Friday, 4 August 2017

ஆனைக்கிணறு தெரு

ஆனைக்கிணறு தெரு

உதயசங்கர்
பதினைந்து வருடங்களுக்குப்பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடிக்கு ஊரின் முகம் மாறிவிட்டது. பேரூந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர் தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாக தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும். நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடி கூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார்.  தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்துடனே டீ ஆத்துவார். வடை போடுவார். பேசுவார். காசுவாங்கி கல்லாவில் போடுவார். சுந்தருக்கும் அவனுடைய சேக்காளிகளான மணி, மாரியப்பன், இவர்களுக்கு மட்டும் எப்போதும் டீ கடன் தான். ஒரு சமயம் கூட காசு கொடுத்துக் குடித்ததில்லை. கரீம் பாய் எப்போது காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். கணக்குப் பார்த்த மாதிரியே தெரியாது. அவர்கள் தான் கணக்கு நோட்டில் எழுதுவார்கள். கொடுக்கும்போது கழித்து எழுதுவார்கள். கரீம் பாயின் ஏலக்காய் டீயும், செய்யது பீடியும், தகிக்கும் அந்தத்தகரக்கொட்டாயும் அருகிலேயே இருந்த கட்டைமண் சுவரும், அவர்களுடைய வாழ்க்கையில் எத்தனையெத்தனை கனவுகளை சிருஷ்டித்திருக்கும்.
இப்போது தெருவின் துவக்கத்தில் ஆனைக்கிணறு தெரு என்று நீலநிறபலகை அம்புக்குறி போல விரலை நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது எந்தப்பலகையும் கிடையாது. ஆனால் ஊருக்கே தெரியும். ஆனைக்கிணறு தெரு. சுந்தர் பிறந்து வளர்ந்தது இந்தத்தெருவில் தான். இந்தத் தெருவின் ஒவ்வொரு அடியிலும் அவனுடைய பாலியகால வாழ்வின் ரேகைகள் அடர்த்தியாய் அப்பிக்கிடந்தன. வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராவது கணித்துச் சொல்லிவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா என்ன?
 அப்பாச்சியின் மரணம் தான் சுந்தரின் மனதில் விழுந்த முதல் அடி. அதற்குப்பின் மிகக்குறுகிய காலத்திற்குள் சுந்தரின் அப்பா திடீரென இறந்து குடும்பத்துக்கு அதிர்ச்சியளித்தார். அவர் குடும்பத்துக்காகவும், அவருக்காகவும் வாங்கி வளர்த்து வந்த கடன்கள் பெரும்பாறைகளென உருண்டு வந்து குடும்பத்தின் முன்னால் உட்கார்ந்து கொண்டன. மூச்சு விடவும் நேரம் இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் கொத்திக்கொண்டிருந்தார்கள்.  சுந்தரும் அம்மாவும் கலியாணத்துக்குக் காத்திருந்த அக்கா செம்பாவும் ஒரு ஐந்தாம்பிறை இரவில் ஆனைக்கிணறுத்தெருவை விட்டு தலைமறைவானார்கள். அவர்களுடைய குச்சுவீட்டுக்கு ஒட்டி ஓடிய வாய்க்கால் முடியும் இடத்தில் இருந்தது ஆனைக்கிணறு. அந்த ஆனைக்கிணறு சாட்சியாகத்தான் ஓடிப்போனார்கள். அதில் தான் அம்மா, அக்கா, ஏன் அப்பாச்சி கூட அவளுடைய சிறுவயதில் குடிதண்ணீர் எடுத்தார்கள்.
நல்ல உயரமான சுற்றுச்சுவருடன் உயரமான மேடை கட்டி ஆனைக்கிணறு கம்பீரமாக இருக்கும். சுற்றிலுமிருந்த பத்து தெருக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்தது ஆனைக்கிணறு தான். எப்போதும் பெண்கள் கூட்டம் மொய்த்துக்கிடக்கும். கிணற்றின் இரண்டு பக்கமும் இரண்டு உருளிகளில் நல்ல வடக்கயிறு தகரவாளியுடன் கிடக்கும். அதுபோக ஏராளமான பேர் சொந்தமாகக் கயிறும் வாளியும் போட்டு இறைத்துக் கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் இறைப்பு நடந்து கொண்டேயிருக்கும். பத்து தெரு பெண்களையும் ஆனைக்கிணற்றில் பார்க்கலாம். அதனால் அந்தப்பத்து தெருவிலிருக்கும் ஆண்களையும் அங்கே பார்க்கலாம். அநேகமாக வீட்டிலிருக்கும் அத்தனை பேருமே தண்ணீர் சுமந்தார்கள். குழந்தைகள் நடைபழகியதுமே சின்னச் செப்புக்குடங்களை அல்லது சொம்புகளை அல்லது  தகரக்குடங்களை இடுப்பில் வைத்து தண்ணீர் எடுத்து விளையாடினார்கள். கொஞ்சநாட்களில் அந்தக்குடங்களோடு ஆனைக்கிணற்றுக்கு வந்து விட்டார்கள். வீட்டில் இருக்கும் நாலைந்து சிமெண்டு தண்ணீர்த்தொட்டிகளில் நிறைந்திருக்கும் தண்ணீரில் குழந்தைகள் எடுத்து வரும் ஒரு சொம்புத்தண்ணீரும் தன் பங்காக விழுந்திருக்கும்.
சுந்தர் பள்ளிக்கூடம் படிக்கும்போது அம்மாவிடம் கேட்டிருக்கிறான்.
“ ஏம்மா அந்தக்கிணறுக்கு ஆனைக்கிணறுன்னு பேரு வந்தது..”
“ சித்திரைத்திருளா வரும்போது தென்காசியிலிருந்து யானை வரும். அந்த யானை நம்மூருக்கு வந்தா எப்பவும் இங்கதான் தண்ணி குடிக்கும்.. அதனால ஆனைக்கிணறுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க..”
என்று சொன்னாள். ஆனால் தன்னுடைய பாம்படக்காதுகளை ஆட்டிக்கொண்டே வேறு ஒரு கதை சொன்னாள் அப்பாச்சி. செண்பகக்கோட்டை ராஜாவுக்கு தெய்வானை என்று ஒரு மகள் இருந்தாள். அழகும் அறிவும் நிறைந்த அவளுக்குக் கலியாணம் முடிக்க எட்டுத்திசையும் பொருத்தமான இளவரசனைத்தேடி ஆள் அம்பு பரிவாரங்களை அனுப்பி வைத்தான் ராஜா. ஆனால் பாவி மகள் இளவரசிக்கு ராஜாவின் படையில் ஒற்றுவேலை பார்த்துக்கொண்டிருந்த வீரன் என்ற பகடை மீது ஆசை. பகடைக்கும் இது தெரியும். அவனும் அப்படியிப்படி இளவரசி கூட பழகினான். ரகசியம் வெளியாகிவிட்டது. இளவரசி தான் காட்டிக்கொடுத்துவிட்டாள். அவள் வீரனோடு பழகியதில் சூலியாகி விட்டாள். அவ்வளவு தான் ராஜாவுக்கு தன்னுடைய பரம்பரை இழிவு பட்டதாக நினைத்தான். அப்போது எல்லாம் புரோகிதர்கள் வைச்சது தான் சட்டம். உடனே அவர்கள் தான் பரம்பரை இழிவைப்போக்க வழி சொன்னார்கள். வீரனைப் பிடிக்க முடியவில்லை. அவன் தப்பித்து விட்டான். இதுவரை அவன் போக்கிடம் எதுவெனத் தெரியாது. ஆனால் பாவம் இளவரசி.
வறண்ட பொட்டலாகக் கிடந்த இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்டச்சொன்னான் செண்பகக்கோட்டை ராஜா. அந்தக்கிணற்றில் ஒரு சொட்டு தண்ணீர் ஊறவில்லை. புழுதி பறந்தது. வறண்ட அந்தக்கிணற்றில் ஒரு குடம் புனித நீரை ஊற்றச் சொன்னார்கள் புரோகிதர்கள். இளவரசி தெய்வானையும் அவர்கள் சொன்னபடியே புனிதநீர்க்குடத்தைச் சுமந்து கொண்டு கிணற்றருகில் சென்றாள். அவள் குனிந்து ஊற்றிக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து யாரோ தள்ளி விட்டமாதிரி இருந்தது. அவள் வீரா என்று அலறியபடி உள்ளே விழுந்தாள். அவளுடைய அலறல் சத்தம் அடங்குவதற்குள் கிணற்றின் தூரில் அடைபட்டிருந்த ஊற்றுகளின் கண்கள் திறந்தன. அருவியிலிருந்து சோவென நீர் பாய்ந்து விழுவதைப்போல ஊற்றுகளிலிருந்து நீர் மேல்நோக்கி எழுந்தது. கிணற்றின் விளிம்பு வரை நீர் ததும்பியது. ஆனால் உள்ளே தள்ளிவிடப்பட்ட இளவரசி தெய்வானையைக் காணவில்லை. எப்படி மாயமாய் மறைந்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப்பார்த்த புரோகிதர்கள் ஊரை விட்டே ஓடி விட்டார்கள். முதலில் தெய்வானைக்கிணறாக இருந்தது நாளாவட்டத்தில் ஆனைக்கிணறாகி விட்டது என்று சொன்ன அப்பாச்சி இடுப்பிலிருந்து பொடிமட்டையை எடுத்துப்பிரித்து ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து ஒரு சிட்டிகை பொடியை அள்ளியெடுத்து மூக்கில் திணித்தாள். சுந்தருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். அவன் எழுந்து பையன்களிடம் இந்தக்கதையைச் சொல்லத் தெருவுக்கு ஓடினான்.
ஆண்டு முழுவதும் இரவும் பகலும் இறவையாகிக் கொண்டிருக்கும் ஆனைக்கிணறு. இரவும் பகலும் பெண்களின் பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, சண்டை, காதல், என்று ஒரு மனிதச்சந்தையின் அத்தனை குணாதிசயங்களையும் ஆனைக்கிணற்று மேடையில் பார்க்கலாம். ஆனால் அத்தனை சத்தமும் இல்லாமல் மயானமாக சிலநாட்கள் ஆனைக்கிணறு மாறிவிடும். ஆளரவம் இல்லாமல் சின்னச்சத்தம் கூட பெருங்கூப்பாடாகக் கேட்கும் நாள் வந்தது என்றால் ஆனைக்கிணற்றில் யாரோ ஒரு பெண் மிதக்கிறாள் என்று அர்த்தம். அவன் பலதடவை பார்த்திருக்கிறான். தண்ணீரில் தலைமுடி மிதந்தலைய, புடவையின் முந்தானை விழுந்த பெண்ணின் துயரைச்சொல்வதைப்போல மேலும் கீழும் முங்கி எழுந்து கொண்டிருக்கும். அந்தக்காட்சி அவன் கண்களை விட்டு அகல ரெம்ப நாட்களாகும். அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த ராணியக்கா ஒரு நாள் காலையில் ஆனைக்கிணற்றுக்குள் கிடந்தாள். கால்களைக் கயிற்றால் கட்டியிருந்தாள். புடவையை நன்றாகக் கழுத்துவரை இறுக்கியிருந்தாள். உடலை வெளியே எடுத்துப்போட்டிருந்தார்கள். அவளுடைய புருஷன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.
ராணியக்கா வேலை பார்க்கிற தீப்பெட்டிக்கம்பெனியில் கூட வேலைபார்க்கிற ஒரு ஆணோடு தொடர்பு படுத்திப் பேசியிருக்கிறான் அவளுடைய புருஷன். அவளால் தாங்க முடியவில்லை.  
பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த பேச்சியம்மாள் தன் கைக்குழந்தையோடு ஆனைக்கிணற்றில் விழுந்து இறந்துபோனாள். பக்கத்துவீட்டுக்காரி தன்னுடைய பிள்ளையை திட்டிவிட்டாள் என்ற கோபம் அவளுக்கு. மேட்டுத்தெருவில் இரவில் தனியாக வந்த பெண்ணைப்பலவந்தப்படுத்தி, கையையும் காலையும் கட்டிக்கொண்டு வந்து ஆனைக்கிணற்றில் போட்டு விட்டார்கள். யார் என்றே தெரியவில்லை. தெப்பக்குளத்தெருவில் இருந்து வந்து அக்கா, தங்கை, இரண்டுபேரும் ஒருவரையொருவர் சேர்த்து கட்டிக்கொண்டு விழுந்து இறந்துபோனார்கள். ஆனைக்கிணறு மரணக்கிணறாக மாறிக்கொண்டிருந்தது. மாசம் ஒருத்தர் இறந்து போனார்கள்.  கணவனுடன் சண்டை, பக்கத்துவீட்டுக்காரியின் ஏச்சு, கள்ளக்காதல், குழந்தைகள் சண்டை, கடன் தொல்லை, இப்படியே ஆயிரம் காரணங்கள் இருந்தன. எல்லாக்காரணங்களின் முடிவில் ஒரு பெண் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். ஊரில் பத்து கிணறுகள் இருந்தன. ஆனால் எல்லாத்தெருப்பெண்களும் ஆனைக்கிணற்றிலேயே தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
நிறைய்ய வீடுகளில் பெண்கள் சாமியாடினார்கள். தெய்வானை வந்திருப்பதாகச் சொன்னார்கள். ராணி வந்திருப்பதாகச் சொன்னார்கள். பேச்சியம்மாள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதைச்செய் இதைச்செய் என்று ஆணையிட்டார்கள். என்ன செய்தும் ஆனைக்கிணற்றின் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் உடல்களை காவு வாங்கிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சிக்கும் சாமி வந்தது. தலையை விரித்துப்போட்டு உட்கார்ந்த நிலையிலேயே ஆடினாள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  ஊஊஊஊஊ ஆஆஆஆஆ என்று வாயால் காற்றை ஊதினாள். அம்மா பயபக்தியுடன் அப்பாச்சி முன்னால் நின்று கும்பிடுவதை முதல் முறையாகப் பார்த்தான் சுந்தர். ஒரு நாளும் அம்மா அப்பாச்சியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. எப்போது அவளைப்பார்த்து விட்டாலும் வெளியில் யாருக்கும் கேட்காதபடிக்கு வைவாள். அவள் வைவது அப்பாச்சிக்குத் தெரியும். ஆனால் ஏதாவது விசேச நாட்கள் என்றால் அப்பாச்சிக்கு சாமி வந்து விடும். அப்போது அம்மா உண்மையான பக்தியுடன் அப்பாச்சியின் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொள்வாள். இப்போது தெய்வானை பழிவாங்குகிறாள் என்று அப்பாச்சி சொன்னாள். நூத்தியெட்டு தேங்காயை உடைத்து சேலைஎடுத்து வைத்து கும்பிட வேண்டும் என்று சொன்னாள். தெருக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து காசு பிரித்து அதையும் செய்து பார்த்தார்கள்.
 சுந்தர் ஒருநாள் சாதாரணமாக அப்பாச்சியிடம் கேட்டான்.
“ ஏன் அப்பாச்சி பொம்பிளங்க மட்டும் ஆனைக்கிணத்துல விழுந்து சாகறாங்க. அவங்க செத்தா எல்லாம் சரியாயிருமா? .”
அதைக்கேட்டதும் அப்பாச்சி கொஞ்சநேரத்துக்கு எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்கள் கலங்கின. கண்களைத் துடைத்துக்கொண்டே,”
“ பொம்பிளங்கள படைச்ச கடவுளும் ஆம்பிள தானே.. பிறகு என்ன செய்யமுடியும் பொம்பிளங்க தலைவிதி அவ்வளவு தான்… செத்தா எல்லாம் சரியாயிரும்.. பிரச்னையும் தீந்திரும்… திருடியும் நல்லவளாயிருவா….ஏன் தெய்வங்கூட ஆயிருவா ”
என்று சொன்னாள். ஆச்சியின் தழுதழுத்த அந்தக்குரல் சுந்தரின் மனதை ஏதோ செய்தது. ஆனால் ஆனைக்கிணறின் துயரம் தீரவில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆனைக்கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வருகிற கூட்டம் குறைந்தது.
காலம் இருண்டது. அப்பாச்சியும் ஒரு நாள் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். எப்போதும் அம்மாவின் அலட்சியத்தையும், சுடுசொற்களையும், கேட்டுப்பழகியவள் தான் அப்பாச்சி. அதைப்பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. ஆனால் அன்று என்னவோ தெரியவில்லை. அப்பா ஏதோ பேசியிருக்கிறார். கேவலம் மூக்குப்பொடி மட்டை விவகாரம். மூக்குப்பொடி வாங்க காசு கேட்ட அப்பாச்சியைப் பார்த்து அப்பா,
“ நீயெல்லாம் இருந்து ஏன் கழுத்தறுக்கே… இந்த வயசில மூக்குப்பொடி ஒரு கேடா?.. மனுசந்தன்னால கண்ணுமுழி பிதுங்கிக்கிட்டு வாரேன்… என்னமோ இனிமேத்தான் சாதிக்கப்போற மாதிரி…”
என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்று முழுவதும் மோட்டைப்பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அப்பாச்சி. தரையில் எதையோ தேடுவதைப்போல விரல்களால் பரசிக் கொண்டேயிருந்தாள். சில சமயம் இடுங்கிய கண்களில் கசிந்த நீரை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். அம்மா அன்று அப்பாவைக் கடிந்தாள். அப்பாச்சியிடம் வாஞ்சையாய் பேசவும் செய்தாள். அவளே சுந்தரிடம் காசு கொடுத்து எஸ்.ஆர்.பட்டணம் பொடி மட்டையை வாங்கி வரச்சொல்லி அப்பாச்சியிடம் கொடுத்தாள். அப்பாச்சி அதைக் கையில் வாங்கி அருகில் வைத்துக்கொண்டாள். ஆனால் அன்று முழுவதும் பொடிமட்டையைப்பிரிக்கவில்லை. இதையெல்லாம் அம்மா தான் அப்பாச்சி இறந்த வீட்டில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் இதை எதையும் கவனிக்கவில்லை. அவன் பாப்புலர் டைப் இன்ஸ்டிடியூட்டில் டைப் முடிந்து வரும் வனஜாவின் ஞாபகமாகவே இருந்தான். மணியின் யோசனைப்படி இன்று வனஜாவிடம் எப்படியும் காதல் கடிதத்தைக் கொடுத்து விடவேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டும் தான் அன்று இருந்தது. அதனால் அப்பாச்சியை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. மறுநாள் காலையில் அம்மாவின் வார்த்தைகளற்ற அலறல் சத்தம் கேட்டபிறகு தான் சுந்தருக்கு உணர்வு வந்தது.
சுந்தர் எதற்கும் அழுதோ கலங்கியோ பழக்கமில்லாதவன். எல்லாவற்றையும் உள்ளேயே அமுக்கி வைத்துக்கொள்வான். முகம் மட்டுமே அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று காட்டும். ஆனால் அப்பாச்சியின் தற்கொலை அவனை உலுக்கிவிட்டது. அவளுக்கு குறைந்தது எழுபத்தைந்து வயதாவது இருக்கும். இந்த வயதில் ஆனைக்கிணற்றின் மேடையில் ஏறி ஒரு ஆள் நெஞ்சுயரம் இருக்கும் சுவரில் ஏறி உள்ளே விழுவதென்றால் எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும். அவன் உடைந்து அழுதான். கண்கள் ஈரமாகிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சியின் மடியில் உட்கார்ந்து புரண்டு வளர்ந்தவன் அவன். அவள் சொல்லும் கதைகளில் வரும் இளவரசிகளையும், இளவரசர்களையும், பேய்களையும் பூதங்களையும் அவன் அப்படி நேசித்தான். அப்பாச்சியின் பல்லில்லாத வழுவழுப்பான குரலில் வழுக்கி உறக்கத்தின் மௌனக்குளத்தில் மெல்ல மூழ்குவான் சுந்தர். அவளிடமிருந்து வரும் மூக்குப்பொடியின் மணம் அவனுக்கு ரெம்பப்பிடிக்கும். சிலசமயங்களில் தடுமம் பிடித்திருக்கும் போது அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு மூக்குப்பொடி உறிஞ்சக்கொடுப்பாள்.
அவனை விட அப்பாதான் நொறுங்கிப்போய்விட்டார். வெகுநாட்களுக்கு அவருடைய முகம் குராவிப்போய் இருந்தது. உள்ளுக்குள் அவருடைய ஆவி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக் கொண்டிருந்தது. அப்பாச்சி இறந்த ஒரு வருடத்துக்குள் ஏகப்பட்ட காரியங்கள் சடுதியில் நடந்தேறின. வாடகை கொடுக்க முடியாமல் நான்குவீடுகள் மாறினார்கள். அப்பா வேலை பார்த்துவந்த ராஜகுமாரி ஜவுளிக்கடை வற்றிப்போனது. இனி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை என்று முதலாளி வாசலைக்காட்டினார். விசுவாசம் நீண்ட நாள் என்ற இரண்டு கயிறுகளில் கட்டிய ஊஞ்சலில் இப்பவோ பிறகோ என்று ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் முதலாளி சுந்தரின் அப்பாவுக்கும் வாசல் இருக்கும் திசையைக் காட்டும் முன்னாடியே அப்பா பெரிய வாசல் வழியே உலகத்தை விட்டுப்போய் விட்டார்.
சுந்தர் கரீம்பாய் கடை இருந்த இடத்தில் புதிதாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரேயா தேநீரகம் முன்னால் நின்றான். ஒரு கணம் கரீம்பாய் கண்முன்னே தோன்றினார். ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்தான். டீ மாஸ்டரிடம்,
“ ஒரு டீ ஸ்ட்ராங்கா… மலாய் போட்டு..”
என்று சொன்னான். அவர் அவனை ஊருக்குப் புதிது என்று கண்டு கொண்டார். கரீம்பாய் டீக்குத்தனிச்சுவையே மலாய் தான் என்று சுந்தர் சொல்வான். வேறு யாரும் கேட்கமாட்டார்கள். அவனைப்பார்த்ததுமே மலாய் போட்டு ஸ்டிராங் டீ கொடுத்துவிடுவார் கரீம்பாய்.
டீக்கடை தாண்டி வலதுபுறம் திரும்பினால் ஆனைக்கிணறு இருக்கும். இப்போதும் இருக்குமா? அவன் எதிர்பார்த்த மாதிரியே ஆனைக்கிணறு இல்லை. அப்படி ஒரு கிணறு இருந்ததற்கான எந்தச்சுவடும் இல்லாமல் அங்கே ஒரு அழகான அடுக்குமாடிக்குடியிருப்பு எழுந்து நின்றது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
சித்தி சொன்ன அடையாளங்களை வைத்து வீட்டைக்கண்டு பிடித்தான். சித்தப்பா இறந்து மூன்று மாதங்களாகி விட்டது. இப்போது எப்படி அந்தத் துக்கத்தை அனுஷ்டிப்பது என்று புரியாமல் குழம்பிப்போய் தான் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்தான். வருத்தமான முகத்தை அணியச் செய்த முயற்சி தோல்வியடைந்து கொண்டிருப்பதைச் சில நொடிகளிலேயே அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் சித்தி சிலநிமிடங்கள் கூட அந்தச் சூழ்நிலையின் தர்மசங்கடத்தில் அவனை மாட்டி விடவில்லை. சித்தி பெரிய பேச்சுக்காரி. அவளால் காலாவதியான அந்த சோகத்தைத் தொடர முடியவில்லை.
வீட்டின் குசலங்களை விசாரித்து விட்டு ரகசியம் பேசுகிற தொனியில்,
“ சுந்தா.. ஆனைக்கிணறு இருந்த இடத்தைப் பார்த்தியா… ஏழுமாடிக்கட்டடம்….”
என்றாள். சுந்தரும் அவளை மாதிரியே தாழ்ந்த குரலில்
“ ஆமா… சூப்பரா இருக்கு சித்தி.. யாரு ஓனரு..” என்று கேட்டான்.
“ யாரு.. நம்ம சம்முகம் கவுன்சிலர் அவந்தான் அந்த இடத்தை வளைச்சி கட்டிடம் கட்டிட்டான்.. ம்ஹூம்.. கட்டி என்ன பிரயோசனம்? “
” ஏன் சித்தி..? “
“ இப்பயும் அந்த மாடிக்கட்டிடத்திலே திடீர் திடீர்னு பொம்பிளக செத்துப்போறாளுக… போனமாசம் அஞ்சாவது மாடியில ஒரு பொம்பிள தீக்குளிச்சி செத்தா…நேத்திக்கி கூட மூணாவது மாடியிலேர்ந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சிட்டா… புருசங்கூட சண்டையாம்….அந்தத் தெய்வானை சாமியான இடமாச்சே… சும்மா விடுவாளா? “
என்று மிக முக்கியமான ரகசியத்தைச் சொல்வதைப்போல சொல்லிக் கொண்டிருந்தாள் சித்தி. சுந்தர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. மனம் கசந்தது. பின்னர் ஒருவித வெறுப்பு கவிய மெல்ல வாயைத்திறந்து,
“ இது ஆண்களின் உலகம் சித்தி…..” என்றான்.
அவனை மலங்க மலங்க பார்த்தபடியே “ என்ன சொல்றே நீ..” என்றாள் சித்தி.

 நன்றி- ஆனந்த விகடன்

No comments:

Post a Comment