Friday, 17 October 2014

அன்பின் பெருங்காட்டினுள் ஒரு கவிஞன்

vannadasan உதயசங்கர்

 

சைக்கிளில் வந்த

தக்காளிக்கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளில்

பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை.

தமிழிலக்கிய வாசகப்பரப்பில் தன்னுடைய கதைகளாலும், கவிதைகளாலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கல்யாண்ஜி என்ற வண்ணதாசன், தன் இலக்கியக் கோட்பாடாக சகமனித நேசத்தையே முன்வைக்கிறார். சமூகமாக வாழ்வதற்கு விதிக்கப்பட்ட மனிதர்கள் ஏன் தனித்தனித் தீவுகளாக மாறுகிறார்கள். சகமனித துயரம் கண்டு இரங்காமல், கை தூக்கி விடாமல், உதவி செய்யாமல், மனிதர்கள் எப்படி சுயநல மூட்டையாக மாறிப்போனார்கள்? சகமனித சகவாழ்வு மறந்து போனதற்குக் காரணம் என்ன? சாதாரணக்காட்சியிலிருந்து அசாதாரணமான உண்மையை கவிதை மூலம் வெளிப்படுத்துகிறார் கல்யாண்ஜி.

வாழ்வின் நெருக்கடிகள் தான் கவிஞர்களைத் தூண்டுகின்றன. எல்லாக்கவிஞர்களுமே அதை வேறு வேறு விதமாகச் சொல்லிப் பார்க்கிறார்கள். வாழ்வின் சிடுக்குகளைப் புரிந்து கொள்ளவும், அவிழ்த்து விடவும் முயற்சிக்கிறார்கள். கல்யாண்ஜியின் கவிதையுலகு யதார்த்தமான வாழ்க்கைச் சித்திரங்களின் வழியே தன்னையும் வாழ்வையும் விசாரிக்க முயல்கிறது.

அலைச்சல்

இக்கரைக்கும் அக்கரைக்கும்

பரிசல் ஓட்டிப்

பரிசல் ஓட்டி

எக்கரை

என்கரை என்று

மறக்கும்

இடையோடும் நதி மெல்லச்

சிரிக்கும்.

வாழ்நாள் முழுவதும் எதைத் தேடி? எதற்காக? எங்கே ? என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து வாழ்வெனும் பெருநதி சிரிக்காமல் என்ன செய்யும்?

பேசும் பாரென் கிளியென்றான்

கூண்டைக் காட்டி வாலில்லை

வீசிப் பறக்கச் சிறகில்லை

வானம் கைப்பட வழியில்லை

பேசும் இப்போது பேசுமென

மீண்டும் மீண்டும் அவன் சொல்ல

பறவையென்றால் பறப்பதெனும்

பாடம் முதலில் படியென்றேன்.

கவி மனதின் கவிதை வெளிப்பாடுகள் ஒரு வாசகருக்கு வாழ்வின் வெம்பரப்பில் நம்பிக்கை தருகின்றன. விருட்சத்தின் நிழல் போல, தீராத தாகத்தின் போது கிடைத்த சுனை நீர் போல, அவரை ஆசுவாசப்படுத்துகிறது. அவரை யோசிக்க வைக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஆராயவும் அதை எதிர்கொள்ளும் மனதினைப் புரிந்து கொள்ளவும் தூண்டுகின்றன. கவிதை நேரடியான செய்தியாக இல்லாமல் பூடகமான, உருவகமான, மறைமுகமான, அநுபவங்களைச் சொல்லி விளங்க வைக்கின்றன. இதோ கல்யாண்ஜியின் இந்தக் கவிதையைக் கேளுங்கள்:

இந்த நுனியும் இன்னொரு நுனியும்

எனக்குள் ஒரு காடு இருந்தது

சில மிருகங்களூம் இருந்தன

வேட்டையாடத் தெரியவில்லை

அதற்குப் பதிலாகக்

காட்டையே அழிக்க வேண்டியதாயிற்று

காற்றுக் காலங்களில் இப்போது

என்மீது மகரந்தம் படிவதில்லை

இனப்பெருக்கப் பெயர்ச்சியில்

வெளிப்பறவைகள் முட்டையிட

எனக்குள் ஊடுருவிச் சிறகடிப்பதில்லை

கலவிக்கால அழைப்புடன் திரியும்

புலிகளின் மோக உறுமல்கள்

காதில் விழுவதில்லை

கிளர்ச்சியுற்ற இரவுகளில்

உச்சிநிலா வெளிச்சத்தில் வாசிக்கும்படி

கானகத்தின் கவிதை எழுதப்பட்ட சருகுகள்

காலருகில் நகர்ந்து வருவதில்லை

வனப்பூ சூடிய கூந்தலுடன்

தாண்டிச் செல்ல யாருமில்லை

மண்புழுக்கள் துளைத்து துளைத்து

மனதில் செம்மண் பூப்பதில்லை

மழைக்காலம் முடிந்ததும்

ஆதி விதைகள் பூமி கீறி எழும்

அநுபவத்தின் பரவசம் வாய்ப்பதில்லை

மூங்கில் தீ தொலைந்து விட்டது

முற்றிலுமாக.

இன்னொரு நுனியில் காடு இல்லாமல்

இந்த நுனியில் வீடு மட்டும் இருந்து

என்னசெய்ய?

மனமெனும் காட்டில் இயற்கையெனும் காட்டையே அழித்து விட்ட பின்பு எப்படி வாழ்வு சிறக்கும்? கவிதையின் ஒவ்வொரு வரிகளும் தருகின்ற பரவச அநுபவம் நம்மை நெகிழ வைக்கிறது. ஆற்றாமை கொள்கிறது. சிந்திக்க வைக்கிறது. வாழ்வைப் புரிந்து கொள்ளவும், அதை மேன்மைப்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது அத்துடன் இத்தகையக் கவிதைகளை எழுதிய கவிஞர் கல்யாண்ஜியை மனமார வாழ்த்துகிறது.

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

2 comments:

  1. ///இன்னொரு நுனியில் காடு இல்லாமல்

    இந்த நுனியில் வீடு மட்டும் இருந்து

    என்னசெய்ய?//
    கல்யாண்ஜியை மனதார வாழ்த்துவோம்

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி சார்.

    ReplyDelete