உன்னிடம் அதைச் சொன்னபோது
மூச்சு முட்டிச் செத்து மிதந்தன சொற்கள்
அப்போது தான் எனக்குத் தெரிந்தது
நான் அதைச் சொல்லிவிட்டேன் என்று
எப்படியும் சொல்லவேண்டியது தான்
என்றாலும் அப்படிச் சொல்லியிருக்கவேண்டியதில்லை
சந்தித்த முதல் கணத்திலேயே
இந்த இறுதிக் கணமும் சூல் கொண்டு விட்டது
ஆனாலும் இப்போது அதைச் சொல்லியிருக்க வேண்டியதில்லை
பாலைவெயிலின் கசகசப்பாகவிருக்கலாம்
முந்தின நாள் பிடித்த நீர்க்கோர்வையினால்
அடுத்தடுத்து வந்த தும்மல்களினால் இருக்கலாம்
எதிரே காற்றில் அலைவுறும் காய்ந்தமலரின் கடைசித்
துடிப்பாக இருக்கலாம்
சிரித்த உன் உதடுகளின் கீற்றில்
ஒளிந்திருந்த கைப்பாக இருக்கலாம்
எப்படியிருந்தாலும் அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை
அதுவும் அந்த நேரத்தில் சொல்லியிருக்கவேண்டியதில்லை
அந்தக் கணத்திற்குப் பெறுமதியான நிதானத்தையோ
சொற்களுக்கிடையான அமைதியையோ
ஆழ்ந்த உணர்ச்சியையோ
ததும்புகிற கடைசி முத்தத்தையோ
எதையுமே தராமல் எதையுமே பெறாமல்
அறிவின் கூர்வாளால் குத்திக் கிழித்த
நிணச் சொற்களால் அதைச் சொல்லியிருக்கவேண்டியதில்லை
ஒருவேளை சொல்லாமலும் இருந்திருக்கலாம்
கனவில் சுவைத்த அன்பின் ஒரு துளியைத் தேடி
வெறுமையின் இருள்வெளியில்
பேசாமலே பிரிந்திருக்கலாம் ஒரு நாள்
No comments:
Post a Comment