சதா வாழ்க்கை என்னும் பேராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேராற்றில் முங்காச்சி போட்டு எந்திரிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அநுபவம். சிலருக்கு ஜீவ அமுதமாய் ஆறு உடலிலும், மனதிலும் ஒரு பேரானந்தத்தை உண்டுபண்ணுகிறது. சிலருக்கு அது ஒரு தியானம். மூச்சடக்கி ஒவ்வொரு கணத்தையும் இந்தப் பிரபஞ்சத்தின் காலவெளியில் கலந்து விடுகிற தியானம். சிலருக்கு நீர் உடலில் பட்டதும் அதுவரை உறங்கிக் கொண்டிருந்த புலன்கள் சட்டென கண்களைத் திறக்கும் தருணம். சிலருக்கு இத்தனை காலமும் யார் யாரோ முங்கி எழுந்த ஆற்றில் தானும் முங்கி எழும்போது ஏற்படும் எளிய உணர்வு. சிலருக்கு இந்தப் பேராற்றில் அள்ளிய ஒரு துளி நீர் தான் தன்னுடைய வாழ்க்கை என்ற அடக்கம். சிலருக்கு இந்த முங்காச்சி வெறுமனே ஒரு அன்றாடக்கடமை. சிலருக்கு தாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கிடைத்த ஒரு இடைவெளி. சிலருக்கு மனமும் உடலும் ஒடுங்கி பேரமைதியில் கலந்து விடும் காலத்துளி. சிலருக்கு அன்றாடச் சில்லரைப்பிரச்னைகளை செலவிடக்கிடைத்த பெட்டிக்கடை. சிலருக்கு வெஞ்சினத்தை கூர் தீட்ட கிடைத்த சாணைக்கல். சிலருக்கு நேசம் வளர்க்கும் பூந்தோட்டம். சிலருக்கு தங்கள் ஆத்தாமையைச் சொல்லி மனசாறக் கிடைத்த நட்பு. சிலருக்கு எப்போதும் யார் மீதாவது புகார் சொல்லிக் கொண்டேயிருக்க ஒரு புகார் பெட்டி. யார் யாருக்கு எப்படியெப்படி அநுபவங்கள் கிடைத்தாலும் வாழ்க்கை தன்பாட்டில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
இந்த வாழ்வெனும் பேராற்றில் தான் சமயவேல் என்ற கவிஞரும் முங்காச்சி போட்டு எந்திரிக்கிறார். ஆனால் அவர் வாழ்க்கையை ஒரு தோல்வியாகவோ, அவநம்பிக்கையாகவோ, தடையாகவோ , பாவமாகவோ, பார்க்கவில்லை.
வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
உன்னதம் தேடுவதை
ஒரு போதும் நிறுத்தேன்
உண்மையை மேலும் மேலும்
காதலிப்பேன்
நேசம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்து விட்டு
உழுது விதை விதைப்பேன்
இதோ இந்த வாழ்க்கை எல்லாவிதமான அற்புதங்கள் நிறைந்ததே. இந்த வாழ்க்கை ஒரு அதிசயச் சுரங்கம் , இந்தச் சுரங்கத்தில் அபூர்வமான வைரங்களும் வைடூரியங்களும் தங்கமும் கொட்டிக்கிடக்கின்றன. கூடவே குப்பை கூளங்களும். யார் எவ்வளவுக்கெவ்வளவு சுரங்கத்தைத் தோண்டுகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவுக்கவ்வளவு வெகுமதிகள் கொடுக்கத் தயாராக உள்ளது. ஆனால் நாம் தயாராக வேண்டுமே. இந்த வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஒளிந்து ஓடாமல் எதிர் கொள்ள வேண்டுமே. கவிஞர் சமயவேலும் நம்மை வாழ்க்கையை எதிர் கொள்ளச் சொல்கிறார். தன்னுடைய எளிய கவிதைக்காட்சியின் வழியாக.
என்றும்..
கூரை முகட்டுப்பட்சிகளின் கரைதல்களுடன்
இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்
இளங்காலை
ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்
நேற்றின் அயர்வுகள்
வாசலைத் தாண்டி
உப்புக்காரனின் குரலோடு
ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது
குளிக்க, சாப்பிட, வேலைக்கென
கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை
இன்றும் நேசிப்பேன்.
நேசம் ஒன்று தான் இந்த வாழ்வினை அர்த்தப்படுத்துவது. இந்த பூமிப்பந்திலுள்ள ஒவ்வொரு உயிரையும் நேசியுங்கள். உங்கள் வாழ்க்கையையும் நேசியுங்கள். நேசத்தின் வழியாகவே நம்முடைய அனைத்து அயர்ச்சிகளையும் போக்க முடியும். இத்தகைய மகத்தான ஞானத்தை தன் எளிய கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறார் கவிஞர் சமயவேல். காற்றின் பாடல், அகாலம், என்ற கவிதை நூல்களின் மூலம் தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றுள்ள கவிஞர் சமயவேல் தன்னுடைய எளிய, நம்பிக்கையூட்டும் கவிதை வரிகளால் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இவருடைய கவிதைகளை வாசிக்கும் தோறும் நம் மனதில் ஒளி பெருகும். ஒவ்வொரு நாள் காலையும் புத்தம் புதிதாக புலரும். இன்றும் அப்படிப் புலரட்டும்.
நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்
////வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
ReplyDeleteஉன்னதம் தேடுவதை
ஒரு போதும் நிறுத்தேன்
உண்மையை மேலும் மேலும்
காதலிப்பேன்///
போற்றப்பட வேண்டிய வரிகள் ஐயா நன்றி
நன்றி ஐயா
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி.