Tuesday, 14 February 2017

வசீகரிக்கும் வனத்தின் அழகு

வசீகரிக்கும் வனத்தின் அழகு ……..



உதயசங்கர்



 
வாழ்வின் அர்த்தபோதம் கவிதையைப் போல அத்தனை செறிவாக வேறெந்த
படைப்புகளிலும் வெளிப்படுவதில்லை. மொழி தன்னை அலங்கரித்துக்கொள்ளவும்
அம்மணமாகவும் ஒரே நேரத்தில் கவிதைகளில் மட்டுமே காட்சியளிக்கிறது.
கவிதையில் ஒரு சொல் வெறும் ஒரு சொல்லல்ல. அது மனிதகுலத்தின் பண்பாட்டு
வரலாறு. மனிதகுலத்தின் ஞானச்செருக்கு. மனிதகுலத்தின் அழகியல் செயல்பாடு.
மனிதகுலத்தின் அரசியல் இயக்கம். அதனால் கவிதையில் மொழி தன் அர்த்தங்களின்
உச்சத்திற்கும் அரத்தமின்மையின் அதலபாதாளத்திற்கும் இடையே ஊஞ்சல்
ஆடுகிறது. அந்த பயங்கர ஊஞ்சலில் கவிஞன் தன் வாழ்வநுபவங்களை, அதன்
தரிசனங்களை, கவிதைகளால் ஆட்டிவிக்கிறான்.


ஈராயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழ் கவிதைகள்  காலதேச வர்த்தமானங்களுக்கு
ஏற்பவும், அரசியல், பொருளாதார பண்பாட்டுச் சூழல் மாற்றங்களுக்கு ஏற்பவும்
 
தன்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது.   நவநவமான கவிதைகள். புதிய புதிய
கவிஞர்கள்  தமிழ்மொழியைப் புதுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மொழியின்
பண்பாட்டு மரபையும் நவீன மரபையும் சமூக விமரிசன மரபையும் இணைத்து ஒரு
புதியகவிதை மொழியை உருவாக்குகிறார்கள். அந்த அணிவரிசையில் ஆனந்தனின்
யுகங்களின் புளிப்பு நாவுகள் பொருத்தமாக இணந்து கொள்கிறது.



 
இத்தொகுப்பு  நமது மண்ணின்  வாழ்க்கையான  விவசாய  வாழ்க்கையின்
பலமுகங்களை மிகத் தீவிரமாகப்  பேசுகிறது. அக் கவிதைகளில்
உள்ளடங்கியிருக்கிற  நோஸ்டால்ஜியா  வில்  நீள்கிற ஏக்கம் நம்மையும்
பீடிக்கிறதுகொழுவு எருத்து கவிதையில் மரபு நவீனத்தோடு முரண்படுகிற
புள்ளி கூராகக் குத்துகிறது. மின்னிக்காய்களும் மினுக்காட்டான்களும்
கவிதையில் விவசாய விழுமியங்கள் நவீனத்தின் தொடையிடுக்குகளில்
வழிந்தோடுகிற அவலம்.   அம்மாவின் மருந்துச்சீட்டில் நீர்க்கருவைகள்
இயற்கையைத் தின்று தீர்க்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தை சிதைக்கும்
மனிதப் பெருங்காமத்தை விசாரணைக்கு உட்படுத்துகிறது  லேகிய வாய்.
யானைவால் மோதிரத்திற்குள்ளிருந்து பிளிறுகிறது ஒற்றையானையின் அவலக்குரல்.
அனைத்தும் மனித குலத் துயரத்தின் குரல்கள். எச்சரிக்கையின் குரல்கள்.


இயற்கையின் மீதான அவருடைய நேசமே அத்தனை வகையான மரங்களையும், செடிகளையும்
பூக்களையும், பறவைகளையும் கவிதைகளில் வாழ வைத்து கவிதைகளுக்கு சங்ககாலச்
சாயலைக் கொடுக்கிறது.


ஆனந்தனின் மொழிவளம் அதிசயப்பட வைக்கிறது. நான் கவிதை - அவள் வாசகி,
அம்மாக்களின் செவிப்பூக்கள், பிரபஞ்சி முலையூட்டுகிறாள், யுகங்களின்
புளிப்பு நாவுகள்  போன்ற பல கவிதைகளின் மொழிச்செறிவும் புனைவும்
படிமங்களும் அற்புதமானது.



படிமங்களின் சுழல்பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும்
கவிஞர்  சிறிது தூரத்திற்குப் பின் கையை விடுவது தெரியாமல் விட்டு
விடுகிறார். வரிகள் தோறும் முன்னேறி வாசிக்கிற நமக்கு படிமங்கள்
துலங்குகின்றன. கவித்துவத்தின் தரிசனம் தெரிகிறது. வேறு வேறு மாதிரியும்
வாசிக்க முடிகிறது. அந்தப் படிமச்சுழலிலிருந்து வெளியேறலாம் அல்லது
மீண்டும் மீண்டும் புதிய புதிய பாதைகளைக் கண்டுபிடித்துக்
கொண்டேயிருக்கலாம். மு.ஆனந்தன் இதை மிக லாவகமாகக் கையாள்கிறார்.



திருமஞ்சனநீராட கவிதையில் வருகிற திரு மூன்று நான்கு வரிகளுக்குப்
பின்னால் த்வனி மாறிவிடுகிறது. ஆற்றில் இறங்கி  சிறுதேர் பருவத்து
சிறுவர்கள் கழித்த சிறுநீராக ஓடுகிற ஆற்றைக் கண்டு அதிர்ச்சியடைவது
தெய்வம் மட்டுமல்லமனிதப்பொங்கல் கவிதையில் மாட்டையும் மனிதர்களையும்
மாற்றிப்போட்டு சூது விளையாடுகிறார்.   இவரது சூது
விளையாட்டு/மேஜிக்/மாயாஜாலம் தீக்கூடு, கடவுளின் பத்தாம் அவதாரம்,
வேறென்ன வேண்டும், பகலதிகாரம், சொர்க்க ரத ஓட்டுனரின் பிரயத்தனம், நான்
சொல்வதெல்லாம் பொய் போன்ற கவிதைகளில் உச்சம் தொடுகிறது.


பல கவிதைகள் தமிழ்க் கவிதைவெளியில் புதிய தரிசனம். கபாலங்கள் எழுதச்சொன்ன
கவிதைகள், ஒரு உடலை வெண் துணியில் பொதிந்தளித்தல், ஆஞ்சியோ, பிரபஞ்சி
முலையூட்டுகிறாள், அப்பாக்களின் முலைகள், என் மகள் பெரியவளாகி போன்றவை
தமிழ்க் கவிதையின் புதிய குரல், புதிய பாடுபொருள், புதிய படிமங்கள். பால்
சுரக்காத அப்பாகளின் முலைகள், ஒரு சடலத்தைப் பொதிந்தளிக்கும் பிரேதப்
பரிசோதனை , ஆணுறை பாதுகாப்பற்ற பாலியல் தொழிலின் அவலம், ஆஞ்சியோ இருதய
சிகிச்சை குறித்தெல்லாம் இதுவரை தமிழ்க் கவிதை வந்துள்ளதா என்பது ஐயமே !


கவிதைகளில் உள்ள எள்ளல் கவிதைகளின் வாசிப்புத்தளத்தை உயர்த்துகின்றன.
சமூகத்தின் நோய்ப் படிமங்களை விமர்சிக்கிற  கவிதைகளும் வலிமை குன்றாமல்
எழுதப்பட்டிருக்கின்றனபொணந்தூக்கி சாமி, நாங்கள் பாராட்டப்படாத
குழந்தைகள், பதவிக்காய்ச்சல், மாறாத காரணமாய், மற்றவை நேரில்,
கன்னிமேரியின் தீட்டுத்துணிகள் போன்ற கவிதைகளின் குரல் நம் மனதை
அறுக்கும் கூராயுதங்கள்.


அப்பா என்றொரு மாவீரன்மாவீரனாக மட்டுமே வாழ்ந்து அப்பாவாக வாழமறந்த
சோகத்தைப் பேசுகிறது. முகமூடிகளை மாற்றி மாற்றி மாட்டித்திரிந்து இரவு
வீடு திரும்பும்  ஒருவன் தன் குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ இயலாத அப்பா
என்கிற முகமூடியின் துயரத்தை தூங்கு மூஞ்சி மரத்தில் அனாதையாய் தொங்க
விட்டுள்ளார்.   அப்பாவைப் பற்றிய பல கவிதைகளில் அப்பாவின் படிமங்கள்
வேறு வேறு மாதிரியாக புலப்படுகின்றனவேறு வேறு கவிதைகளில் வருகின்ற
அப்பாக்கள் வேறு வேறு உணர்வுகளைத் தாங்கி வேறு வேறு அப்பாக்களாக
வாழ்கிறார்கள்.   அதேபோல் ன்னுக்குட்டியும். அப்பாவின் மார்புகளில்
பாப்பி கிடைக்காமல் கிணுங்கும் ன்னுக்குட்டி வேறு கவிதையில்  அப்பாவின்
ஆயுட்கரம் பற்றி மார்கண்டேய நந்தவனத்திற்குள் ஆதுரமாய் அழைத்துச்
செல்கிறாள். தொகுப்பு முழுவதும் வாசகனையும்  வேறு வேறு  நந்தவனங்களுக்கு
அழைத்துச் சென்று கண்ணாமூச்சி விளையாடுகிறாள்ஆயாக்கடை ஓர்மையில்
பாலியகாலத்தின் ஊஞ்சல் ஆடிக்கொண்டேயிருக்கிறது.




எல்லாக்கவிதைகளைப் பற்றிய என்னுடைய ஊடாடல், வாசகர்களுக்கு இடையூறாக
இருக்கலாம் என்று அஞ்சுகிறேன். நல்ல, சிறந்த, மிகச்சிறந்த, கவிதைகள் என்ற
சான்றிதழ்கள் கவிதை குறித்த உங்கள் பார்வையை குறுக்கி விடக்கூடும்.
ஆனந்தனின் கவிதைகள் அனைத்துமே தன்னளவில் முழுமை பெற்ற, வாசகனின்
அக்கறையான வாசிப்பைக் கோருகின்ற கவிதைகள். அதோடு கவிதை என்னும் பிரதியின்
சிறப்பே அதன் பன்முக வாசிப்பு தான். உங்களுடைய அவதானத்தை நீங்கள்
கண்டுபிடிக்க நான் வழி விடலாம் என்று நினைக்கிறேன்.


கவிஞர். ஆனந்தனின்  யுகங்களின் புளிப்பு நாவுகள்  நூலிலுள்ள கவிதைகள்
மிகச்சிறந்த கவிதைக்காரனை அடையாளம் காட்டுகின்றன. கவிதை என்பது இயக்கம்.
முயற்சியில் தளர்ந்து கவிதை வேதாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு
ஓடிப்போகிறவர்களும் நிறைந்தது நமது கவிதையுலகம். ஆனந்தன் கவிதையை
இயக்கமாக மாற்றும்போது தமிழுக்கு இன்னுமொரு முக்கியமான கவிஞன் கிடைப்பான்
என்பதில் ஐயமில்லை.


முக்குளித்து இருளின் ஊடே மூச்சடக்கி மூழ்கி மூழ்கிமூழ்கிமு.ஆனந்தன்
இன்னும் வலிய முத்துக்களை எடுக்க வாழ்த்துக்கள் !

1 comment:

  1. எனது "யுகங்களின் புளிப்பு நாவுகள்" கவிதைத் தொகுப்பிறகு மிகச்சிறந்த முன்னுரை அளித்த கவிஞர் உதயசங்கர் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும். மு.ஆனந்தன்

    ReplyDelete