Monday, 13 February 2017

கலையின் கனவு

 கலையின் கனவு

உதயசங்கர்

கலை இன்னமும் பிடிபடாத மர்மச்சுழிப்புகளுள்ள ஆற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. எழுதத்தொடங்குகிற ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அந்த மர்மச்சுழிப்பின் மீது அடங்காத ஆசை கொண்டே ஆற்றுக்குள் இறங்குகிறார்கள். வாலைக்குமரியின் வனப்பென மயக்கும் அழகுடன் அந்தச்சுழி ஈர்க்கிறது. முதலில் ஏற்படுகிற ஈர்ப்பு பின்பு மெல்ல மெல்ல சந்நதம் கொண்டு வெறியாக மாறிவிடுகிறது. பார்ப்பதற்கு மிகஎளிதே போன்று தெள்ளத்தெளிவாய் தோன்றும் அந்த கலையின் மர்மம் கையில் அள்ளும்போது நழுவி விடுகிறது. ஆனால் ஆற்றில் இறங்கிவிட்ட யாரும் மீண்டும் கரையேறியதில்லை. வீடு, வேலை, மனைவி, மக்கள், என்று எல்லோரும் ஒருபொழுதோ, இடையிடையோ, ஆற்றிலிருந்து எப்படியாவது கரையேறிவிடும்படி அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
“ சுழியில இறங்கிராதீக…அது உள்ளே இழுத்துரும்..”
என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதே போல ஆற்றின் கரையில் கால் எச்சரிக்கையுடன் கால் நனைத்த சிலரும் ஆற்றின் மேடான பகுதியில் நின்று கொண்டு கைகளை அலைத்து கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“ அது கசம்ல… மோகினிப்பிசாசு.. திரும்பிப் பார்க்காம வந்துரு…”
என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கனவுப்பிரியனின் காதுகளில் யாருடைய குரலும் கேட்கவில்லை. ஆற்றுக்குள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இறங்கிக் கொண்டிருக்கிறார். எப்படியும் கலையின் மர்மத்தைக் கண்டுபிடித்து விடவேண்டும் என்கிற உறுதி அவர் கண்களில் தெரிகிறது. எத்தனை போக்கு காட்டி பசப்பினாலும் அவர் கலையின் சுழியில் இறங்கி விடுவார் என்ற தீர்க்கதரிசனம் ” சுமையா “ தொகுப்பில் நிதர்சனமாகிறது.
மிகச் சிறந்த கதைசொல்லி கனவுப்பிரியன். அதனால் அவரால் கதைகளைப் பின்னி அழகுபடுத்த முடிகிறது..அநேகமாக சர்வதேச அளவிலான மனிதர்களை தமிழ்க்கதைப்பரப்பிற்குள் கொண்டு வந்த மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவராக கனவுப்பிரியன் திகழ்கிறார். அதோடு அறிவியல் புனைவுக்கதைகளை எழுதுகிற எழுத்தாளராகவும் இருக்கிறார். எனவே கதைகளை வாசிக்கத்தொடங்குகிற வாசகனுக்கு வாசிப்பு இன்பத்தை அளிக்கிற கதைகள் இந்தத் தொகுப்பில் விரவியுள்ளன.
பெரும்பாலும் ஒரே மாதிரியான அல்லது ஒரே தொனியிலான கதைகளே தொகுப்பாக வருகின்ற காலத்தில் கனவுப்பிரியனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அநுபவத்தைத் தருகின்றன என்பதை சொல்லியாக வேண்டும்.
சுமையா வில் வருகிற ஆயிஷா என்ற அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த ராவல்பிண்டியில் பிறந்து வளர்ந்தவள் சூழ்நிலை காரணமாக இன்றைய இந்தியாவில் வாழ்கிறாள். ஆயிஷா மீண்டும் ராவல்பிண்டிக்குப் பயணம் செய்கிறாள். அவளுடைய உணர்வுகள், அவள் அநாதையான சூழ்நிலை, சுமையா என்ற பெண்வஹாபி, என்று சுமையா கதை நம்மைக் கட்டிப்போடுகிறது. நம்பி கோவில் பாறைகள் கதையில் அமானுஷ்யம் பொங்கி வழிகிறது என்றால் ஆவுளியா என்ற கடல்பசுவில் கடல்சார் அறிவியலும், அங்கே நடக்கிற சுரண்டலும் தெரிகிறது. நேற்றைய ஈரம் மிக எளிய காதல்கதை ஆனால் ம்க வலிமையான அரசியலைச் சொல்கிறது. மார்கோபோலோ மர்கயா போலோ அற்புதமான கதை. வாழ்வின் விசித்திரத்தை எந்தத்தலையீடும் இல்லாமல் கனவுப்பிரியன் வரைந்து காட்டியிருக்கிறார். ஒருபைத்தியக்காரனின் கிறுக்கலைப் போல மார்க்கோ போலோவை வாழ்க்கை அலைக்கழிக்கிறது.
வியாதிகளின் மிச்சம் வாசிக்கிற யாருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய கதை. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் துணிக்கடைக்கார அண்ணாச்சியும் ஒன்று என்பது என் துணிபு. ஏன் துணி வியாபாரம் செய்யும் அண்ணாச்சி சுந்தரத்திற்கும் செல்வராணிக்கும் இடையில் பாலமாகிறார்? அதன் விளைவால் தன்வாழ்க்கையையே தியாகம் செய்கிறார். வாழ்க்கையில் சில காரியங்களைப் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. ஆனால் துணிக்கடைகார அண்ணாச்சியைப் போன்ற சிலரால் தான் இன்னமும் இந்த உலகத்தில் அன்பும் தயையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு திகில் அநுபவத்தைத் தருகிற ஜெனியின் டைரிக்குறிப்புகளும், கிரிமினல் கதையாக மண்ணெண்ன குடிச்சானும், தந்தைமையை உயர்த்திப்பிடிக்கும் கடல்குதிரையும், மானுடத்தை உயர்த்திப்பிடிக்கும் அன்று சிந்திய ரத்தமும், வளரிளம் பருவத்து உணர்வுகளை இயல்பாக பரிமளம் பெரிய மனுசி ஆயிட்டா, கதையிலும், பறவைகளின் தற்கொலைகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய மர்மத்தை துப்பறியும் அறிவியல் கதையாகவும் கனவுப்பிரியன் சித்தரித்துள்ளார்.
புதிய உத்திகளையும், புதிய தளங்களையும் கையாண்டுள்ள கனவுப்பிரியனின் இந்தத் தொகுப்பு வாசிக்கும் யாவரையும் உற்சாகப்படுத்தும். புதிய வாசிப்பு அநுபவத்தை ஏற்படுத்தும். புதிய கதைக்களன்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும். ஆச்சரியப்படுத்தும் மொழியின் சரளம் கனவுப்பிரியனுக்குக் கைவந்திருக்கிறது. இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்ற நம்பிக்கையை சுமையா தொகுப்பு தருகிறது என்பது உறுதி.
அப்புறம் என்ன
 கலையின் மர்மத்தைத் தேடி ஆற்றுக்குள் கனவுப்பிரியனும் இறங்கிவிட்டார். இனி யாருடைய அழைப்பும் அவருக்குக் கேட்காமல் போவதாக! முங்கி மூழ்கி மூச்சுத்திணறி முத்துக்களை அவர் கொண்டு வருவதாக! தேடல் தொடர்வதாக!

.


No comments:

Post a Comment