காட்டிலே விநோதம்
உதயசங்கர்
முயலூரில் மிகப்பெரியக் காடு இருந்தது.
அந்தக்காட்டில் எக்கச்சக்கமான முயல்களும் மான்களும் இருந்தன. முயல்களும் மான்களும்
அதிகமாக இருந்ததால் அவற்றைத் உணவாகச் சாப்பிடும் சிங்கம், புலி, நரி, ஓநாய், குள்ளநரி,
செந்நாய், போன்ற மிருகங்களும் இருந்தன. அந்தக்காட்டில் ஒவ்வொரு வருடமும் முயலூர்க்காட்டின்
தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும். எப்போதும் சிங்கம் அல்லது புலி அந்தத் தேர்தலில்
நிற்கும். அப்பாவி முயல்களும், மான்களும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஒரு
தடவை சிங்கத்தைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். இன்னொரு தடவை புலியைத் தலைவராகத்
தேர்ந்தெடுப்பார்கள். தலைவர் யாராக இருந்தாலும் தினசரி தலைவர் குடியிருக்கும் குகைவீட்டுக்கு
இரண்டு முயல்களும், ஒரு மானும் உணவாகப் போய் விடவேண்டும். இது தான் முயலூர்க்காட்டில்
எழுதப்படுகிற முதல் சட்டம்.
இந்தச்சட்டத்தை சிங்கமும், புலியும்,
தலைவர் பதவி ஏற்றவுடன் போட்டு விடுவார்கள். சில முயல்களும், சில மான்களும், இந்தச்சட்டத்தை
எதிர்த்தன. எதிர்த்த முயல்களும், மான்களும் மறுநாள் காணாமல் போய்விட்டன. அதனால் மற்ற
சின்னப்பிராணிகள் வாயைத் திறக்கவில்லை. முயலூர்க்காட்டில் முயல்களும் மான்களும் எண்ணிக்கையில்
அதிகமாக இருந்ததினால் தினம் ஒன்றோ இரண்டோ பேர் சிங்கத்துக்கோ, புலிக்கோ உணவாகச் செல்வதைப்பற்றி
யாரும் கவலைப்படுவதில்லை.
இயற்கையில் எந்தத்தாவரமோ, பறவையோ,
மிருகமோ, புழுவோ, பூச்சியோ, எல்லாவற்றின் உற்பத்திப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக
இயற்கையே செய்த ஏற்பாடு தானே. இந்த ஆண்டு நரிக்கு தலைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து
விட்டது. உடனே முயல்கள் மான்கள் மாநாடு ஒன்றை நடத்தியது. நரி அழைக்கும் கூட்டம் என்பதால்
மான்களும் முயல்களும் நம்பிக்கையில்லாமல் தான் வந்தன.
கூட்டத்தில் நரி முழங்கியது.
“ சகோதர சகோதரிகளே! இன்னும் எத்தனை
நாளுக்கு சிங்கத்துக்கும் புலிக்கும் உணவாகிக் கொண்டிருப்பீர்கள்! நான் ஆட்சிக்கு வந்தால்
முதல் சட்டமே இனி யாரும் முயல்களையோ மான்களையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சாப்பிடக்கூடாது.
இயற்கை மரணம் அடைந்தாலும் சாப்பிடக்கூடாது. மிகவிரைவில் முயல் கோவிலும், மான் கோவிலும்
கட்டப்படும். அந்தக்கோவில்களை சிங்கமும் புலியும் சேர்ந்து கட்டி முடிக்க வேண்டும்.
என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் உங்களில் ஒருவரைக்கூட யாரும் சாப்பிட விடமாட்டேன்….”
நரியின் இந்தப்பேச்சைக் கேட்டதும்
முயல்களும் மான்களும் குழம்பின. உண்மையில் இப்படி நடக்குமா? குசுகுசுவென தங்களுக்குள்
பேசிக்கொண்டன. சந்தேகத்துடன் பார்த்தபோது நரி கை கூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தது.
கைகளை மேலே தூக்கி இரண்டு விரல்களைக் காட்டியது.
“ ஊஊஊஊஊஊஊஊஊஊ……..வளர்ச்சி! வளர்ச்சி!
இன்னும் வளர்ச்சி! முயல்களின் வளர்ச்சி! மான்களின் வளர்ச்சி! வளர்ச்சி ஒன்றே என் தாரகமந்திரம்!.ஊஊஊஊஊஊஊஊஊஊ.”
என்று பாட்டுப்பாடியது. நரியின்
ஊளைப்பாட்டு மான்களின் முயல்களின் காதுகளைக் கிழித்தது. அவைகள் எல்லாம் சேர்ந்து,
“ ஐய்யோ… நிறுத்து..நிறுத்து..
நாங்க..உனக்கே ஓட்டுப்போடுறோம்.. தயவு செய்து பாடாதே..”
கெஞ்சின. அதைக் கேட்ட நரிக்குப்
பெருமை பிடிபடவில்லை. பாட்டை நிறுத்தியது.
தேர்தல் நடந்தது. முயல்களும் மான்களும்
நரிக்கு வாக்குக் கொடுத்தமாதிரியே ஓட்டுப்போட்டன. தேர்தல் முடிவு வந்தது. முடிவைக்
கேட்டதும் சிங்கமும் புலியும் அதிர்ச்சியடைந்தன.
நரி ஆட்சிப்பொறுப்பு ஏற்றது. முதல்
சட்டமாக மான் முயல் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுகிறதா
என்று கண்காணிக்க செந்நாய்களின் காவல்படையை நியமித்தது.
அன்றிலிருந்து சிங்கம், புலி,
போன்ற மாமிச உண்ணிகள் பட்டினி கிடந்தன. காட்டு எலிகளைத் தின்று தங்கள் உயிரைக் காப்பாற்றின.
சில மாதங்களில் முயலூர்க்காட்டில் முயல்களின் எண்ணிக்கை கூடி விட்டது. முயல்களின் உணவான
புல்வெளி குறைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் முயல்கள். மரம், செடி, கொடி, பொந்து,
பொடவு, குழி, குகை, எங்கும் முயல்கள் குடும்பம் குடும்பமாக இருந்தன. அதே நேரத்தில்
திடீர் திடீரென்று நரி ராஜா அழைக்கிறார் என்று பல குடும்பங்களை செந்நாய்க்காவலர்கள்
கூட்டிக் கொண்டு போவார்கள். அதன்பிறகு அந்த முயல் குடும்பங்களை அங்கே பார்க்க முடியாது.
யாராவது கேட்டால் அவர்கள் வெளிநாடு போய்விட்டார்கள் என்று செந்நாய்க்காவலர்கள் சொன்னார்கள்.
சுட்டிமுயல் மூஜாவுக்கு நரியின்
மீது முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஒரு நாள் அமாவாசை இரவில் சுட்டிமுயல் மூஜாவின்
நண்பனான கீஜோவின் குடும்பத்தை செந்நாய்க்காவலர்கள் அழைத்துக் கொண்டு போவதைப் பார்த்தது.
இருளில் யாருக்கும் தெரியாமல் பின் தொடர்ந்தது.
நரியின் அரண்மனையின் பின்வாசலில்
இரண்டு காட்டெருமைகள் பூட்டிய வண்டி நின்று கொண்டிருந்தது. அந்த வண்டிகளில் செந்நாய்க்காவலர்கள்
கூட்டம் கூட்டமாகக் கூட்டிக்கொண்டு வருகிற முயல்களையும் மான்களையும் ஏற்றினர். அந்த
வண்டிகளில் மேலூர்க்காடு, கீழூர்க்காடு என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது சுட்டிமுயல்
மூஜாவுக்கு அருகில் வந்த இரண்டு செந்நாய்கள் கையில் கொண்டு வந்திருந்த ஒரு குட்டி முயலைக்
கடித்துத் தின்றன. ஒரு செந்நாய் கேட்டது,
“ சட்டம் நமக்குக் கிடையாதா? நீ
நினைச்சப்பல்லாம் ஒரு முயலைத் திங்கிறீயே..!”
“ ஹாஹாஹா எப்பவுமே சட்டம் மத்தவங்களுத்தான்..
இந்தா நரிராஜா என்ன செய்றாரு.. இந்த முயல்களையும் மான்களையும் வெளியூர்க்காடுகளுக்கு
திங்கறதுக்கு விக்கிறாரு… அவருடைய அரண்மனையில் பாதாள அறைக்குள்ளே ஏராளமான முயல்களும்
மான்களும் இருக்குது… அவருக்கு எப்ப வேண்டுமானாலும் திங்கலாம் இல்லையா?..எப்படி? சட்டம்
அரசாங்கத்துக்கு இல்லை. நாம எல்லாம் அரசாங்க ஊழியர்கள்…ஹ்ஹாஹ்ஹா..”
என்று சிரித்தது. அதைக்கேட்ட சுட்டிமுயல்
மூஜாவுக்கு வியர்த்தது. மெல்ல இருளில் நழுவித் தப்பித்து விட்டது.
மறுநாளிலிருந்து சுட்டிமுயல் மூஜா
மற்ற முயல்களிடமும், மான்களிடமும் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னது. முதலில் யாரும்
நம்பவில்லை. ஆனால் நாளாக நாளாக குடும்பம் குடும்பமாகக் காணாமல் போகும் முயல்களையும்
மான்களையும் பார்த்த மற்ற முயல்களும் மான்களும் நம்பத்தொடங்கினர். அடிக்கடி முயல்களும்,
மான்களும் செந்நாய்களோடு சண்டை போடவும் செய்தன.
அடுத்த தேர்தலும் வந்தது. மறுபடியும்
நரி சிரித்துக் கொண்டே வந்தது. முன்பு சொன்னதைப்போலவே உறுதிமொழி கொடுத்தது. நரி சொன்னதை
யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால் இந்த முறை முயல்களும் மான்களும் சேர்ந்து
சுட்டிமுயல் மூஜோவை தேர்தலில் நிற்க வைத்தன.
அப்புறம் என்ன?
சுட்டிமுயல் மூஜோ தேர்தலில் வெற்றி
பெற்றது. உடனே மான்களும் முயல்களும் சேர்ந்து சிங்கம், புலி, நரி, செந்நாய் எல்லோரையும்
முயலூர்க்காட்டை விட்டுத் துரத்திவிட்டன.
நன்றி - வண்ணக்கதிர்
“
சிறு பிள்ளையானேன்
ReplyDelete