ஓடிப்போன வானவில்
உதயசங்கர்
உலகிலுள்ள நாடுகளுக்கு வானவில்லூர்
நாட்டின் மீது கோபம். வானவில் தேவதை வானவில்லூர் நாட்டிலேயே தங்கி விட்டாள். ஒவ்வொரு
பருவத்திலும் ஒவ்வொரு நாட்டுக்குப் பயணமாக வானவில்தேவதை போவாள். வானவில் தேவதையைப்
பார்த்த உடனேயே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால் வானவில்தேவதை வந்து விட்டால்
மழைத்தேவதையும் பின்னாலேயே தூறல் போட்டுக் கொண்டே வந்து விடுவாள். அதனால் நாடு செழிக்கும்.
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இப்போது ஒன்றிரண்டு வருடங்களாக வானவில்தேவதை
எங்கும் வெளியே பயணம் போகாமல் வானவில்லூர் நாட்டிலேயே தங்கி விட்டாள். அதனால் வானவில்லூர்
நாட்டில் எப்போதும் வானவில் தெரியும். எப்போதும் மழை பெய்யும். வானவில்லூர் நாட்டு
மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.
வானவில்தேவதை அங்கேயே இருப்பதற்குக்
காரணம் என்ன தெரியுமா?. வானவில்லில் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? கருநீலம்,நீலம்,
ஊதா, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, என்று ஏழு நிறங்கள் இருக்கின்றன. அதே மாதிரி
வானவில்லூர் நாட்டில் சிமிழ், பந்தி, கலுங்கு, தலையாளம், பன்னடம், உங்காலி, எராத்தி,
என்று ஏழு மொழி பேசும் மக்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்.
ஒவ்வொரு மொழி பேசும் மக்களிடம்
ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் இருந்தன. சிமிழ் பேசும் மக்களின் உணவு, உடை, திருவிழா,
எல்லாம் ஒரு விதம். இட்லி சாப்பிட்டார்கள். வேட்டி கட்டினார்கள். மாரியம்மாளுக்குப்
பொங்கல் வைத்தார்கள். பந்தி மொழிக்காரர்கள் சப்பாத்தி சாப்பிட்டார்கள். குர்தா அணிந்தார்கள்.
சிவனையோ, ராமனையோ, கும்பிட்டார்கள். உங்காலி மொழிபேசும் மக்கள் சந்தேஷ் இனிப்பு சாப்பிட்டார்கள்.
பைஜாமா அணிந்தார்கள். காளியை வணங்கினார்கள். தலையாளம் மொழி பேசும் மக்கள் புட்டு, பயறு,
கப்பக்கிழங்கு சாப்பிட்டார்கள். கதகளி, தெய்யம் ஆடினார்கள். இப்படி ஒவ்வொரு மொழி பேசும்
மக்களின் பழக்கவழக்கங்கள் வேறு வேறு மாதிரியாக இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து
வந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ந்தார்கள். யாரிடமும் எந்த பொறாமையும்
இல்லை. ஒருவர் உயர்ந்தவர் என்றோ ஒருவர் தாழ்ந்தவர் என்றோ யாரும் நினைக்கவில்லை. ஒவ்வொரு
ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் ராஜா ஆட்சி செய்து வந்தார். இதையெல்லாம்
பார்த்த வானவில்தேவதைக்கு வானவில்லூர் நாடு ரெம்பப் பிடித்து விட்டது.
ஒவ்வொரு மொழி பேசும் மக்களின்
வீட்டில் ஒவ்வொரு நாள் தங்கி இருந்தது. வானவில்தேவதை இருந்ததால் நாட்டில் ஆண்டு முழுவதும்
மழை பொழிந்தது. நாடு செழித்தது.
இந்த ஆண்டு பந்தி மொழி பேசும்
டிமோந்திரர் என்று ஒருவர் வானவில்லூர் நாட்டுக்கு ராஜாவானார். அவருக்கு மற்ற மொழிகளைப்
பிடிக்காது. மற்ற மொழி பேசும் மக்களை தாழ்ந்தவர்களாக நினைத்தார். பந்தி மொழிக்காரர்கள்
தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் எப்போதும் பந்தி மொழி பேசுபவர்கள்
தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் வானவில்லூர் நாடு முழுவதும்
முரசறைந்து அறிவிக்கச்சொன்னார்.
“ இனி எல்லோரும் பந்தி மொழி மட்டும்
தான் பேச வேண்டும். பந்தி மொழி பேசினால் மட்டுமே அரசாங்கவேலை கிடைக்கும். பந்தி மொழி
பேசினால் மட்டும் உணவகங்களில் உணவு கிடைக்கும். பந்தி மொழி தெரிந்தால் மட்டுமே அரசின்
உதவிகள் கிடைக்கும். எல்லோரும் பந்தி மொழிப்பழக்கவழக்கங்களைத் தான் கடைப்பிடிக்க வேண்டும்.
பாவ்பாஜி, பானிபூரி, பேல்பூரி, சப்பாத்தி தான் சாப்பிட வேண்டும். இனி எப்போதும் பந்தி
மொழிக்காரர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும்..”
சிமிழ், கலுங்கு, தலையாளம், பன்னடம்,
உங்காலி, எராத்தி, மொழிபேசும் மக்கள் இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
அவர்கள் ராஜா டிமோந்திரரிடம் போய் முறையிட்டார்கள்.
“ அரசே! அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து
வருகிறோம்.. வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் வானவில்லூரின் தாரக மந்திரம். உங்களுடைய
அறிவிப்பினால் மக்களுக்குள் வேற்றுமை வளரும்.. மொழிச்சண்டை, இனச்சண்டை, மதச்சண்டை என்று
மக்களுக்குள் பிரிவினை வளர்ந்து விடும். அது நாட்டுக்கு நல்லதில்லை.. “
ஆனால் ராஜா டிமோந்திரர் அதைக்
கேட்கவில்லை.
மறுநாளில் இருந்து வானவில்லூர்
நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் பந்தி மொழியில் இருந்தன. மக்களுக்குப் புரியவில்லை.
குழம்பிப் போனார்கள். ஒருவருக்கொருவர் சண்டையிட்டார்கள். அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன.
மக்கள் வீதிகளில், கடற்கரைகளில் கூடிப் போராடினார்கள். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி
இல்லை. அதைப்பார்த்த வானவில்தேவதைக்கும் மகிழ்ச்சி இல்லை. அவள் வானவில்லூர் நாட்டை
விட்டு பறந்து போய்விட்டாள். அவள் போனதும் வானவில்லின் ஏழுநிறங்களான கருநீலம், நீலம்,
ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு எல்லாநிறங்களும் வானவில்லூர் நாட்டை விட்டுப்
போய் விட்டன. வானவில்லூர் சாம்பல் நிறமாக மாறிவிட்டது. அதன் பிறகு வானவில்லூர் நாட்டில்
மழை பெய்யவில்லை. வயல்கள் காய்ந்தன. ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள், எல்லாம்
வறண்டன. மக்கள் எல்லோரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
அதுவரை வண்ணமயமாய் ஒளிவீசிக் கொண்டிருந்த
வானவில்லூர் நாட்டில் கருப்பாய் இருட்டும், வெள்ளையாய் வெளிச்சமும் மட்டும் இருந்தன.
மற்ற எந்த நிறங்களும் அங்கே இல்லை. வண்ணங்கள் இல்லாததால் குழந்தைகள் வாடிப்போனார்கள். வண்ணப்பொம்மைகளோ, வண்ண மலர்களோ, வண்ணத்துப்பூச்சிகளோ,
எதையும் பார்க்க முடியவில்லை. அழுதார்கள். நாட்டில் எல்லோரும் வருத்தத்துடன் இருந்தனர்.
எல்லோரும் வானவில்தேவதையை மீண்டும் வரச்சொல்லி வேண்டினார்கள். மன்றாடினார்கள். பொங்கல்
பூசை வைத்தார்கள். ஆனால் வானவில்தேவதை வரவில்லை.
நாட்டில் பஞ்சம் வந்து விட்டது.
அதுவரை மற்ற நாடுகளுக்கு அனைத்துப்பொருட்களையும் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த வானவில்லூர்
நாடு இப்போது வறுமையில் வாடியது. எல்லாப்பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைக்கு
ஆளாகி விட்டது. அரண்மனை கஜானாவில் பணம் இல்லை. ராஜா டிமோந்திரருக்கு என்ன செய்வது என்று
தெரியவில்லை.
ஒருநாள் இரவு ராஜா டிமோந்திரர்
கனவில் பந்திமொழித்தேவதை வந்தாள்.
“ டிமோந்திரா..உலகில் ஆறாயிரம்
மொழிகள் உள்ளன. மக்கள் பேசும் எந்த மொழியாக இருந்தாலும் உயர்வு தாழ்வு இல்லை. நாங்கள்
அனைவரும் சகோதரிகள். எங்களுக்குள் எந்த பேதமும் இல்லை. உன் எண்ணத்தை மாற்றிக்கொள்.
நாடு வளம் பெறும். “
என்று சொன்னாள். திடுக்கிட்டு
எழுந்த ராஜா டிமோந்திரர் உடனே அந்த ராத்திரியிலே
” வானவில்லூர் நாட்டில் முன்பு மாதிரியே எல்லாமொழிகளுக்கும்
சம உரிமையும், தகுதியும் வழங்கப்படும். எல்லா மொழிகளும் அரசு மொழியாக அங்கீகரிக்கப்படும்.
“
என்று எல்லா ஊர்களிலும் எல்லாத்தெருக்களிலும்
முரசறைந்து அறிவித்தார்.
மறுநாள் காலையில் வானவில்லூர்
நாட்டில் வானவில் தோன்றியது. லேசான தூறல் போட ஆரம்பித்தது. வானவில்லூர் நாட்டு ஆண்களும்,
பெண்களும், குழந்தைகளும் தெருக்களில் இறங்கி மழையில் குதியாட்டம் போட்டனர்.
வானத்தில் இருந்து வானவில் தேவதை
அதைப்பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
நன்றி- வண்ணக்கதிர்
அருமை
ReplyDelete