Sunday, 13 May 2012

கவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும் கண்ணனின் காதலும்

kavaskar 

எல்லோரையும் போல எங்களோடு சேர்ந்து ஹாக்கி தான் விளையாடிக் கொண்டிருந்தான் கண்ணன். கல்லூரிக்குச் சென்றதும் திடிரென்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கி விட்டான். அதற்கு எங்களையெல்லாம் கூப்பிடவுமில்லை. ஹாக்கி விளையாடும் போது எப்போதும் எங்களோடயே சுத்துற கண்ணன் கிரிக்கெட் விளையாடப் போகும்போது மட்டும் எங்களை யாரையுமே கூப்பிடவில்லை. அது மட்டுமில்லை, அவன் நாங்கள் எல்லோரும் விளையாடுகிற காந்திமைதானத்தில் விளையாடவில்லை. மேட்டுத்தெருவில் போய் சுந்தரேசனோடு விளையாடினான். மேட்டுத்தெரு முழுவதும் பிராமணர்கள் குடித்தனம் தான். சுந்தரேசனின் அப்பா வக்கீலாக இருந்தார். சுந்தரேசன் எங்களுடன் கல்லூரியில் புகுமுகவகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். கோ.வெ.நா.கல்லூரியில் எங்கள் செட்டில் தான் முதன்முதலாக கோஎஜூகேஷன் ஆரம்பித்தது. அதனால் கல்லூரியில் ரெம்பக் கண்டிப்பு. பெண்கள் வரும்போது நிமிர்ந்து கூடப் பார்க்கக் கூடாது. வாத்தியார்கள் எல்லோரும் கண்கொத்திப் பாம்பாக அலைந்து திரிந்து எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் கைகால்களைக் கட்டிப்போட்ட மாதிரி இருந்தது. அதுமட்டுமல்ல சாதாரணமாக நிமிர்ந்து பார்க்கும் பழக்கமே போய் விட்டது. எல்லோரும் தலையைக் குனிந்தபடியே ஓரக்கண்ணால் பார்த்தபடியே கல்லூரிக்குள்ளும் வெளியிலும் திரிந்தனர்.

எங்கள் ஓரக்கண் பார்வை வேறு ஒரு சிக்கலையும் ஏற்படுத்தியது. பல பேர் இந்தப்பார்வையைக் கவனித்து விட்டு தவறாக நினைத்துக் கொண்டு போகவும், சிலர் என்ன கண்ணுல ஏதும் கோளாறா? என்று கேட்கும்படியும் ஆயிற்று. கண்ணனின் நடவடிக்கையில் பெரும் மாற்றங்களைக் கவனித்தோம். ஏனோதானோவென்று நடையும் உடையும் கொண்டிருந்தவன், ரெம்பக் கோளாறா உடை உடுத்த ஆரம்பித்தான். தன்னுடைய கருத்த முகத்துக்கு மூன்று வேளையும் லக்மே காலமைன் கிரீம் பூசி எப்பவும் மூஞ்சியில் வெள்ளையடிச்ச மாதிரி திரிந்தான். ஸ்டைலாக இருப்பதற்காக குளித்து ஈரத்தலையில் சீப்பை வைத்து வரிவரியாக வளைவுகளை ஏற்படுத்த மெனக்கெட்டான். அது கழுதை காய்ஞ்சதும் மறுபடியும் சிலுப்பிக்கிட்டுதான் நின்னது. நாங்கள் சந்தேகப்பட்டோம். பய எங்கினியோ கவுந்துட்டான் போல இருக்கே.. அதுக்கு இன்னோர் காரணமும் இருந்தது. இப்பல்லாம் கண்ணன் எங்க கூட சேர்ந்து இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும் சுந்தரேசன் பய கூடத் தான் சுற்றினான். கிரிக்கெட்..கிரிக்கெட் கிரிக்கெட் எப்ப பார்த்தாலும் கிரிக்கெட் தான்.

ஒரு நாள் காலையில் ஆறரை மணி இருக்கும். கெமிஸ்ட்ரி நோட்டு வாங்குவதற்கு கண்ணனுடைய வீட்டுக்குப் போனேன். அவன் அங்கு இல்லை. அவனுடைய அம்மா அவன் சுந்தரேசன் வீட்டுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இவ்வளவு சீக்கிரமாகவா? அன்று கல்லூரியில் அவனிடம் கேட்டபோது காலை ஆறு மணியிலிருந்து சுந்தரேசன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பயிற்சி எடுப்பதாகச் சொன்னான். அதேபோல மாலை கல்லூரி விட்டு வந்தவுடன் போய் விடுவான். அவனுக்கு உண்மையிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் வந்து விட்டதோ என்ற சந்தேகமும் வராமலில்லை. கல்லூரி நூலகத்திலிருந்து டோனி கிரேக் எழுதிய - புத்தகத்தின் பெயர் மறந்து விட்டது - பேட்டிங் சம்பந்தமான புத்தகத்தைக் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தான். அப்போது பத்திரிகைகள், ரேடியோவைத் தவிர செய்திகளைத் தெரிந்து கொள்ள வேறு மீடியாக்கள் கிடையாது. எப்போதாவது தான் நேர்முக வர்ணனையை ரேடியோவில் கேட்க முடியும். அதுவும் ஆங்கிலம் பதினைந்து நிமிடங்கள் என்றால் ஹிந்தியில் அரைமணிநேரம் வர்ணனை ஒலிபரப்பாகும். கண்ணன் அந்த நேர்முகவர்ணனையைத் தவற விடுவதேயில்லை. அதிலும் கவாஸ்கர் விளையாடுகிறார் என்றால் இன்னும் சிரத்தையோடு கேட்டுக் கொண்டிருப்பான். என்ன விளங்கியதோ என்னவோ அவன் ஒரு நேர்முகவர்ணனையை எங்களுக்குச் சொல்லுவான். நாங்களும் அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவோம். வேறு வழி? எங்களூக்குத் தான் விளையாட்டே தெரியாதே. அவன் செய்ஞ்ச அலட்டலைத் தாங்கமுடியவில்லை. சுப்பையா தான் ‘ எல இது சரிப்பட்டு வராது.. நாமளும் இறங்கிற வேண்டியதான்னு சொன்னான்.

அப்புறம் என்ன? நாங்களும் கிரிக்கெட் விளையாடப்போனோம். அப்ப தான் பய வண்டவாளம் எங்களுக்குத் தெரிஞ்சது. சுந்தரேசன் வீட்டுக்கொல்லைப்புறத்திலிருந்து பார்த்தால் எங்க கூடப் படிக்கிற நளினியின் வீடு தெரிந்தது. அதுக்குத் தான் ஐயா இந்த உடை உடுத்தி, அலங்காரம் பண்ணி, அதகளம் பண்ணியிருக்காரு. அன்னிக்கு முழுதும் கண்ணனைக் கேலி செய்து கொண்டேயிருந்தோம். எல்லோரையும் போல முதலில் மறுத்தவன், கடைசியில் உண்மையை ஒத்துக் கொண்டான். நாங்களும் அவனை உற்சாகப்படுத்தினோம். அவன் கிரிக்கெட் விளையாட வந்ததென்னவோ நளினிக்காகத்தான் என்றாலும் கிரிக்கெட் அவனைப் பிடித்துக் கொண்டது. கிடைத்த நேரங்களில் எல்லாம் கிரிக்கெட் பயிற்சி எடுத்தான்.

ஒரு முறை ரேடியொ நேர்முக வர்ணனையில் கவாஸ்கர் ஸ்கொயர்கட் த பால் டு த ஃபென்ஸ் என்ற வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்த ஸ்கொயர்கட் என்ற வார்த்தை அவனைப் பிடித்துக்கொண்டது. டோனி கிரேக்கின் புத்தகத்தில் அதற்கான விளக்கம் படத்தோடு இருந்தது. ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே போகிற பந்தை ஃபேக்புட் போய் பேட்டை ஸ்கொயரான கோணத்தில் பிடித்து வருகின்ற பந்தை மிடில் ஆஃப் த பேட்டில் படுகிறமாதிரி கட் செய்கிற போது பந்து கல்லி திசைக்கும் பாயிண்ட் திசைக்கும் இடையில் பாம்பைப் போல சரசரவென ஓடிப் போகும். இதைப் படித்ததிலிருந்து கண்ணன் பயிற்சியின் போதெல்லாம் ஸ்கொயர்கட் ஷாட் அடிப்பதற்கே முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் அது அவ்வளவு சுலபமாக வரவில்லை.

கல்லூரி கிரிக்கெட் டீமில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினான். பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி எங்களுடைய கல்லூரியில் நடந்தது. அந்தபோட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டிருந்தது எங்கள் கல்லூரி. போட்டி நடந்த போது நளினி தவறாமல் ஆஜரானாள். கண்ணனுக்கு உற்சாகம் பொங்கிவிட்டது. அவனுக்காகத் தான் அவள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருகிறாள் என்று எங்களிடம் சொன்னான். நாங்களும் நம்பினோம். போட்டியில் அபாரமாக விளையாடியது எங்கள் கல்லூரி. அந்த ஆண்டு பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதைக் கல்லூரியின் ப்ரேயரின் போது அறிவித்த முதல்வர் அந்த அணியில் விளையாடியவர்களை கூப்பிட்டுப் பாராட்டினார். அன்று மாலை கல்லூரி முடிந்தபிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நளினி கண்ணனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கிறாள். அது போதாதா? கண்ணனுக்குத் தலைகால் புரியவில்லை. அதுக்கப்புறம் பெரும்பாலான நேரங்களில் சுந்தரேசன் வீட்டுக்கொல்லைப்புறம் தான் அவனுடைய வாசஸ்தலமாக இருந்தது. இவனுடைய நோக்கும்போக்கும் சுந்தரேசனுக்குத் தெரியாமலில்லை. அவனுக்கு ஒரு நம்பிக்கை. இந்தக் கருவாப்பயலப்போய் நளினி காதலிப்பாளா? அதனால் பெருந்தன்மையாக இருந்து விட்டான். ஆனால் அவனுடைய வீட்டில் அப்படி இருப்பார்களா என்ன? அவர்கள் சுந்தரேசனுக்குக் கொடுத்த கொடையில் சுந்தரேசன் கிரிக்கெட்டையே மறந்து விட்டான். இதற்குள் ஊருக்குள் ஒரு முக்கியமான கிரிக்கெட் விளையாட்டு வீரனாகிவிட்டான் கண்ணன். கோவில்பட்டி கிரிக்கெட் கிளப் அணியில் சேர்ந்து வெளியூர் அணிகளோடு போட்டிக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.

மற்ற நேரங்களில் சுந்தரேசன் வீட்டுக்கு முன்னால் ரோட்டில் இருந்த ஆலமரத்தடியில் இருந்தான். படிப்பதும் அங்கே தான். வேறு சில பையன்களைச் சேர்த்துக் கொண்டு அந்த மரத்தடியிலேயே கிரிக்கெட் பயிற்சியும் செய்தான். அப்போதும் கவாஸ்கரின் ஸ்கொயர்கட்டை விடாமல் பயிற்சி செய்தான். அத்துடன் ஒரு கண்ணை நளினியின் வீட்டில் வைத்திருந்தான். அவளூடைய வீட்டில் சின்ன அசைவு தெரிந்தாலும் உடனே அங்கே பார்ப்பான். நளினி எங்காவது வெளியே போனால் கூடவே போனான். அவளுடைய கடைக்கண் பார்வைக்காக அந்த ஆலமரத்தடியில் தவம் கிடந்தான். சில நாட்களில் எங்களுக்குப் போரடித்து விட்டது. கந்தசாமி தான் ” எல எள்ளு எண்ணெய்க்குக் காயுது.. நாம எதுக்குல எலிப்புழுக்கை மாதிரி கூடக் காயணும்..” என்று சொல்லி எங்களைத் தடுத்து விட்டான். ஆனாலும் வானிலை அறிக்கை மாதிரி அவ்வப்போது கண்ணன் எங்களிடம் அன்னன்னய நிலவரத்தைச் சொல்லி ஆலோசனைகள் பெற்றுக் கொள்வான்.

நளினி சினிமாவுக்குப் போனால் அவனும் சினிமாவுக்குப் போனான். அவள் ஃபேன்சி ஸ்டோருக்குப் போய் ஹேர்பின்னோ, வளையலோ வாங்கினால் இவன் பின்னாலேயே போய் சேஃப்டி பின் வாங்கினான். இரண்டு பேருமே தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் வந்து எங்களிடம் சொல்லி விளக்கம் கேட்பான். நாங்களும் அவனவனுக்குத் தோணிய மாதிரி விளக்கம் அளிப்போம். ஆனால் எல்லா விளக்கமும் அவனுக்குச் சாதகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அப்போது தான் அவனுடைய அன்னிய பொருளாதார நிலைமைக்கேற்ப செட் புரோட்டாவோ, வெறும் டீயோ கிடைக்கும். எனவே அவனுடைய காதல் ஜோதி அணையாமல் பார்த்துக் கொண்டோம். எவ்வளவோ பொழுதுகளை இது குறித்துப் பேசியே கழித்திருக்கிறோம்.

எங்கள் பரீட்சையெல்லாம் முடிந்து விட்டது. ரிசல்ட் வரும்வரை முழு நாளும் எங்களுக்குத் தான். ஒன்றாகவே ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். துலுக்கபட்டியில் உள்ள சிமிண்ட் ஃபேக்டரி அணியுடன் போட்டியென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை கண்ணன் கோவில்பட்டி கிரிக்கெட் கிளப் அணியோடு துலுக்கபட்டி போய் விட்டான். அந்தப் போட்டியில் இன்ஸ்விங் ஆகி வந்த பந்தை ஸ்கொயர்கட் செய்யப்போகிற மாதிரி ஆஃப் ஸ்டெம்ப்புக்குக் குறுக்கே போக பந்து மாயம் போல நாடியில் வந்து தாக்கியது. அவ்வளவு தான். பந்திலுள்ள தையல் வெட்டி ரத்தம் களகள வெனக் கொட்டியது. உடனே மருத்துவமனைக்குப் போய் தையல் போட வேண்டியதாகி விட்டது. அன்னிக்கு வீட்டிலும் அர்ச்சனை நடந்தது. அதனால் இரண்டு நாட்களாக ஆலமரத்தடிப்பக்கம் போக வில்லை. மூன்றாவது நாள் கன்ணன் அங்கே போனான். நளினியின் வீட்டில் எந்த அரவமும் இல்லை. அது மட்டுமில்லை வீடு பூட்டியிருந்தது. எங்கோ ஊர்வழி போயிருப்பார்கள் என்று நினைத்தானாம் முதலில். எதுக்கும் கேட்டு வைப்போம் என்று தற்செயலாக அந்தப்பக்கம் சுந்தரேசனிடம் கேட்டிருக்கிறான். அவன்,

“ உங்கிட்ட சொல்லலியா… அவா எல்லாம் குடும்பத்தோட காலி பண்ணிண்டு பெங்களூர் போயிட்டா “

என்று சொல்லி விட்டுப் போனானாம். போகும்போது ஒரு நமுட்டுச் சிரிப்பு வேறு சிரித்திருக்கிறான். கண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்திருந்த சமயத்தில் தான் நான் அவனைத் தேடிப் போனேன். அவன் அழுகிற மாதிரி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அந்தத் தெருவில் கண்ணனுடைய கிரிக்கெட் விளையாட்டுச் சேக்காளியான கிச்சான் வந்தான். கண்ணனிடம்,

“ அண்ணா ஸ்கொயர்கட் பிராக்டீஸ் பண்ணுவோமா? “ என்று கேட்டான். அதற்கு அந்த ஆலமரமே அதிரும்படியாகக் கத்தினான்.

“ ஒரு மயிரும் வேண்டாம். ”

2 comments:

  1. அருமையான பதிவு.
    அற்புதமான எழுத்து நடை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete