சூரியனை மறையுங்கள்
உதயசங்கர்
பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்த
கோடையூர் நாட்டு ராஜாவுக்கு குப்புறராஜா என்று பெயர் வந்து விட்டது. எப்படி அந்தப்பெயர்
வந்தது என்று செந்நாப்புலவர் ஒரு புராணமே எழுதிவிட்டார். அவருடைய பெயர் மாறியதுக்கு
என்ன காரணம்? எல்லாம் அந்தச் சூரியனுக்குத் தான் வெளிச்சம்.
கோடையூர் நாட்டில் கோடைகாலம் தொடங்கி
விட்டது. வெயில் சுட்டெரித்தது. நாடு முழுவதும் மரங்களே இல்லை. அதோடு ஏரி, குளங்கள்,
கண்மாய், குட்டை, கிணறு, ஆறு, என்று எதுவும் இல்லை. ஒரு காலத்தில் அந்த நாட்டில் மரங்கள்
நிறைய இருந்தன. ஏராளமான ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும், குட்டைகளும் கிணறுகளும்
இருந்தன. எவ்வளவு வெயிலாக இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் கிடைத்து வந்தது. ஆற்றில்
தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிற்கு முன்னால்
மரங்கள் இருந்தன. வீட்டில் புழங்குகிற தண்ணீர் அந்த மரங்களுக்குச் சென்று விடும். ஒவ்வொரு
தெருவிலும் ஒரு குட்டையோ, குளமோ இருந்தது.
காடுகளில் தாம்போதி என்று சொல்லக்கூடிய நீர்வழிகள் ஒவ்வொரு குட்டைக்கோ, கண்மாய்க்கோ,
குளத்துக்கோ, மழைக்காலங்களில் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும். எனவே மழைக்காலத்தில் நீர்நிலைகள்
நிறைந்து ததும்பும். அதனால் மக்கள் கஷ்டப்படவில்லை.
திடீரென குப்புறராஜாவின் கஜானாவில்
பணம் இல்லை. பணம் இல்லை என்றால் ராஜாவால் ஆடம்பரமாக வாழமுடியுமா? எனவே நாட்டிலுள்ள
அரசாங்க நிலங்களை பணக்காரர்களுக்கு விற்றார். அதில் ஏரிகள் விற்கப்பட்டன. குளங்கள்
விற்கப்பட்டன. கண்மாய்கள் விற்கப்பட்டன. குட்டைகள் விற்கப்பட்டன. மரங்கள் நிறைந்திருந்த
மலைகள் விற்கப்பட்டன. அதில் எல்லாம் பெரிய பெரிய காங்கிரிட் கட்டிடங்கள் தோன்றின. வற்றாத
ஜீவநதியாக இருந்த கோடையாற்றை பக்கத்து நாட்டு குளிர்பானக்கம்பெனிக்கு விற்றார். இது
எல்லாம் போக மீதி இருந்த அரசு நிலங்களை ராஜா வெயிலோனும் மந்திரிகளும் பங்கு போட்டு
எடுத்துக் கொண்டனர். மக்கள் பாவம்! என்ன செய்வது என்று தெரியவில்லை.
எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள்.
மருந்துக்குக்கூட மரங்களில்லை. எங்கும் தார்ச்சாலைகள் வெயிலில் உருகி பளபளத்தன. மண்ணைக்
கண்ணால் பார்க்க முடியவில்லை. கோடைமழை கூட சாலைகளில் ஓடி சாக்கடையில் கலந்து வீணாகப்
போனது. நாட்டில் குடிநீருக்குப் பஞ்சம் வந்தது. வெயிலின் தாக்கத்தினால் நோய்கள் பரவின.
குப்புறராஜாவுக்கு வேனல்கட்டி வந்து விட்டது. அதுவும் உட்காருகிற இடத்தில் வந்துவிட்டது.
அதனால் எப்போதும் குப்புறப்படுத்துக் கொண்டே எல்லா வேலைகளையும் பார்த்தான். குப்புறப்படுத்துக்
கொண்டே சாப்பிட்டான். குப்புறப்படுத்துக்கொண்டே தூங்கினான். குப்புறப்படுத்துக்கொண்டே
குளித்தான். அரசவைக்குக்கூட கட்டிலில் குப்புறப்படுத்துக்கொண்டே வந்து அரசவைக்கூட்டங்களை
நடத்தினான்.
ராஜா குப்புறபடுத்தால் மக்கள்
என்ன ஆவது? மந்திரிகள், புலவர்கள், சேனாதிபதிகள், சேவகர்கள், மக்கள் என்று எல்லோரும்
தவழ்ந்து சென்று ராஜாவின் முகத்துக்குப் பக்கத்தில் போய் பேசினார்கள். நாட்டுமக்கள்
அதுவரை வெயிலோன் என்று பெயர் பெற்றிருந்த ராஜாவுக்கு குப்புறராஜா என்று பட்டப்பெயர்
வைத்து விட்டார்கள். வேனல்கட்டிகள் எந்த மருந்துக்கும் குணமாகவில்லை. ஒன்று மாற்றி
ஒன்று வந்து கொண்டேயிருந்தது. குப்புறராஜா அரண்மனை வைத்தியர்கள் அனைவரையும் அழைத்தார்.
ஆங்கில வைத்தியர், சித்தவைத்தியர், ஆயுர்வேத வைத்தியர், ஹோமியோபதி வைத்தியர், யுனானி
வைத்தியர், என எல்லோரிடமும் ஆலோசனை கேட்டார்.
எல்லோரும் ஒரே குரலில் சூரியனின்
வெப்பம் குறைந்தால் தான் வேனல்கட்டி குணமாகும் என்று சொல்லிவிட்டார்கள். மந்திரிசபையைக்
கூட்டினான். எல்லாமந்திரிகளும் குப்புறப்படுத்துக் கொண்டே வந்தார்கள். எல்லோருக்குமே
வேனல்கட்டி. அரசவைக் கூட்டம் குப்புறப்படுத்துக்கொண்டே நடந்தது. சூரியனின் வெப்பத்தைக்
குறைக்க என்ன வழி? யோசித்தார்கள்.யோசித்தார்கள். யோசித்தார்கள். ஏழுபகல், ஏழு இரவு
யோசித்தார்கள். அப்போது அறிவியல்துறை அமைச்சர் ஒரு ஆலோசனை சொன்னார்.
“ பேசாமல் சூரியனை மறைத்து விட்டால்!”
” எப்படி? எப்படி? எப்படி? ” என்று
குப்புறராஜா ஆவலுடன் கேட்டார்.
“ நாடு முழுவதும் ஒரு இடம் பாக்கி
விடாமல் பெரிய பந்தல் போட்டு விட்டால் சூரிய ஒளி எப்படி வரும்? அதுவும் தெர்மாக்கோல்
அட்டைகளை வாங்கி ஒட்டி ஒட்டிப் பந்தல் போட்டு விட்டால் சூரியன் நுழைவானா? வெயில் குறைந்து
விடும். வேனல்கட்டிகளும் ஆறிவிடும்.” என்று அறிவியல்துறை அமைச்சர் சொன்னார். குப்புறராஜாவுக்கு
மகிழ்ச்சி. இன்னும் ஒரு வாரத்துக்குள் நாடு முழுவதும் பந்தல் போட உத்தரவு பிறப்பித்தார்.
கஜானாவில் இருந்து பணத்தை வாரி இறைத்து அரசு அதிகாரிகள் பந்தல் போட்டனர். ஒருபக்கம்
ஒட்டியபோது மற்றொரு பக்கம் பிய்த்துக்கொண்டு போனது. நாடுமுழுவதும் தெர்மாக்கோல் அட்டைகள்
பறந்து மழை மாதிரி விழுந்தன. அதைப் பார்த்து மக்கள் சிரித்தனர்.
குப்புறராஜாவுக்கு வெட்கம் பிடுங்கித்
தின்றது. தான் செய்த தவறு புரிந்தது. அவர் உடனே. சூரியனை மறைப்பதற்கு யார் நல்ல ஆலோசனை
சொல்கிறார்களோ அவர்களுக்கு தலைமை அமைச்சர் பதவி அளிப்பதாக நாடு முழுவதும் தண்டோரா போடச்சொன்னார்
கோடையூர் நாட்டு எல்லையில் இருந்த குடிசையில்
செல்லையாத்தாத்தா வசித்து வந்தார். அவர் தண்டோரா அறிவிப்பைக் கேட்டார்.
அவர் அரசவைக்குச் சென்றார். குப்புறராஜாவிடம் இருபது
வருடங்களுக்கு முன்னால் இருந்த நாட்டு வரைபடத்தைக் கொண்டுவரச்சொன்னார். அந்த வரைபடத்தில்
இருந்த மாதிரி ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், கிணறுகளை உண்டாக்கச்சொன்னார்.
புதிதாக குட்டைகளை வெட்ட உத்தரவு இடவேண்டும் என்று சொன்னார். எல்லாவீடுகளிலும் மழைநீர்
மண்ணில் இறங்க ஏற்பாடுகள் செய்யச்சொன்னார். எல்லோர் வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்கள்
வைத்து வளர்க்கச் சொன்னார். ஆற்றிலிருந்து யாருக்கும் ஒரு சொட்டு நீர் விற்கக்கூடாது
என்று சொன்னார். குப்புறராஜா அவர் சொன்னதையெல்லாம் கேட்டான். மக்களும் செல்லையாத்தாத்தா
சொன்னபடிக் கேட்டார்கள்.
அடுத்த ஐந்து வருடங்களில் கோடையூர்
நாட்டில் சூரிய ஒளியே உள்ளே புக முடியாத அளவுக்கு மரங்கள், அடர்ந்திருந்தன. நீர்நிலைகள்
எப்போதும் நிறைந்திருந்தன. குப்புறராஜா இப்போது நிமிர்ந்தராஜாவாகி விட்டார். அவர் சொன்னமாதிரி
செல்லையாத்தாத்தா தலைமை அமைச்சர் ஆகிவிட்டார். கோடையூர் நாடு குளிரூர் ஆகி மக்கள் மகிழ்ச்சியாக
வாழ்ந்தனர்.
நன்றி - பட்டம்
அருமை.
ReplyDeleteகோ