Monday, 28 May 2012

மறுக்கும் பக்குவம்

child-obesitykoke

உதயசங்கர்

 

இப்போது பெரியவர்களாக இருக்கும் பெரும்பான்மையோருக்கு தங்கள் பாலியகாலம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. எல்லா வீடுகளிலும் குஞ்சும் குறுமானுமாக குழந்தைகளின் நெருக்கடி. போதும் போதாத வருமானம், அப்போதும் இருந்த விலைவாசி, வேலையின்மை, நிரந்தரமான எதிர்காலப் பயத்திலேயே வாழ்நாளைத் தள்ளிக் கொண்டிருந்த பெற்றோர்கள். ஒண்டிக்குடித்தனம், வாடகை வீடு, தண்ணீர் பிரச்சனை, உணவுப்பற்றாக்குறை என்று ஏராளமான குறைகளுடனே வளர்ந்தவர்கள் இன்றிருக்கும் பெரியவர்கள். இதோடு மட்டுமா? வீட்டில் அடி உதை பள்ளிக்கூடத்தில் தண்டனைகள், வெளியில் குழந்தைகள் என்றாலே ஏளனம் என்று எப்போதும் மனம் சோர்வுறும் வகையிலேயே வளர்ந்த இன்றைய பெரியவர்கள் தங்களுடைய குழந்தைப்பருவம் போல தங்களுடைய குழந்தைகளுக்கும் அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் அது நியாயம் தான்.

தங்கள் பெற்றோரை விட சற்றே கூடுதலான வசதி வாய்ப்புகளைப் பெற்ற இன்றைய பெரியவர்கள், அதிலும் குறிப்பாக மத்தியதர வர்க்கப் பெற்றோர்கள், இன்னொரு விபரீதமான முடிவெடுத்து குழந்தைகளின் ஆளுமையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தாங்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த எதிர்மறைச்சொற்களான இல்லை முடியாது வேண்டாம் இவற்றைத் தங்களுடைய குழந்தைகள் கேட்கவே கூடாது என்று தீர்மானமான முடிவெடுக்கிறார்கள். தாங்கள் அடைந்த ஏமாற்றங்களைத் தங்களுடைய குழந்தைகள் அடையவே கூடாது என்று மனதுக்குள் சத்தியம் செய்து கொள்கிறார்கள். தனக்குக் கிடைக்காத எல்லாமும், தான் ஆசைப்பட்ட எல்லாமும் தங்களுடைய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றார்கள். இதன் விளைவாக தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த உணவு, சிறந்த உடை, சிறந்த கல்வி (?) சிறந்த இருப்பிடம் சிறந்த விளையாட்டுகள், சிறந்த பொழுதுபோக்குகள் இன்னும் சிறந்த சிறந்த என்று எல்லாவற்றிலும் மிகச் சிறந்தவற்றை தேர்ந் தெடுக்க ஆசைப்படுகின்றனர். படித்து நல்ல அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்ற மத்தியதர வர்க்கத்தினரின் குணநலன்களை யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ முதலாளிகளும், வியாபாரிகளும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே பெரும்பாலான இன்றைய பொருட்களின் விளம்பரங்களில் குழந்தைகள் வருகிறார்கள். நம்மிடம் அந்தப்பொருட்களின் சிறப்புகளைப்பற்றி ஒரு விஞ்ஞானியைப் போல ஆனால் குழந்தைத்தனத்துடன் எடுத்துரைக்கிறார்கள். அத்தோடு அந்தப்பொருள்தான் உலகத்திலேயே சிறந்த பொருள் என்றும் அதை வாங்குவதின் மூலமே பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையை செய்ததாக, அர்த்தமாகும் என்று எமோசனலாக, செண்டிமெண்டலாக, மனதைத்தொடுகிறார்கள் பல விளம்பரங்களின் முடிவில் பெருமிதமான உணர்வில் கண்கலங்கும் பெற்றோர்களின் குளோசப் முகங்களும், மகிழ்ச்சியில் திளைக்கும், பெற்றோர்களை நன்றிப்பெருக்கோடு அணைத்து மகிழும் குழந்தைகளின் குளோசப்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் மனநிலையும் குழந்தைகளின் மன நிலையும் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சாதாரணமாக எந்தப்பொருள் வாங்கினாலும் அந்தப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் நம்மிடம் கிடையாது. விளம்பரம் செய்தால் போதும் அது நல்ல பொருள்தான் அதிலும் சினிமா, கிரிக்கெட். நடசத்திரங்கள், குழந்தைகள், பெண்கள் வந்து சிபாரிசு செய்தால் அது கண்டிப்பாக மிகச்சிறந்த பொருளாகத்தான் இருக்கும் என்ற மூடநம்பிக்கை பெரும்பான்மையோருக்கு இருக்கிறது மூடநம்பிக்கை எதில் வேண்டுமானாலும் வரலாமே உடனே அந்தப்பொருளை வாங்கிக் குழந்தைக்குக் கொடுப்பதில் ஒரு ஆனந்தம், சாக்லேட், பி°கட், கோக், பெப்சி, பற்பசை, கொசுவர்த்தி, சோப், நகைகள், கார், கணினி, ஹெல்த் டிரிங்க்°, ஜங்க் புட்°, என்று எல்லாவற்றிற்கும் குழந்தைகள் வருகிறார்கள். பெற்றோர்களும் அகமகிழ்ந்து அவரவர் வசதிக்கேற்ப வாங்கித் தருகிறார்கள். பின்பு பெருமையுடன் “சாப்பிடும் போது எம்பையனுக்கு எப்பவும் கோக் இருக்கணும்..... என்ன சொல்ல முடியுது இந்தக்காலத்து பிள்ளைங்ககிட்ட..... என்றோ” இவ.... “இந்த சேவு மிக்சர் எல்லாம் சாப்பிட மாட்டா.... ஒன்லி சாக்லேட், பர்கர், பிட்ஸா, சாண்ட்விச்... அவ படிக்கிற °ஸ்கூல் இண்டர்நேஷனல் °ஸ்கூலாச்சே.... அதான்.....”

என்றோ பெருமையுடன் பேசுகிற பெற்றோர்களும், குழந்தைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடி, ஆங்கிலக்கனவானாக வளர்க்க நினைக்கும் பள்ளிக்கூடங்களும் தாய்மொழியை வேலைக்காரர்களின் மொழி என்று நினைக்கிற மனோபாவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சூழலும் சில பல தலை முறைகள் தமிழ் வாசிக்கத் தெரியாமலும், எழுதத்தெரி யாமலும், அப்படியே எழுதத்தெரிந்தாலும் எழுத்துப் பிழைகளும் அர்த்த விபரீதங்களும் நிறைந்ததாக எழுதுகிற தலைமுறைகள் வந்திருப்பதற்கு பெற்றோர்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற போதம் இல்லாமல் எதிர்காலத்தலைமுறைகளை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

கோக், பெப்சியில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட், ஹைட்ரேகுளோரிக் ஆசிட்டினால் இரைப்பையில் அரிப்பு, புண்கள் ஏற்படும் என்று தெரியாதா? சாக்லேட்டில் உள்ள கோக்கோவினால் குழந்தைகளின் பற்கள் சொத்தை விழுவது மட்டுமல்ல, பிடிவாத குணமும் அதிகரிக்கும் என்று தெரியாதா? ஜங்க்புட்°களால் உடல்பருமனும், சிலருக்கு கேன்சரும் வரும் என்றுதான் தெரியாதா? இப்படிக்கேட்டால் நிறைய்யப்பேர் அய்யய்யோ...உண்மையில் தெரியாது என்று சொல்வார்கள் இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் விளம்பரக்காட்சிகளின் மனோவியல் தாக்குதல்களுக்கு முன்னால் எப்போதோ கேட்கவோ, வாசிக்கவோ நேர்கிற அறிவார்ந்த, பகுத்தறிவு பூர்வமான விளக்கங்கள் எடுபடுவது சிரமம்தான்.

ஆனால் குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா? இந்தக்குழந்தைகள் பெரியவர்களாகி வெளியுலகை சந்திக்க நேர்கிற போது, ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தச் சமூகத்தின் குரூரம் முகத்திலறையும் போது என்ன ஆவார்கள் என்று யோசித்திருக்கிறோமா? எனவே குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கித் தருகிற, அங்கீகரிக்கிற மனநிலையைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும். குழந்தைகளிடம் மறுக்க வேண்டும். பக்குவமாக, மென்மையாக, ஆனால் அழுத்தமாக மறுக்க வேண்டும். குழந்தைகள் முதலில் ஏமாற்றமடையலாம். அழுது புலம்பலாம். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மௌனமாக ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் பெற்றோர்களுக்கு மறுக்கின்ற பக்குவம் வேண்டும். நல்ல விஷயங்கள் எது எது என்று பெற்றோர்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளிடம் கெட்ட விஷயங்களைப் பற்றி விளக்க முடியும். இதமான மனநிலையில் குழந்தைகளிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அவர்களுக்கு உண்டு. சொல்கிற விஷயம் குறித்து நமக்கு சந்தேகம் இருக்கக் கூடாது. தெளிவாக, பெருமிதமான உணர்வோடு அவற்றைப்பற்றி எடுத்துச்சொல்லும்போது அதே பெருமித உணர்வும் தெளிவும், பக்குவமும் குழந்தைகளிடம் ஏற்படும். தங்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு நல்ல விஷயங்களையேச் செய்கிறார்கள் என்ற நம்பிக்கை வளரும். அதற்கு முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுவரவேண்டும். அந்த விழிப்புணர்வைப் பெற பெற்றோர்கள் முன்வரவேண்டும் வருவார்களா?

4 comments:

  1. குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா?//

    மிகவும் சரியான உண்மையே இதிலும் சுற்றமும் சொந்தமும் வேறு நாம தான் கஷ்ட பட்டோம் நம்ம பிள்ளைங்க நல்லா இருக்க எப்படி வேணா கஷ்டப்படலாம் என்று உசுப்பேத்தி ஒரு வழி பண்றாங்க . எவ்வளவு தான் பீஸ் ஏத்தினாலும் பிரைவேட் ஸ்கூல் தான் பெஸ்ட் என நினைக்கும் சூழல் வந்துவிட்டது . அதுவல்லாது நடுத்தரவர்க்கம் எனினும் எல்லாம் காஸ்ட்ல்யாக இருக்கணும் என்று நினைபவர்கள் பெருகி வருகிறார்கள் .இவர்களை மாற்ற முடியாது . இதனால் கேடு வந்தாலும் அவஸ்தையோடு அனுபவிக்க கற்றுக்கொண்டார்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிக விரைவில் மாற்றம் வரும். அந்தத் திசை நோக்கிப் பயணிக்க, விழிப்புணர்வு ஏற்பட, வலுவான பகிர்தல் தேவை. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த உங்கள் வருகை, ஆதரவு, எனக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா.

      Delete