நிழல்
உதயசங்கர்
இப்போது இரண்டு மூன்று நாட்களாகவே
அந்த கரிச்சான்குருவிகளைக் காணவில்லை. எங்கே போயிருக்கும்? காலையில் அதன் பேச்சுச்சத்தம்
தான் பெரும்பாலும் சுகவனம் விழிப்பதற்குக் காரணமாக இருக்கும். அவன் படுத்துக்கொண்டே
அந்தச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருப்பான். கீச்ச்கீச்ச்ச் என்றோ கிகிகீகீ என்றோ இருந்தாலும்
உற்றுக்கவனித்தால் அதில் பலவேறுபாடுகள் தெரியும். அவைகளும் தங்கள் பாடுகளைப் பேசிக்
கொள்கிறது. சுகவனத்தின் பாடுகளைப் பேசிக்கொள்ள முருகேஸ்வரி இங்கில்லை. அவள் அவனுடன்
கோவித்துக்கொண்டு போய் ஆறுமாதம் ஆகிவிட்டது. எத்தனையோ முறை போய் கூப்பிட்டான். அவள்
வருவதாக இல்லை. அவளுடைய ஊர்ப்பக்கமாக மாற்றல் வாங்கிக்கொண்டு வரச்சொல்லி விட்டாள்.
அப்படியெல்லாம் நினைத்தவுடன் மாற்றல் கிடைக்கும் டிபார்ட்மெண்டிலா அவன் வேலை பார்க்கிறான்.
வெளியே காக்கைகளின் கரைச்சல் கேட்க ஆரம்பித்தது. வானம் தன் உறக்கம் கலைத்து சோம்பல்
முறித்து எழுந்திரிக்கப் பிரயத்தனப்பட்டது.
சுகவனம் குவாட்டர்ஸை விட்டு வெளியில்
வந்தான். எதிரே இருந்த பெரிய வாகைமரத்தின் இலைகளூடே சூரியனின் ஒளி சில்லரைகளை சிதற
விட்டிருந்தது. லேசான குளிர் உடலுக்கு இதமாக இருந்தது. அப்படியே நேரே முக்குக்குப்
போய் ஒரு டீ குடித்து கணேஷ் பீடியை இழுத்தால் சுகமாக இருக்கும். இந்த நினைப்பு வந்தவுடன்
வாய் நமநமத்தது. எழுந்து பின்வாசல் கதவைத் திறந்து கக்கூஸ் போனான். ஒண்ணுக்குப்போய்விட்டு
வந்து தொட்டியில் பிடித்து வைத்திருந்த தண்ணீரைக் கைகளில் அள்ளி அப்படியே முகத்தில்
அடித்தான். ஜிவுஜிவுன்னு முகத்தில் குளிர் பரவியது. மூக்குக்குள் நமைச்சல் எடுத்தது.
அவன் உள்ளே போய் துண்டை எடுத்து முகத்தைத் துடைப்பதற்குள் அடுத்தடுத்து நான்கைந்து
தும்மல்கள். அவனுடைய தும்மல்கள் ஊரைக்கூட்டி விடும். அவனுடைய உருவத்துக்கும் தும்மலின்
சத்தத்திற்கும் பொருத்தமே இருக்காது. முருகு கூட அவன் தும்மல் சத்தம் கேட்டுப் பலமுறை
பதறியிருக்கிறாள்.
“ மெல்லத்தும்மத் தெரியாதா… ஆளு
இருக்கறது நரைங்கான் போல போடற சத்தமோ பீரங்கி போல.. “ என்று பாதி உண்மைக் கோபத்துடனும்,
பாதி செல்லக்கோபத்துடனும் சொல்லுவாள். அதைக் கேட்டதும் சுகவனம் சோகமாகி விடுவான். அவனுடைய
தும்மல் சத்தத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால் முருகேஸ்வரி அவனை நரைங்கான்
என்று சொல்வதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. உண்மையில் அவன் அவளை விட உயரம் குறைவாக,
அவளை விட மெலிந்து ஒல்லியாக இருந்தான். அதை அவள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்
காட்டினாள். வெளியில் எங்கே போனாலும் சின்னப்பிள்ளையைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு
போகிற மாதிரி அவனைக் கையில் பிடித்துக் கொண்டு போவாள். நிற்க, நடக்க, ரோடு கிராஸ் செய்ய,
கடையில் என்ன பொருட்களை வாங்க வேண்டும் என்று எல்லாவற்றையும் அவளே சொல்லிக்கொடுப்பாள். அவனாக எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால்
அதை ஏற்றுக் கொள்ளமாட்டாள். குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். இதனால் எத்தனையோ முறை அவளைத்
தனியே போய் எதுவானாலும் வாங்கிக்கொள் என்று சுகவனம் சொன்னாலும் கேட்க மாட்டாள். அவன்
கூட வர வேண்டும். ஒவ்வொரு முறை வெளியே போய் விட்டு வரும்போதும் சண்டை போட்டுக்கொண்டே
வருவது வழக்கம். சுகவனத்துக்கு ஏண்டா இவளைக் கலியாணம் முடித்தோம் என்றிருக்கும்.
இதெல்லாவற்றையும் விட இரவில் அவனை
அவள் அவமானப்படுத்துகிற போது அவனுக்குச் செத்துவிடலாம் போல இருக்கும். தீவிரமாக அவன்
முயங்கிக் கொண்டிருக்கும்போது
“ உன்னைப் பாத்தா ஒரு ஆம்பிளை மாதிரியே தெரியலைய்யா… ஏதோ வெளாட்டுப்
பையனை மாரி இருக்கே…” என்று சொல்லிச் சிரிப்பாள்.
சுகவனத்துக்குப் பொங்கிவந்த உணர்வெல்லாம்
வடிந்து போய்விடும். உணர்ச்சியின் உச்சத்தில்
அவள் இறுக்கிப்பிடித்தால் சுகவனத்தால் அசையக்கூட முடியாது. அவளாக பிடியைத் தளர்த்தினால்
தான் உண்டு. இதற்காக அவன் என்னவெல்லாமோ செய்து
பார்த்தான். மீசையைப் பெரிதாக வைத்தான். கறி, மீன், பழம், காய்கறி, என்று கண்டமானிக்குத்
தின்றான். ம்ஹூம்.. உடம்பு மட்டும் தேறவில்லை. ஆனால் முருகேஸ்வரி இன்னும் தடித்துப்பெருத்து
விட்டாள். இப்போது இன்னும் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே போனது. அதற்குப் பல காரணங்கள்
முளைத்தன. அவனுடைய தங்கையின் திருமணத்திற்கு உதவி செய்தான். அவனுடைய அம்மாவுக்கு ஆஸ்பத்திரி
செலவு செய்தான். அவனுடைய தம்பிக்கு பள்ளிக்கூட ஃபீஸ் கட்டினான். என்று ஒவ்வொரு காரணங்களாக
முளைத்து வளர்ந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கலியாணம் முடிந்து நான்கு வருடங்களாகியும்
முருகேஸ்வரிக்கு குழந்தை இல்லை. பொழுதுக்கும் சண்டை போட்டுக்கொண்டிருந்தவள் திடீரென்று
ஒரு நாள் அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.
கொஞ்ச நாள் சுகவனத்துக்கு நன்றாகத்தான்
இருந்தது. அவன் இஷ்டப்படி எல்லாம் செய்து கொண்டு தூங்கி எழுந்து தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருந்தான். எப்போதாவது அவனுடன் வேலை பார்க்கிற மனோகரன் தருகிற நீலப்படக்குறுந்தகடுகளை
இரவு நேரத்தில் சைலண்ட் மோடில் பார்த்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தான். ஆனால் நாளாக
நாளாக முருகேஸ்வரி இல்லாமல் வாழ்க்கை போரடித்தது. என்ன சொன்னாலும் அவளுடைய சத்தமோ,
சண்டையோ இல்லாமல் வீட்டை வெறுமை சூழ்ந்திருந்தது. அவளுடைய ஞாபகம் வரும் நாட்களில் இரவில்
வீட்டிற்கு வரும் போது ஒரு குவாட்டர்பாட்டிலோடு வந்தான். முருகேஸ்வரியைப்போலவே குவாட்டர்
பாட்டிலும் புன்னகைப்பதாக இரண்டு பெக் உள்ளே போனதும் நினைத்துக் கொண்டான். பலமுறை ஊருக்குப்
போய் அவளைக் கூப்பிட்டுப்பார்த்தான். எத்தனையோ தடவை எப்படியெல்லாமோ சொல்லி அழைத்தும்
அவள் வருவதாக இல்லை. அவன் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் அவள் சொன்ன ஒரே பதில் அந்த
வீடு ராசியில்லை… அந்த ஊரும் ராசியில்லை.. அதான் புள்ள தங்க மாட்டேங்குது. என்பது தான்.
கடைசியில் அவன் ஊர் மாற்றலாகி
வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். அவனுடைய மேலதிகாரிகாரி சிவகுமார் சிபாரிசுக்
கடிதம் கொடுப்பதாகச் சொல்லி விட்டார். ஆனால் அவருக்கு ஒரு காரியம் செய்து தர வேண்டும்
என்று கேட்டார். அவரிடம் கடன் வாங்கியிருந்த ஒருத்தரிடமிருந்து கடனைத் திரும்ப வாங்கித்
தர வேண்டும். அவனுக்குப் புரியவில்லை.
“ ஏன் சார்.. நீங்க கேட்டீங்களா?
இல்லையா? “
“ சுகவனம் நானும் மறைமுகமாகக்
கேட்டுட்டேன்.. அவன் ரூபாயைப் பத்தி பேச மாட்டேங்கிறான்… நமக்கு கடுத்தமா பேசிப் பழக்கமில்லை…
அவன்கிட்டேருந்து நீ பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்தீட்டின்னா..நானே ஹெட்குவாட்டர்ஸ்ல
பேசி டிரான்ஸ்ஃபர் வாங்கித்தாரேன்… “
சுகவனம் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை.
“ இவ்வளவு தானே சார்… நான் வாங்கித்தாரேன்..
நாளைக்கிப் போவோம்..நீங்க ஆள மட்டும் காட்டுங்க…போதும்..”
சிவகுமார் நம்பவில்லை. சுகவனத்தைப்பார்த்துக்கொண்டே
சில விநாடிகள் அப்படியே இருந்தார். ஏதோ சொல்லக்கூடாத விஷயத்தைச் சொல்லக்கூடாத ஆளிடம்
சொல்லி விட்ட மாதிரியான அவஸ்தையில் இருந்தார். சுகவனம் அவரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய முகத்தில் கொஞ்சமும் சலனம் இல்லை. இதெல்லாம் சர்வ சாதாரணம் என்கிற மாதிரியான
பாவனை அவன் முகத்தில் இருந்தது. அதைப்பார்த்த பிறகு தான் சிவகுமாருக்கு இன்னும் நம்பிக்கையின்மை
கூடியது.
“ வேணாம் பரவாயில்ல சுகவனம்… நான்
லெட்டர் தாரேன்.. ஹெட்குவாட்டர்ஸ்ல கொண்டு போய் கொடு.. வேலை நடக்கும்…”
என்று விட்டேத்தியாகச் சொன்னார்.
ஆனால் சுகவனம் விடவில்லை.
“ சார் கண்டிப்பாக பணத்தை வாங்கிரலாம்…
நீங்க கவலையே படாதீங்க…. ஆள மட்டும் காட்டுங்க..”
என்று அழுத்தமாகச் சொன்ன சுகவனத்தைப்
பார்த்த சிவகுமார் மெல்லத் தலையாட்டினார்.
“ சரி சார் நாளைக்கி சாயந்திரம்
நாலுமணிக்குப் போயிருவோம்…. “
என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு
வெளியேறினான் சுகவனம். அவன் மனதில் ஏகப்பட்ட திட்டங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. ஒவ்வொன்றாய்
மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தான். இரவில் தூங்கினானா இல்லை விழித்திருந்தானா என்று
அவனுக்கே தெரியாது. நிறைய்ய கனவுகள். அதில் முருகேஸ்வரியும் வந்தாள்.
காலையில் கரிச்சான்குருவிகளின்
சத்தம் கேட்டே முழித்தான். சில நாட்களாகக் காணாமல் போயிருந்த குருவிகள் அன்று வாகை
மரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு சுகவனத்துக்கு எல்லாம் நல்லபடியாய்
முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மாலையில் சிவகுமார் அவருடைய பைக்கில்
கூட்டிப்போனார். நகரத்தின் எல்லையில் இருந்த ஒரு மோட்டலின் முன்னால் போய் நிறுத்தினார்.
அவனையும் அழைத்துக் கொண்டு மோட்டலுக்குள் போனார். ஒரு எந்த பஸ்ஸோ, காரோ, இல்லாததால்
மோட்டல் வெறிச்சோடியிருந்தது. ஒரு புழுங்கல் வாடை அடித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு
கரம்மசாலா வாடை பின்புறத்திலிருந்து கிளம்பி வந்து நாசியை அடைத்தது. சிவகுமார் ஒரு
டேபிளின் முன்னால் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தார். பின்னாலேயே போன சுகவனம்
அவருடைய சைகைக்காகக் காத்திருந்தான். அவர் உட்கார்ந்தபிறகு அவனைப்பார்த்து கையைக் காட்டினார்.
அவன் உட்கார்வதற்கான சமிக்ஞை. சுகவனம் அவருக்கு எதிரில் உட்கார்ந்தான். அவர்கள் உள்ளே
நுழையும்போது யாருமே இல்லை. ஆனால் அவர்கள் உட்கார்ந்த சில நொடிகளில் மோப்பம் பிடித்த
மாதிரி இரண்டு பேர் எங்கிருந்தோ வந்தார்கள். நிழலுருவங்கள் போல இருந்த அவர்களில் ஒருவன்
அவர்கள் இருந்த டேபிளுக்கு வந்தான். மற்றவன் அவர்கள் தலை மீது இருந்த காற்றாடியைச்
சுழல விட்டான். சிவகுமார் அருகில் வந்தவனிடம் என்ன சொன்னார் என்று தெரியாது. அவன் உள்ளே
போய் விட்டான்.
காற்றாடி சுழலுகிற சத்தம் மட்டும்
கேட்டது. மோட்டலின் இருளடைந்த பின்புறத்திருலிருந்து ஒரு உருவம் அவர்களைப் பார்த்து
நடந்து வந்து கொண்டிருந்தது. சுகவனம் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அருகில்
வர வர சுகவனத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்தவன் அவனைப்போலவே இருந்தான். சிறுத்து
மெலிந்து அவனை மாதிரியே நரைங்கானாக இருந்தான். சிவகுமாரைப்பார்த்ததும் அவன் குனிந்து
கும்பிட்டான். வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். சுகவனம் அவன் பற்கள் முன்னும்பின்னும்
தெத்தலும் கொத்தலுமாய் இருந்ததைக் கவனித்தான். பற்களில் லேசாக கருப்பு காரை படிந்திருந்தது.
அரக்குக்கலரில் சட்டையும் ஊதாக்கலரில் பேண்டும் போட்டிருந்தான். இரண்டிலுமே திட்டு
திட்டாக அழுக்கு படர்ந்திருந்தன. தோளில் ஒரு சிட்டித்துண்டை நான்காக மடித்துப் போட்டிருந்தான்.
“ சார் வாங்க..வாங்க… என்ன சார்
சாப்பிடுறீங்க.. “
“ என்னப்பா ராஜா… உன்னையப் பாக்கத்தான்
வந்தேன்..”
“ அதுக்கென்ன சார்.. ஒரு காபி
சாப்பிட்டுட்டு போங்க…”
அந்த ராஜா திரும்பிப்போவதற்குள்
சுகவனம் கூப்பிட்டான்.
“ நீங்க சாருக்கு ரூபாய் தரணுமா? “
“ ஆமாம் சார்…”
“ சொன்ன மாதிரி கொடுக்க வேண்டாமாய்யா..
நானும் வட்டிகொட வாங்கல் நடத்துறவன்தான்.. கிட்டத்தட்ட அஞ்சு லட்ச ரூபாய் வெளில நடமாடிட்டு
இருக்கு… நமக்கு நாணயம் முக்கியம்… நாணயமா இருக்கிற ஆளுக்கு எவ்வளவுன்னாலும் கொடுப்பேன்…
ரெண்டு வட்டி தான்.. அநியாயத்துக்கு ஆசைப்படறவன் இல்லை… நம்மள பத்தி சாருக்கு எல்லாம்
தெரியும்.. வேணா கேட்டுப்பாருங்க…”
அந்த ராஜாவிடம் இப்போது இன்னும்
பணிவு தெரிந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து கையில் போட்டுக் கொண்டான். சிவகுமார்
சுகவனத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சுகவனம் அப்படியே எல்லாவற்றையும் நிலாவட்டமாகப்
பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவனைப்பார்த்தால் நாடகத்தில் கந்துவட்டிக்காரன்
வேஷம் போட்டிருக்கும் பள்ளிக்கூடப்பையன் மாதிரி இருந்தான். அவன் நினைத்துப்பார்த்திராத
வார்த்தைகள் அப்படியே சரளமாக வந்தன. சுகவனம் மூச்சு வாங்குவதற்காகக் காத்திருந்த மாதிரி
அந்த ராஜா,
“ இல்ல சார் செலவுக்கு மேலே செலவு
சார்.. தங்கச்சிக்கு சீமந்தம், தம்பிங்க படிப்புசெலவு, அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவு,
போதாதாதுக்கு என் வூட்டுக்காரி நீ உன் குடும்பத்தையே கட்டி அழுன்னு சொல்லிட்டு அவ அம்மாவீட்டுக்குப்
போயிட்டா.. என்ன பண்றது சொல்லுங்க… இப்பக்கூட நீங்க தாரேன்னு சொன்னீங்கன்னா.. நான்
அப்படியே சாருக்குக் கொடுத்திருவேன்…”
அந்த ராஜாவின் குரலைக்கேட்கும்போது
கிட்டத்தட்ட சுகவனத்தின் குரல் மாதிரியே இருந்தது.
“ பார்க்கலாம்… முதல்ல வேற எங்கியாவது
வாங்கி சாருக்கு செட்டில் பண்ணுங்க.. அவர் ரெம்ப ஃபீல் பண்றாரு.. அவருக்கு ஒரு நெருக்கடி வந்தா யாருகிட்ட போயி கேப்பாரு..அதை
யோசிக்க வேணாமா…நம்மள மாதிரி தொழில் பண்றவங்கன்னா வேற மாதிரி.. சாரு பாவம்.. எங்கிட்ட
சொன்னாரு.. வாங்க சார் ஆளைப்பாப்போம்… நம்பிக்கையான ஆளாருந்தா கொடுக்கலாம்னு சொன்னேன்….
எனக்கும் உங்க நாணயம் தெரியணும்ல…. சீக்கிரம் கொடுக்க வழியப்பாருங்க…”
கொஞ்சம் கெத்தாகவே சொன்னான் சுகவனம்.
குரல் கனத்திருந்தது. சிவகுமார் சுகவனத்தின் பேச்சைக்கேட்டு நம்பமுடியாமல் அப்படியே
பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ராஜா கொஞ்சம் தயங்கி,
“ சாருக்கு நான் எப்படியாவது புரட்டி
இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கொடுத்துர்ரேன்.. எனக்கு நீங்க கொஞ்சம் தயவு பண்ணினா மாசாமாசம்
டாண்ணு வட்டியைக் கொண்டு வந்து கொடுத்துருவேன்… சார்..”
“ ம்ம்ம்.. பார்ப்போம்… முதல்ல
சாருக்கு செட்டில் பண்ணுங்க…”
“ கண்டிப்பா.. சார்.. உங்களை நம்பித்தான்
இருக்கிறேன்…”
என்று சொன்ன ராஜா வேக வேகமாக உள்ளே
போனான். சில நிமிடங்களில் இரண்டு காபியுடன் வந்தான். காபி ஸ்பெஷலாக இருந்தது. அவர்கள்
வெளியேறிய போது சுகவனத்தின் பின்னாலேயே வந்து மாறி மாறி வணக்கம் சொல்லி வழியனுப்பினான்.
முருகேஸ்வரியிடம்
எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் மாற்றலாகி வந்துவிடுவதாகச் சொன்னான். அவள் சந்தோசப்பட்டதாகத்
தெரியவில்லை. சுகவனம் தான் முருகேஸ்வரியை நினைத்து தினமும் இரவில் கிளர்ச்சியடைந்தான்.
ஒருவாரம் கழிந்திருக்கும்.
சிவகுமார் அவருடைய அலுவலகத்திற்கு அவனைக் கூப்பிட்டனுப்பினார். அவன் போயிருந்தான்.
அவருடைய முகத்தில் மகிழ்ச்சி அலையடித்துக்கொண்டிருந்தது. அந்த ராஜா பணத்தைக் கொண்டு
வந்து நேற்று கொடுத்ததாகவும், சுகவனத்தின் வீட்டு முகவரி கேட்டு வாங்கியதாகவும், நாளை
அல்லது மறுநாள் அவனுடைய வீட்டுக்கு வரலாம் என்றும் சொன்னார்.
“ ஏன் சார் அட்ரஸ் கொடுத்தீங்க…
அதான் ரூபா வந்துருச்சில்ல.. ஊருக்குப் போயிருக்கிறான் அது இதுன்னு எதாச்சிம் சொல்லி
அனுப்பிருக்க வேண்டியதானே.. ”
“ எனக்கு அந்த நேரத்தில எதுவும்
தோணல சுகவனம்…. கேட்டான் ..கொடுத்துட்டேன்.. நீ சமாளிச்சிக்கோ…”
சுகவனத்துக்குக் கோபம் வந்தது.
அவர் காரியம் முடிந்தது. இன்னும் அவனுடைய காரியம் இருக்கே.
“ சரி சார் நம்ம டிரான்ஸ்பர் விஷயத்தைச் சீக்கிரம் முடிச்சிக்
கொடுங்க.. சார்..”
“ ம்ம்ம்ம் ..இப்ப வந்திருக்கிற
ஏடிஎம் ஒரு சிடுமூஞ்சிங்கிறாங்க… பார்ப்போம் சமயம் பார்த்து விஷயத்தை சொல்றேன்…”
சுகவனம் எதுவும் பேசவில்லை. அமைதியாக
நின்றான். கோப்புகளைத் திருப்பிக்கொண்டிருந்தவர் எந்த சத்தமும் இல்லை என்றதும் போய்விட்டானா
என்று நிமிர்ந்து பார்த்தார். அவன் நின்று கொண்டிருப்பதைப்பார்த்ததும் சிரிக்க முயற்சி
செய்தவர் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டார். சுகவனம் மெல்லத்திரும்பி அறையை விட்டு
வெளியேறினான்.
மறுநாள் மாலை அவன் அலுவலகம் முடிந்து
குவாட்டர்ஸுக்கு வந்த போது வாசலில் அந்த ராஜா நின்று கொண்டிருந்தான். சுகவனத்துக்குத்
திடுக்கென்றிருந்தது. ஆனால் சமாளித்துக் கொண்டு முன்பின் பார்த்திராத மாதிரி யாரு என்று
தலையாட்டினான். ராஜா பணிவாக,
“ சார் நான் ராஜா அன்னக்கி சிவகுமார்
சாரோட வந்திருந்தீங்கல்ல.. “ என்று இரண்டு கைகளையும் வீசி சைகைகள் செய்து ஞாபகப்படுத்தினான்.
சுகவனம் அப்போது தான் ஞாபகம் வந்தது போல,
“ ஆங்… ஞாபகம் வந்திருச்சி… சரி..
சரி.. என்ன விஷயம்? “
“ சாருக்கு நான் சொன்ன மாதிரியே
ஒரு வாரத்திலே ரூபா கொடுத்திட்டேன் சார்..”
“ அப்படியா சரி… சந்தோசம்..”
“ சார்.. நீங்க ரூபா கொடுக்கறதா
சொன்னீங்க… அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்..”
“ அடடா.. இப்ப எனக்கு டிரான்ஸ்ஃபர்
வரப்போகுது…. அதனால நானே கொடுத்திருக்கிற பார்ட்டிககிட்டே திரும்ப வசூல் பண்ணிகிட்டிருக்கேன்..
புதுசா யாருக்கும் கொடுக்கிற மாதிரி இல்லயே..”
சுகவனம் சொல்லி முடிக்குமுன்னால்
இடைமறித்தான் ராஜா.
“ சார் அப்படிச் சொல்லாதீங்க..
சார் எங்க டிரான்ஸ்ஃபர்ல போனாலும் நான் கொண்டு வந்து வட்டியைக் கொடுக்கிறேன்… எங்க
அம்மா மேலே சத்தியம்..சார்..தங்கச்சிக்குப் பிரசவச்செலவு சார்.. குடும்பத்துல மூத்தபையனாப்
பொறந்தா இந்தப்பாடுதான்.. கொஞ்சம் மனசு வைய்ங்க சார்…”
“ இதுக்கு எதுக்கு அம்மா மேல சத்தியம்…
நான் கொடுக்கிறதா இருந்தாத்தான் கேட்டதும் கொடுத்திர மாட்டேனா… என்னய ஏமாத்திட்டு எவனும்
எங்கியும் போயிர முடியாது… ஆனா என்ன செய்றது நீங்க கேக்கிற நேரம் என் நிலைமை இப்படி
இருக்கே..”
“ ஐய்யோ சார் ஏற்கனவே பத்துவட்டிக்கு
வாங்கித்தான் நான் சாருக்குக் கொடுத்திருக்கேன்.. உங்ககிட்ட வாங்கித்தான் அதைக் கொடுக்கணும்..
கொஞ்சம் மனசு வைய்ங்க சார்.. நீங்க நினைச்சா கொடுக்கலாம்..”
சுகவனம் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தான்.
அப்புறம் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
“ ராஜா இங்க பாருப்பா.. கொடுக்கறதுன்னா
உடனே கொடுத்துருவேன்.. சும்மா நின்னுகிட்டு புலம்பிகிட்டிருக்கக்கூடாது.. போய் வேற
ஆளப்பாரு.. நானே கொடுத்ததை சீக்கிரம் வசூல்
பண்ணனுமேங்கிற கவலையில இருக்கேன்…”
“ சார்.. கொஞ்சம் பார்த்துச் செய்ங்க..சார்..”
இப்போது ராஜாவின் குரல் தழுதழுத்திருந்தது.
“ சரி போய்ட்டு வாப்பா ராஜா..
உங்கிட்ட பேசிட்டிருந்தா நான் வேற வேல பாக்க முடியாது..”
என்று கோபப்படுகிற மாதிரி குரலை
உயர்த்திச் சொல்லி விட்டு குவாட்டர்ஸுக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான். உள்ளே போகிறமாதிரி
இரண்டு அடி எடுத்து வைத்தவன் அப்படியே திரும்பி கதவிலுள்ள சாவித்துவாரத்தின் வழியே
பார்த்தான். ராஜா மூடிய கதவைப் பார்த்தபடியே அப்படியே நின்று கொண்டிருந்தான். சுகவனம்
உள்ளே போய் கைலியைக் கட்டிக் கொண்டு திரும்பிவந்து பார்த்தான். ராஜா இல்லை. மெல்லக்
கதவைத் திறந்தான். வெளியே வந்து பார்த்தான். அந்தத்தெரு முக்கில் சோர்ந்த நடையுடன்
ராஜா திரும்பிப் போய்க் கொண்டிருந்தான். சுகவனத்துக்கு அவன் நடந்து போவதைப்போல இருந்தது.
ஒரு கணம் தன் மீது, முருகேஸ்வரி மீது, ஏன் ராஜாவின் மீது கோபம் கூட வந்தது. காறித்துப்பினான்.
வாயிலிருந்து ஒலியில்லாமல் ஒரு கெட்டவார்த்தையை யார் மீதோ வீசினான். எதிரே இருந்த வாகைமரம்
சிறு அசைவும் இன்றி அமைதியாக நின்று கொண்டிருந்தது. இப்போது கரிச்சான்கள் எந்தக்கிளையில்
உட்கார்ந்திருக்கும். மரத்தின் கிளைகளூடே கண்களால் துழாவினான். எதுவும் தெரியவில்லை.
ஏதேதோ சிந்தனைகள் கோர்வையில்லாமல் மனதில் ஓடின. எதற்காக நிற்கிறோம் என்று தெரியாமல்
நெடுநேரம் அங்கே நின்று கொண்டிருந்தான். திடுமென நீண்ட பெருமூச்சு விட்டான். திரும்பிப்
பார்த்தான். தெரு முக்கில் ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள். அசப்பில் முருகேஸ்வரி மாதிரியே
இருந்தது.
நன்றி - நான்காவது கோணம்
புகைப்படம் - மோகன் தாஸ் வடகரா
No comments:
Post a Comment