Monday 6 October 2014

நவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்

 barathi உதயசங்கர்

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்.

தமிழிலக்கியத்தின் நவீன காலத்தை கவிதை, கதை, வசன கவிதை, பத்திரிகை, கேலிச்சித்திரம், நாடகம், என்று எல்லாத்துறைகளிலும் கட்டியம் கூறி வரவேற்ற எட்டையபுரத்து மகாகவி தான் பாஞ்சாலி சபதம் முன்னுரையில் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார். புலவர்களின் இலக்கணச் சிறையிலிருந்து கவிதையுணர்ச்சியை விடுதலை செய்து சுதந்திரமாக மனச்சிறகுகளை விரித்து கவிதை வானில் முதன்முதலில் பறக்கவிட்டவர் நம்முடைய பாரதி. தமிழின் வாழ்வுள்ள வரைக்கும் பாரதியின் கவிதைகள் தமிழர்களின் வீடுகள் தோறும் முழங்கும்.

ஒருமுறை பாரதி எட்டையபுரம் மன்னருடன் மதுரை சென்றிருந்த போது மன்னர் அவருக்கு வேண்டிய பொருள் வாங்குவதற்கு ஐநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார். பாரதி எட்டையபுரம் திரும்புகிறார். அவருடைய துணைவியார் செல்லம்மாள்பாரதி காண வீட்டுக்கு முன்னால் வண்டியிலிருந்து மூட்டை மூட்டையாய் சாமான்கள் இறங்குகின்றன. துணையாருக்கோ மகிழ்ச்சி. நிறைய துணிமணிகளும் வெள்ளிப்பாத்திரங்களும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று பூரிக்கிறார். பாரதி உள்ளே வந்து மூட்டைகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கிறார். அத்தனை மூட்டைகளிலும் புத்தகங்கள்! புத்தகங்கள்! புத்தகங்கள்! ஆங்கிலம் தமிழ், சமஸ்கிருதம் தமிழ் என்று புத்தகங்களைக் குவிக்கிறார். செல்லம்மாளின் முகம் வாடுகிறது. உடனே ஒரு சேலையை எடுத்து அவரிடம் நீட்டுகிறார் பாரதி. செல்லம்மாளின் முகம் மலர்கிறது. புத்தகங்கள் நமது அறிவை விசாலப்படுத்துகின்றன. புத்தகங்களே நமது மனதை விரிவுபடுத்துகின்றன. புத்தகங்களே நம்மை ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய மனிதர்களாக்குகின்றன.

இதோ பாரதியின் கவிதையைக் கேளுங்கள். இயற்கையை எளியபதங்களால் எப்படி வர்ணிக்கிறான். அதில் வாழ்வின் அர்த்தத்தையும் ஏற்றுகிறான் என்று பாருங்கள்.எதிரே நிற்கும் காற்றுடனான அவருடைய உரையாடலைக் கேளுங்கள்.

காற்றே வா, மெதுவாக வா

ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே

காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே

அலமாரிப்புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே

பார்த்தாயா இதோ தள்ளி விட்டாய்

புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து விட்டாய்

மறுபடி மழையைக் கொண்டு வந்து சேர்த்தாய்

வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை

பார்ப்பதிலே நீ மகாசமர்த்தன்

நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை

நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்

நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத்தேவன் புடைத்து

நொறுக்கி விடுவான்

சொன்னாலும் கேட்க மாட்டான்

ஆதலால் மானிடரே வாருங்கள்

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்

கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்

உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்

உயிரை வலிமையுற நிறுத்துவோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்

இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி விடுவான்

காற்று மெலிய தீயை அவித்து விடுவான்

வலிய தீயை வளர்ப்பான்

அவன் தோழமை நன்று

அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

ஞாயிறு, தீ, காற்று, காட்சி, சக்தி, என்று உலகத்தின் அத்தனை காட்சிகளையும், வாழ்வின் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய கவிதைகளில் எப்படியெல்லாம் ஏற்றிச் சொல்கிறான். ஒவ்வொரு வரியிலும் வாசிப்பவனின் மன விசாலத்திற்கேற்ப எத்தனை ஆழம்! எத்தனை அகலம்! பாரதியை வாசிக்கும் தோறும் நம் தமிழ்மொழியின் வளம் நம்மைத் திக்குமுக்காடச்செய்கிறது. வாசியுங்கள் பாரதியை! நேசியுங்கள் நம் தாய்மொழித்தமிழை!

வாழ்க பாரதி எங்கள் முன்னத்தி ஏரே! வாழ்க! உம்புகழ்!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

1 comment: