித்தும் தெளிவு வேண்டும். தனிமனித விரோதம், வெறுப்புகளினால் விமரிசனம் பாதிப்படையக் கூடாது. அப்படி தனிமனித விருப்பு வெறுப்புகளினால் பாதிக்கப்பட்டு விமரிசனம் தன் நிலை பிறழ்ந்து வெளிப்பட்டால் அது எவ்வளவு ஆதாரங்களோடு இருந்தாலும் எளிதில் சுயமுகம் காட்டிவிடும்.அதேபோல் வேண்டுமென்றே படைப்பில் அதற்கான நியாயங்கள் இல்லாதபோதும் வெறும் புகழுரைகளால் அர்ச்சனை செய்வதும் படைப்பைக் கேலிக்குரியதாக்கி விடும். ஏனென்றால் வெறும் அபிப்ராயங்களை விமரிசனம் என்ற பெயர் கொள்ள முடியாது.

படைப்பை அணுகும்போது படைப்பாளியைப் போலவே தன்னைக் கரைத்து, படைப்பைச் செரித்து, அது தரும் அநுபவ உணர்வினை பூரணமாக உணர்ந்து பின்னர் அதைத் தன் பேரறிவு கொண்டு விளக்கி, அதற்கான தர்க்கநியாயங்களை நிறுவி படைப்பிற்கு அதற்குரிய தகுதியை அளிக்க வேண்டும். விமரிசனங்களில் இரண்டு வகை உண்டு. ஆக்கபூர்வ விமரிசனம், அழிவுப் பூர்வ விமரிசனம். படைப்பாளியின் அடிப்படை நேர்மை மனித மேன்மைக்கானதாக இருக்கும்போது படைப்பு குறித்த நிறைகுறைகளை ஆக்கபூர்வமான வகையில் படைப்பாளி ஏற்றுக் கொள்ளும் வகையிலும், கற்றுக் கொள்ளும் வகையிலும், அடுத்த படைப்பினை இன்னும் சிறப்பாகச் செய்வதற்குத் தயார்படுத்தும் வகையிலும் இருக்கும்படிச் செய்யப் படுவது ஆக்கபூர்வ விமரிசனம்.

படைப்பாளியின் அடிப்படை நோக்கம் மானுட இழிவை, வக்கிரத்தைத் தன் இலக்காகக் கொண்டிருக்குமானால், அதை எவ்வளவுக்கெவ்வளவு தோலுரிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு மறைந்திருக்கும் அதன் கோரப்பற்களை வெளிப்படுத்தும் விதமாகவும், மனிதவன்மத்தை உள்நோக்கமாகக் கொண்ட படைப்புகளை அடையாளம் காட்டும் விதமாக அழிவுப் பூர்வ விமரிசனம் அமைய வேண்டும். இருப்பதிலேயே இது தான் மிகவும் கடினமான காரியம். இந்த மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் தான் எல்லாவித சித்து வேலைகளையும் காட்டுவார்கள். உண்மையோவென மயங்க வைக்கும் நிழல் தோற்றங்களை ஏற்படுத்துவார்கள். இவர்களின் உண்மைச் சொரூபத்தை உலகிற்கு தெரிவிக்க விமரிசகனுக்கு ஓயாத படிப்பும் தீராத தேடலும் வேண்டும்.

மனித சமூக வரலாறு குறித்த தெளிந்த ஞானம், கலையின் தோற்றம், வளர்ச்சி குறித்த அறிவு, படைப்பியக்கம் குறித்த இயங்கியல் படைப்பின் நுட்பங்கள் குறித்த கூருணர்வு, இவையெல்லாம் கொண்டு ஒரு விமரிசகன் இயங்க வேண்டும்.

ஒரே படைப்பில் கூட சில முற்போக்கான கூறுகளும், சில பிற்போக்கான கூறுகளும், இருக்கலாம். ஒரே படைப்பாளியே சில முற்போக்கான, மனிதமேன்மையை வேண்டும் படைப்புகளைப் படைத்து விட்டு, அவரே அவருடைய வேறு சில படைப்புகளை மோசமானதாகவும் படைத்திருக்கலாம். கருத்தளவில் முற்போக்காகவும் கலைரீதியில் வெறும் குப்பையாகவும் படைப்பு இருக்கலாம். வடிவத்தில் மிகச் சிறந்ததாகவும் உள்ளடக்கத்தில் மிக மோசமாகவும் இருக்கலாம். சாதாரண வாசகனை விடவும் விமரிசகன் இதனை உடனே கண்டு கொள்வான். அதற்குத் தேவையான பயிற்சியையும், உழைப்பையும் அவன் செலுத்த வேண்டும்.

எப்பேர்ப்பட்ட படைப்பையும் அதன் வேரிலிருந்து நுனிவரை இனங்கண்டு வெளிப்படுத்த வேண்டியது விமரிசகனின் வேலை. சில சமயம் இந்தக் காரியத்தினால் படைப்பின் தீ வாசக மனங்களில் பற்றிப் பிடித்து, செயல்திறன் மிக்க பௌதீக சக்தியாகவும் மாறக்கூடும். அது சமூக மாற்றத்துக்குத் துணை செய்யும் வல்லமை கொண்டதாக உருமாறும்.

1 comment:

  1. விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அருமையான பதிவு.
    என்னை மிகவும் ஈர்த்த வரிகள்:
    வாசகனைப் பொறுத்தவரை விமரிசனம் படைப்பை நெருங்கிச் செல்ல உதவுகிற பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். பாலமே பெருந்தடையாகவோ, முன் அபிப்ராயங்களை ஏற்படுத்துகிற பெருஞ்சுவராகவோ மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால் வாசகன் படைப்பிலிருந்து அந்நியப்பட்டு விடவோ, படைப்பை முன் முடிவுகளோடு அணுகவோ நேரிடும். அப்போது படைப்பை முழுமையாக அதன் அழகோடும் அசிங்கத்தோடும் வாசகன் தரிசிக்க முடியாமல் போகலாம். அப்படி நேருமானால் வாசனுக்கும், படைப்புக்கும், படைப்பாளிக்கும் பெரும் நஷ்டம்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு உதயசங்கர்.

    ReplyDelete