நமது வாழ்க்கை அநுபங்களால் கட்டமைக்கப்பட்டது. அநுபவங்கள் மூலமாக நமது அறிவு வளமை பெறுகிறது. நமது அறிவு வளத்தினால் வாழ்வில் எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வது எளிதாகிறது. ஒவ்வொருவரும் அவரவர் அநுபங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்போது கவிஞர் மட்டுமே அதைப் பொதுவானதாக்கி உலகத்தீரே என்று விளித்துச் சொல்கிறான். அதை கவிதை மொழியில் சொல்கிறான். கண்ணுக்குப் புலனாகாக் கிருமி எப்படி நுண்பெருக்கிக் கண்ணாடி வழியே பார்க்கும் போது எப்படிப் புலப்படுகிறதோ அப்படி இந்த வாழ்வின் அநுபவங்களின் வழியே வாழ்க்கையின் சாராம்சத்தைச் சொல்ல முயற்சிக்கிறான். எத்தனையோ தருணங்கள் கவித்துவத் தருணங்களாக எல்லோருக்கும் வாய்க்கின்றன. நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கும் லட்சியங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் மனதில் ஏற்படுத்துகின்ற சலனங்கள் அலைஅலையாய் முட்டி மோதுகின்றன.
இந்தச் சலனங்களை வெளிப்படுத்தவியலாத ஒரு கணத்தின் துளியில் மனம் நிறைகிற ஒரு ததும்பல். ததும்பி வழிகிற நிறைவை மொழியில் உருவகப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விழைகிற ஆவல். இந்த ஆவலின் வெளிப்பாடே கலையாக, கவிதையாகப் பரிணமிக்கிறது.
இயற்கையின் கொடையான மனிதன் அந்த இயற்கையினை தன் பேராசையெனும் கரண்டியினால் சுரண்ட ஆரம்பித்து விட்டான். இயகையின் அங்கமான மனிதனும் இயற்கையே. இதை உணராததால் இயற்கையை விட தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம் மேலோங்கி பூமிப்பந்தில் காயங்களை ஏற்படுத்துகிறான். இயற்கை விம்முகிறது. படைப்பே படைப்பாளியை அவமதிக்கிற செயலை எப்படிப் பொறுத்துக் கொள்ளும்?
தன் கவிதைகளாலும், கதைகளாலும், நாவல்களாலும், சிந்தனைத் தெறிப்பு மிக்க கட்டுரைகளாலும் தமிழிலக்கியத்தின் திசையைத் தீர்மானிப்பவராக இருந்த பசுவய்யா என்ற சுந்தரராமசாமி இயற்கை போலும் மனிதன் வாழ்வது பேரானந்தம் என்கிறார். அவருடைய கவிமனம் மரங்களோடு மனிதர்களை ஒப்பிடுகிறது. ” ஏண்டா மரம் மாதிரி நிற்கிறே “ என்ற உண்மைக்குப் புறம்பான நடைமுறையை மாற்றுகிறார் மரம் மாதிரி நிற்க முடியவில்லையே என்ற ஏக்கம் வரும் கவிதை இதோ:
விருட்ச மனிதர்கள்
மரங்கள் போல வாழ்வு என்று கிடைக்கும்?
மோனமும் அழகும் அங்கு கூடி நிற்கின்றன
கவலை இல்லை
விபத்தும் நோயும் வறுமையும் உண்டு
கவலை இல்லை
செடிகளின் வறுமை பற்றி யோசித்திருக்கிறோமா?
மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள்
இவற்றின் துக்கங்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா?
இவற்றையும் சேர்ந்து யோசிக்கும்போது
நம் கஷ்டங்கள் தீரும்
மனிதனுக்காக ஜீவன்கள் அழிந்து கொண்டிருக்கும்
வரையிலும்
என்னை சந்தோஷமாக வை என்று
மனிதன் எப்படி யாரிடம் கேட்க முடியும்?
மரங்கள் உன்னதமானவை
கம்பீரமான எளிமை
நிர்மலமான இதயம்
மேலே மேலே செல்லும் அவா
சூரியக்கிரணங்களில் குளிப்பதில் மோகம்
மண்ணை எப்போதும் மறக்காத தன்மை
மௌனம்.
மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்.
கவிஞரின் மெல்லிதயம் செடிகளின் வறுமையைப் பற்றி, மிருகங்கள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், செடிகள் இவற்றின் துக்கங்களை யோசிக்கச் சொல்கிறார். மனிதர்கள் தங்கள் கஷ்டங்களைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு மற்றெல்லா உயிர்களின் கஷ்டத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டுகிறார். அதோடு மரங்களை மனிதர்களின் லட்சியமாக மாற்றி உருவகப்படுத்துகிறார். மனிதர்களை விருட்சமாக மாறத் தூண்டுகிறார். கவிதையை வாசித்து முடிக்கும் போது மரங்களின் மீது மரியாதை தோன்றுகிறது. மதிக்க வேண்டும் என்ற ஆவலும் அவற்றின் மீது அன்பும் பிறக்கிறது. அந்த அன்பு இயற்கையின் மீதான பேரன்பாக மாறி இந்த பூமிப்பந்தை நேசிக்கத்தூண்டுகிறது. நேசம். நேசம் மட்டும் தான். ஆம். நேசத்தை தவிர இந்த உலகில் எது மிஞ்சப்போகிறது?
நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்
No comments:
Post a Comment