Thursday 17 August 2017

தையல்சிட்டின் பாட்டு

தையல்சிட்டின் பாட்டு

உதயசங்கர்

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் எந்த அவசரமும் இன்றி எழுந்தாள் பிரியா. பேஸ்டும் பிரஷும் எடுத்துக் கொண்டு வீட்டின் புறவாசலுக்கு வந்தாள். பிரியாவின் வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. ஒரு எலுமிச்சை மரம், ஒரு தேக்கு மரம், ஒரு பப்பாளி மரம் ஒரு முருங்கை மரம் என்று அடர்த்தியாய் இருந்தது. வெயில் வருவதே தெரியாது. தினசரி அதிகாலையில் குயில்களின் கூகூகூகூ சத்தம் விட்டு விட்டுக் கேட்கும். அதே போல செம்போத்தின் சத்தமும், காகங்களின் கரைதலும், தவிட்டுக்குருவிகளின் சளபுள சளபுள சத்தமும் தேன்சிட்டின் ட்வீக்…ட்வீக்…ட்வீக்.. என்ற சத்தமும், தையல்சிட்டின் ட்ட்ட்ட்ட்டீவீக்… என்ற சத்தமும்  இனிமையான சேர்ந்திசை சங்கீதம் போல கேட்டுக்கொண்டிருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே தான் பள்ளிக்குப் புறப்படுவாள் பிரியா. ஆகா! நம்ம வீட்டில் தான் எத்தனை உயிர்கள்?
குயிலைப் பார்க்கவே முடியாது. முருங்கையிலோ, தேக்கிலோ மறைந்து நிற்கும். பிரியாவுக்கு அதன் வாலோ, சிறகோ தான் தெரியும். பார்த்து விடலாம் என்று அவள் அசைந்தால் போதும் விருட்டென்று பறந்து விடும். செம்போத்தும் அப்படித்தான். ஆனால் அது பிரியாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டால் பறந்து விடும். அப்பப்பா செம்போத்தின் கண்களும் சரி, குயிலின் கண்களும் சரி, சிவப்பு என்றால் சிவப்பு அப்படி ஒரு சிவப்பு. தீக்கங்குகளைப் போல ஒளிவீசும். சில சமயம் கொண்டைக்குருவிகளும் வரும். ஓணான்கள் ஒன்றோ இரண்டோ, எலுமிச்சை மரத்தில் ஊர்ந்து எறும்புகளை லபக் லபக் என்று நாக்கை நீட்டி விழுங்கிக் கொண்டேயிருக்கும். கட்டெறும்பு, கடிஎறும்பு, கருப்பு எறும்பு, என்று எறும்புகளும், சின்னச்சின்ன நத்தைக்குட்டிகளும் இருக்கும். பிரியாவின் அப்பா தான் இவற்றை எல்லாம் பிரியாவுக்குக் காட்டிக்கொடுத்தார்.
சாயந்திரம் அலுவலகம் விட்டு வந்ததும் அப்பா புறவாசல் தோட்டத்தில் இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து பிரியாவை மடியில் உட்கார வைத்து ஒவ்வொன்றாகக் காட்டுவார். ஒவ்வொன்றைப் பற்றியும் அது என்ன செய்கிறது? ஏன் செய்கிறது?  இயற்கை என்னும் அன்னை எத்தனை எத்தனை அற்புதங்களைப் படைத்திருக்கிறாள். பிரியாவுக்கு அப்பா சொல்லச்சொல்ல ஆச்சரியமாக இருக்கும். அவள் முகம் எல்லையில்லாத ஆனந்தத்தில் புன்சிரிப்பைச் சிந்திக் கொண்டேயிருக்கும்.
அப்படித் தான் ஒரு நாள் தேக்கு மரத்தில் உள்ள உயரமான கிளையில், ஒரு தேக்கு இலை சுருண்டிருப்பதைப் பார்த்த பிரியாவின் அப்பா முகத்தில் சிரிப்பு. பிரியா,
“ என்னப்பா நீங்க மட்டும் சிரிக்கிறீங்க?.. எனக்கும் சொல்லுங்க!..”
என்றாள். பிரியாவைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு
“ தையல்சிட்டு நம்ம வீட்டில் கூடு கட்டியிருக்குடா பிரியாக்குட்டி..” என்று சொல்லிச் சிரித்தார். தையல் சிட்டைப் பார்த்திருக்கிறாள் பிரியா. ஆனால் அதன் கூட்டைப் பார்த்ததில்லை. அவளுடைய வீட்டில் தையல்சிட்டின் கூடு! ஐய்! அவளுடைய நண்பர்கள், ஐஸ்வர்யா, ஹாசினி, சில்வியா, ஐயப்பன், ஹிருதிக், எல்லோரிடமும் சொல்லுவாள். அவர்களுடைய வீடுகள் எல்லாம் அபார்ட்மெண்ட் வீடுகள் என்பதால் அவர்களுக்கு பிரியா சொல்கிற ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாய் இருக்கும்.
வீட்டு மொட்டைமாடிக்குக் கூட்டிக் கொண்டு போனார் அப்பா. அங்கிருந்து பார்க்கும்போது தையல்சிட்டின் கூடு நன்றாகத் தெரிந்தது. எவ்வளவு அழகாக இலையின் இரண்டு பக்கங்களையும் சேர்த்து தன்னுடைய கூர்ந்த மூக்கினால் தைத்திருக்கிறது. உள்ளே நார்களைக் கிழித்துக்கிழித்து பஞ்சு மாதிரி மெத்தையாக்கி வைத்திருந்தது தையல்சிட்டு. அவளைச் சற்றுத்தூக்கிக் காட்டினார் அப்பா. மொச்சைக்கொட்டை மாதிரி இரண்டு முட்டைகள் இருப்பதைப் பார்த்தாள் பிரியா.
“ அப்பா முட்டை! முட்டை!..” என்று கூவினாள். அப்போது எங்கிருந்தோ தையல் சிட்டுகள் பறந்து வந்தன. ஒவ்வொரு கிளையாக உட்கார்ந்து பிரியாவையும் அவளுடைய அப்பாவையும் சந்தேகத்துடன் பார்த்துக் கத்தின. அப்பாவும் பிரியாவும் அப்படியே அசையாமல் நின்றார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களால் ஆபத்து இல்லை என்று தெரிந்து கூட்டில் போய் உட்கார்ந்தது பெண் தையல்சிட்டு. பிரியாவும், அப்பாவும் அப்படியே சத்தம் காட்டாமல் நழுவி விட்டார்கள்.
இப்போது என்ன நடந்திருக்கும்? கூட்டில் உள்ள முட்டைகள் எப்படியிருக்கும்? குஞ்சு பொரித்திருக்குமா? தையல்சிட்டின் முட்டைகளே இத்துணூண்டு இருந்தால் அதன் குஞ்சுகள் எப்படியிருக்கும்? பிரியாவுக்கு ஆர்வம் கூடிக்கொண்டே போனது. அவள் பல் தேய்த்துக் கொண்டே யோசித்தாள். அப்பாவிடம் கேட்க வேண்டும்.
அவள் வாய்க்கொப்பளித்து விட்டு அம்மா கொடுத்த பாலைக் குடித்து விட்டு அப்பாவைத் தேடினாள்.
“ அம்மா! அப்பாவை எங்கேம்மா?..”
“ மேலே மாடிக்குப்போனாரு..பாரு..”
பிரியா மெல்ல மாடிப்படி ஏறினாள். அப்பா மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தார். பிரியா மாடிப்படி ஏறி வருகிற சத்தத்தை முன்னாலேயே கேட்டு விட்டார் அப்பா. ஆனால் கேட்காத மாதிரி இருந்தார். பிரியா அப்பாவின் பின்னால் போய் “ பேவ்வ்வ் “ என்று கத்தினாள். அவளுடைய சத்தத்தைக் கேட்டு “ ஆஆஆ..” என்று பயந்தமாதிரி நடித்தார் அப்பா. இரண்டுபேரும் சிரித்துக் கொண்டனர்.
“ அப்பா.. குஞ்சு பொரித்திருக்குமா? “
“ என்ன குஞ்சு? “
“ ஐயோ மக்கு அப்பா… அந்தத் தையல்சிட்டு குஞ்சு பொரித்திருக்குமா? “
அதைக்கேட்ட அப்பா முகத்தில் ஒரு சிறு வருத்தம் வந்தது.
“ இல்லைடா பிரியாக்குட்டி! அதோட முட்டைகளை ஒருத்தன் திருடிக்கிட்டுப் போயிட்டான்..”
“ ஏம்ப்பா திருடினான்? தையல்சிட்டு பாவம் இல்லையா? “
“ அவனும் சாப்பிடணும் இல்லையா..”
“ அவன் ஏன் முட்டையைச் சாப்பிடணும்… சோறு, குழம்பு, சாப்பிட வேண்டியதானே..”
என்று முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டாள் பிரியா. அவளுடைய தீவிரமான முகத்தைப் பார்த்த அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது.
“ சோறு குழம்பு எல்லாம் நமக்குத்தான்.. அவனுக்கு எறும்பு, பூச்சி, முட்டைகள், தான் பிடிக்கும்… நாக்கை நீட்டி லபக்குனு முழுங்கிரும்..”
“ நான் அந்தத் திருடனைக் கண்டுபிடிச்சிட்டேன்…. ஓணான் தானே!. அவங்கூட காய்...”
“ அவன் திருடன் இல்லை… பிரியாக்குட்டி! இயற்கை அன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வாழக்கத்துக்கொடுத்திருக்கா… சின்னப்புழு..பூச்சி..எறும்பிலிருந்தே… பெரிய யானை, புலி, சிங்கம், மனுசன் வரை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி உணவுப்பழக்கம்.. ஓணானோட பழக்கம் அது.. ”
 கன்னத்தில் கைகளை ஊன்றிக் கொண்டு  அப்பா சொல்வதைக் கவனமாகக் கேட்டாள். அவளுக்குப் புரியவில்லை என்றாலும் புரிந்தமாதிரி தலையாட்டிக் கொண்டாள்.
“ ஓணான் இல்லைன்னா எறும்புகளையோ, பூச்சிகளையோ, கட்டுப்படுத்தமுடியாது..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை.. அதுதான் அவங்க வாழ்க்கை…”
என்று சொல்லிய அப்பா பிரியாவை அப்படியே தூக்கி கன்னத்தில் முத்தமிட்டார். பிரியா நெளிந்தாள்.
“ கூச்சமாருக்கு..மீசை கிச்சுகிச்சு மூட்டுது..”
என்று சொன்னாள். அப்போது திடீரென,
” ட்வீக்…ட்வீக்..ட்வீக்…ட்வீக்..” என்ற சத்தம் கேட்டது.
தையல்சிட்டுகள் இரண்டும் அவர்களுடைய கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. கிளையில் உட்கார்ந்து மறுபடியும் மறுபடியும்
“ ட்வீக்…ட்வீக்..ட்வீக்..” என்று கத்தி விட்டுப் பறந்து போய் விட்டன. அந்தக்குரலில் இருந்த பரிதவிப்பு என்னவோ செய்தது. அப்பா அமைதியாக இருந்தார். பிரியா கேட்டாள்.
” தையல்சிட்டு என்னப்பா சொல்லுது..? “
”  தன்னோட முட்டைகளைக் காணோம்னு பாட்டுபாடிட்டுப் போகுது..”
“ பாட்டா? “
“ கண்ணே என் கண்மணியே
எங்க எங்க முட்டையிட்டே?
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
தேக்கிலையில் முட்டையிட்டேன்..
தேக்கிலையில் இட்ட முட்டை
தேன்போல இனிக்கும் முட்டை
காணாமப்போனது என்ன?
கண்ணே! என் கண்மணியே!
கள்ளன் வந்து தூக்கினானே
நம்ம கனவு எல்லாம் பொசுக்கினானே
வேற ஒரு இடம் தேடி
நம்ம குஞ்சுகளை நாம் பொரிப்போம்..”
அப்பா பாடி முடிக்கும் போது பிரியா அழுது விடுவதைப் போல இருந்தாள். அதைப்பார்த்த அப்பா,
“ அந்தா பாரு.. பிரியாக்குட்டி! காக்காக்கூடு கட்டுது..!”
பிரியா திரும்பிப் பார்த்தாள். தேக்குமரத்தின் உச்சிக்கிளையில் இரண்டு காகங்கள் குச்சிகளை அடுக்கிக் கொண்டிருந்தன.
“ ஐய்! காக்காக்கூடு! காக்காக்கூடு!..” என்று கை தட்டினாள் பிரியா.



 நன்றி - புதிய தலைமுறை கல்வி

1 comment: