Tuesday, 11 July 2017

தாத்தாவுக்குத் தாத்தா

தாத்தாவுக்குத் தாத்தா

உதயசங்கர்

நள்ளிரவு நேரம். தூங்கிக்கொண்டிருந்த கயல் உசும்பினாள். மெல்ல எழுந்து கழிப்பறைக்குப் போனாள். கழிப்பறை விளக்கைப் போட்டாள். உள்ளே நுழைந்தாள். உடனே அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். அப்பாவும் அம்மாவும் அலறியடித்துக் கொண்டு எழுந்தார்கள். அப்பா ஓடி வந்து
“ என்னம்மா..கயல்..என்ன? என்ன? என்னாச்சி? “ என்று பரபரப்புடன் கேட்டார். கயல் பயந்த முகத்துடன்,
“ பாத்ரூம்ல பூச்சி…பூச்சி..” என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். கயலின் அப்பா பாத்ரூமிற்குள் எட்டிப்பார்த்தார். சுவரில் உயரே ஒரு கரப்பான்பூச்சி நின்று கொண்டிருந்தது. தன்னுடைய உணர்கொம்புகளை அங்கும் இங்கும் ஆட்டியபடி தலையை உருட்டிக் கொண்டிருந்தது. உணர்கொம்புகளால் எதையோ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பா அதைப்பார்த்தார். உடனே திரும்பி,
“ என்னடா கயல்! இதுக்குப் போய் கத்தலாமா? கரப்பான்பூச்சி சுவத்தில தானே இருக்கு..”
“ எனக்குப் பயமாருக்கு.. அத விரட்டுங்கப்பா… “
” கயல்குட்டி… பூச்சி நம்மைவிட ரொம்பச் சின்னது.. அது தான் நம்பளப் பார்த்துப் பயப்படணும்… நாம் பயப்படலாமா? “
கயல் அழுகிற மாதிரி நின்றிருந்தாள். படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த கயலின் அம்மா ,
“ ஏங்க அந்தக்கரப்பானை விரட்டுங்க… உங்க விளக்கத்தைக் காலைல வைச்சிங்கோங்க..”
என்று சொன்னாள். அப்பா உடனே கழிப்பறைக்குள்ளே போய் அங்கேயிருந்த வாரியலை எடுத்து ஓங்கினார். சுவரில் இருந்த கரப்பான்பூச்சிக்கு வரக்கூடிய ஆபத்து தெரிந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டது. அப்பா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெளியே வந்தார்.
“ பூச்சியை விரட்டியாச்சி…”
கயல் பயந்தபடியே கழிப்பறைக்குள்ளே போனாள். திரும்பி வந்து ரொம்ப நேரத்துக்குத் தூக்கம் வரவில்லை. அந்தக்கரப்பான் பூச்சியே கண்ணுக்குள் தெரிந்தது. ச்சே! இந்தப்பூச்சிகளை எல்லாம் ஏன் தான் இயற்கை படைச்சதோ? இதனாலே என்ன பயன்? பார்க்கவே அருவெறுப்பாய்…ஐயே.. இப்படியே யோசித்துக் கொண்டிருந்த கயல் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.
கயல் கண்விழிக்கும்போது அவளுடைய உருவம் மாறியிருந்தது. அவள் இப்போது ஒரு சிறுபூச்சியாக மாறியிருந்தாள். அதுவும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத வெங்காயப்பாச்சாவாக மாறியிருந்தாள். அவளுக்கு முன்னால் சமையலறை மசாலா சாமான்கள் இருந்த கண்ணாடி பாட்டில்கள் இருந்தன. அவள் தன்னுடைய பின்னங்கால்கள் ஒரு உந்து உந்தி தவ்விக்குதித்தாள். கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் போய் விழுந்தாள். அங்கே பழைய நூலாம்படை இருந்தது. முன்னால் இருந்த சின்னக்கால்களால் முகத்தைத் துடைத்தாள். கண்களையும், தலையையும் உருட்டிப் பார்த்தாள். சற்றுத்தள்ளி ஏதோ ஈரமாய் இருப்பதைப்போல இருந்தது. அந்த ஈரத்தை நோக்கி மெல்ல நடந்தாள். அது அந்த வீட்டில் இருந்த கயல் என்ற சின்னப்பிள்ளை சிந்திய பால் துளி. அதன் அருகில் போனதும் பாலை தன்னுடைய சிறிய வாயினால் உறிஞ்சினாள். இத்தூணூண்டு சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டத்து. சின்ன வயிறு தானே. அப்படியே திரும்பி அந்தக்கேஸ் சிலிண்டர் அடியில் இருட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள்.
திடீரென அவளை யாரோ உசுப்பினார்கள். அவளுக்கு இருட்டிலும் பார்வை தெரிந்தது. அவளுக்கு அருகில் நீண்ட உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டு அங்கும் இங்கும் பரபரப்பாய்  அலைந்தது ஒரு கரப்பான் தாத்தா. வெங்காயப்பாச்சா அதைப்பார்த்து
“ ஏந்தாத்தா.. அங்கிட்டும் இங்கிட்டும் அலையறே.. சும்மா ஒரு இடத்தில கிடக்க முடியாதா..”
“ இந்த வீட்டில கயல்னு ஒரு பொண்ணு இருக்கா அவளுக்குப் பூச்சின்னாலே பிடிக்கமாட்டேங்கு… என்னைய அவள் பார்த்துட்டு ஒரே கூப்பாடு.. அவளோட அப்பா வேற விளக்குமாத்தை எடுத்துகிட்டு வந்துட்டாரு… தலை தப்பிச்சதே பெரிய பாடு..”
“ உனக்கு எவ்வளவு வயசாவுது தாத்தா?  “
என்று கயல் பாச்சா கேட்டாள். கரப்பான் தாத்தா முன்னங்கால்களால் தலையைச் சொறிந்தது. பின்னர் கரகரத்த குரலில்,
“ பூமி தோன்றிய பிறகு பூமியில தோன்றிய மூத்த உயிரினங்களில் நாங்களும் ஒண்ணு.. அதாவது சுமார் மூணு கோடி வருடத்துக்கு முன்னாடியே என்னோட மூதாதையர்கள் பூமியில பிறந்துட்டாங்க… இந்த உலகத்தில நாங்க இல்லாத இடமே இல்லை… நாலாயிரத்து அறுநூறு வகையான கரப்பான் பூச்சிகள் இருக்கோம். அதில முப்பது வகையான கரப்பான் பூச்சிகள் மட்டும் தான் மனிதர்களோட சேர்ந்து வாழப்பழகியிருக்கோம்… எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப காலத்துக்குப் பின்னால தான் மனுசங்க தோன்றினாங்க.. இயற்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கியிருக்கு…. “
என்று பெரிய விஞ்ஞானி மாதிரி மீசைகளை நீட்டி நீட்டி முழக்கியது.
“ அதெல்லாம் சரி தாத்தா… பூச்சிகளினால என்ன பயன்னு கயல்பாப்பா கேக்குறா? “ என்று கயல் பாச்சா கேட்டாள். அதைக்கேட்டவுடன் கரப்பான் தாத்தாவின் மீசை துடித்தது. சிலிண்டரின் கீழேயே வட்டமாய் சுற்றிச்சுற்றி வந்து வீரநடை போட்டது. பிறகு கயல்பாச்சாவை கோபமாய் ஒரு பார்வை பார்த்தது.
“ சரி சரி.. போதும் பதில் சொல்லுங்க தாத்தா? “
“ சொல்றேன்… இந்த உலகம் என்ன மனிதர்களுக்காக மட்டுமா உருவானது? மனிதர்களுக்கு பயன்படாத எல்லாமே அழிந்து விட வேண்டியதுதானா? எந்த உயிரும் மனிதர்களுக்காக உருவாகவில்லை… மனிதன் தான் எல்லா உயிர்களையும் அவனுடைய தேவைக்காகப் பயன்படுத்துகிறான்… இயற்கை தன்னை சமநிலைப்படுத்தவே எல்லாஉயிர்களையும் படைக்கிறது… எந்த உயிரும் கீழானதோ இல்லை மேலானதோ கிடையாது.. ஒவ்வொருத்தருக்கும் அவர் அவருக்கான வேலை இருக்கிறது…. தெரியுமா? “
என்று கீச்சிட்டது. கயல் பாச்சா காதுகளைப் பொத்திக் கொண்டது.
“ இன்னொரு விசயமும் இருக்கு..கயல் பாப்பா..எங்களப்பார்க்கும்போது அருவெறுப்பாப்பார்த்தாலும் எங்களை வச்சி என்ன என்னல்லாம் பண்ணுறாங்க தெரியுமா?  எங்களால எல்லா தட்பவெப்ப நிலையிலும் உயிர்வாழமுடியும்… அது மட்டுமல்ல அணுகுண்டு கதிரியக்கம் கூட எங்களைப் பாதிக்காது… அது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணுறாங்க.. உலகம் பூரா இருக்கிற அறிவியல் மாணவர்கள் எங்களை வைச்சி பாடம் படிக்கிறாங்க.. மருந்துகள் கண்டுபிடிக்கிறாங்க.. பல நாடுகளில் எங்களை உணவாச் சாப்பிடுறாங்க.. ஆனாலும் பார்த்த உடனே கொல்லணும்னு ஓடி வராங்க…”
என்று கரப்பான் தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிலிண்டரை நகர்த்துகிற சத்தம் கேட்டது. பளீரென வெளிச்சம். வெளிச்சத்தைப் பார்த்ததும் கரப்பான் தாத்தா விருட்டென்று ஓடி விட்டது. கயல் பச்சா தவ்விக்குதித்தது. அரையடி தூரம் தான் போக முடிந்தது. அதற்குள் கயல் கையில் வாரியலோடு நின்றாள். அதைப் பார்த்த கயல் பாச்சாவுக்கு குலை நடுங்கியது. கயல் வாரியலை ஓங்கினாள்.
“ வேண்டாம்.. வேண்டாம் கயல்.. நான் தான்.. நீ..தான்.. நான்..நீ..”
என்று கயல் பாச்சா உளறியது. கண்விழித்த கயல் சுற்றும்முற்றும் பார்த்தாள். எதிரே இருந்த சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
கயல் பாப்பா இப்போது கத்தவில்லை.

நன்றி - வண்ணக்கதிர்


.


1 comment: