வாழ்வுத்தருணங்களின்
ரசவாதக்கலை
கலை
புனைவின் வண்ணங்களால் தீட்டப்படுகிற ஓவியம். புனைவோ வாழ்க்கை நதியில் அடியில் உருண்டோடிக்கொண்டிருக்கும்
கூழாங்கற்களைப் போல உருவங்களையும் வண்ணங்களையும் விதவிதமாய் மாற்றிக் கொள்ளும் வல்லமை
கொண்டது. கலைஞன் சதாஅலையடிக்கும் வாழ்வின் கரையிலிருந்து கொண்டு உருண்டு வரும் புனைவின்
வழி கலையை உருவாக்கத் தன்னையே அர்ப்பணிப்பவன். எல்லாக்கலைகளுக்கும் வாழ்க்கை தான் உயிரூட்டுகிறது.
வாழ்வின் பிம்பங்களை வைத்து பொம்மலாட்டக்கலைஞனைப் போலவோ, தோற்பாவைக்கூத்துக் கலைஞனைப்
போலவோ வாசகன் முன்னால் விளையாடுகிறான். பல நேரங்களில் கலைஞன் வெற்றி பெறுகிறான். சில
நேரங்களில் தோல்வியும் அடைகிறான். கலை அத்தனை எளிதானதல்ல. உருட்டுகிற தாயக்கட்டைகளில்
எப்போது தாயம் விழுமென்றோ எப்போது விருத்தம் விழுமென்றோ யாரால் சொல்ல முடியும் சகுனியைத்
தவிர? சூதாட்டத்தில் அடுத்து வரப்போகிற சீட்டை வைத்துத் தான் வெற்றி அல்லது தோல்வி
என்னும்போது வருகிற சீட்டை உங்களால் முன்னுணர முடியுமா? அப்படித்தான் கலையும். கலையின்
விதிகள் அனைத்தும் அறிந்தவராக இருந்தாலும் கலையின் துடிப்பு அந்தந்தக் கணத்திற்கானது.
அந்தக்கணத்தின் உயிர்த்துடிப்பை கலைஞன் உணரும்போதே கலை மெல்ல உயிர்க்கத் தொடங்குகிறது.
வாழ்க்கை
தருணங்களால் ஆனது. தருணங்களோ மனிதர்களின் உணர்ச்சிகளால் நெய்யப்படுகின்றவை. உணர்ச்சிகளைத்
தீர்மானிக்க மனிதர்களின் வாழ்நிலை முன்னால் வருகிறது. வாழ்நிலையோ சமத்துவமற்றதாக, சமவாய்ப்புகளற்றதாக,
இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு கலைஞன் தன்னைச்சுற்றிலும் நடக்கின்ற சம்பவங்கள், அநுபவங்கள்,
கேள்விப்பட்டவைகள், என்று எல்லாவற்றினூடும் தன் கலைப்பார்வையை ஊடுருவச் செய்கிறான்.
அந்த ஊடுருவலிலிருந்து நம்முன்னால் சில காட்சிச்சித்திரங்களைச் செதுக்கி முன்னால் வைக்கிறான்.
நாம் அதை வாசிக்கும்போது அந்த அநுபவங்கள் தங்களின் மீதே மாயஒளியை வீசி துலங்கச் செய்கின்றன.
கலையின் ஒளிபட்டதுமே வாழ்வின் முழுமை நம்முன்னால் விசுவரூபம் கொள்கிறது. வாசகன் தன்னை
அறிகிறான். வாழ்வை அறிகிறான்.
தமிழின்
மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான ம.காமுத்துரையின் கதைகள் தனித்துவமானவை.
வாழ்வை அதன் போக்கில் யதார்த்தமாக காட்டுபவை. இந்தத் தொகுப்பில் உள்ள பதினைந்து கதைகளில்
வருகிற காமுத்துரையின் கதைமாந்தர்கள் சாதாரண எளிய மனிதர்கள். சிக்குப்பிடித்த வாழ்க்கையில்
சண்டையும் சச்சரவுமாய், கண்டும் காணாமலும், உண்டும் உண்ணாமலும், அன்றாடங்களைக் கடத்துகிற
சாமானியர்கள். அவர்களுடைய வாழ்வில் உன்னதங்களைத் தேடி அலைபவர்களில்லை. அதற்கு நேரமுமில்லை..
விடிந்தும் அடைந்தும் சச்சரவிட்டுக் கொண்டே வாழும் வாழ்க்கையில் எங்கே போய் தேட முடியும்?
ஆனால் அவர்களே இந்த அவலமான வாழ்க்கையில் உன்னதமானவர்களாக சில கணங்களேனும் மாறி விடுகிறார்கள்.
அந்தக் கணங்களையே காமுத்துரை எனும் கலைஞன் கச்சிதமாகக் கைப்பற்றி தன் கலையின் ரசவாதத்தால்
மெருகேற்றி நம்முன் வைக்கிறார்.
”
அந்தராத்மாவின் ஆட்டத்தில் “ வயிற்றுப்பிழைப்புக்காக அந்தரத்தில் கயிற்றில் நடக்கும்
கழைகூத்தாடி சிறுமியைப் பார்க்கும் பெருசு தன் வாழ்க்கையை, பேரன் பேத்திகளை நினைத்துப்பார்க்கிறார்
என்பதோடு கதை முடிந்திருந்தால் சாதாரணக்கதையாகிருக்கும். கயிற்றில் நடந்த சிறுமி தாத்தா
என்று தட்டேந்தி வந்து நின்றபோது அந்தக் குழந்தையை தன் பேத்தியாக நினைத்துத் தூக்கிக்
கொண்டாடுகிறாரே. வாழ்க்கை கசடுகளை மட்டுமல்ல கவிதைகளையும் வைத்திருக்கிறது. ” ஆறோட்டம்
” மனைவி இறந்தபிறகு வயதான ஆண்கள் வாழ்கின்ற தனிமைவாழ்க்கையை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறது.
யேளா என்ற அந்த ஒற்றைச் சொல்லில் இருவரின் தாம்பத்திய வாழ்க்கை விரிகிறது. தமிழ்ச்சிறுகதைகளில்
இந்தக் கதை தனித்துவமானது. ஒரு தெருவில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் பைத்தியக்காரனின்
உடல்மொழி, தெருக்காரர்களின் அன்றாட வாழ்க்கையில் அவன் வலுக்கட்டாயமாக நுழைகிற விசித்திரம்.
ஒருவகையில் இந்தக்கதை வேறொரு கதையாகவும் வாசிப்பில் மாறும் என்றே தோன்றுகிறது. இருள்விலக்கத்தில்
வருகிற கிழவி மருமகள் விட்டு விட்டுப்போன குழந்தைகளை வைத்துக் கொண்டு குடிகாரமகனோடு
மல்லுக்கட்டுகிறாள். எப்படியாவது தன்னுடைய மகனை பேரக்குழந்தைகளை கடைத்தேற்றிவிட அவள்
படுகிற பிரயத்தனம் எளிய மக்களின் பிடிவாதமான போராட்டத்திற்கு நல்ல எடுத்துக்காட்டான
கதை. கடை கதையில் அன்றாட கடை வியாபாரம் செய்கிற சாதாரண மனிதர்களின் பாடு எத்தகையது
எப்படியெல்லாம் நயந்து, மிரட்டி உருட்டி நடக்க வேண்டியுள்ளது. எல்லாம் பிழைப்புக்காக
அதுவும் கடைக்காரர் கடைசியில் குரல் உடையும்போது நமக்கு மனம் நெகிழ்கிறது. வாழ்ந்து
கெட்ட குடும்பத்துப்பெண் நகரத்தில்போய் ஆண்களோடு சமமாக வேலை பார்க்கக் கூச்சப்பட்டு
கிராமத்திலிருக்கும் சிறிய தேநீர்க்கடையில் வேலை கேட்டு நிற்பதுவும் மறுநாள் வேலைகிடைக்குமா
கிடைக்காதா என்ற நிச்சயமில்லாமல் அவள் நிற்பதுவுமாக கருப்புக்காப்பி கதை பூரணமடைகிறது.
சின்ன
விசயங்கள் பெரிய சங்கதிகள் என்ற கதையிலும் யாரும் பேசாப்பொருளைப் பேசியிருக்கிறார்
காமுத்துரை. வயதானால் காமம் இருக்கக்கூடாது என்ற சிந்தனை மலிந்த சமூகத்தில் வயதானவர்கள்
இரண்டுபேர் ஓடிப்போய் விடுகிற சம்பவத்தின் மூலம் விவாதத்திற்குள்ளாக்குகிறார். இந்தத்
தொகுப்பின் மிக முக்கியமான கதையாக உருவாகியிருக்கிறது. வீட்டிலேயே சிறுகடை போட்டு முன்னேறி
விடலாம் என்று முனைகிற குடும்பத்தின் கதை தான் தீராக்கடன். உரையாடலிலேயே கதையை நகர்த்துகிறார்
காமுத்துரை. மட்டன் பிரியாணியும் மாட்னி ஷோவும் என்ற கதை சமகால இளைய சமுதாயத்தின் ஒரு
பக்கத்தைக் காட்டுகிறது. மாறிவரும் மதிப்பீடுகள் குறித்த அதிர்ச்சியை இந்தக் கதையளிக்கிறது.
எல்லாக்கதைகளைப்
பற்றியும் பேசுவதை விட காமுத்துரையின் கலை பற்றி பேசுவது உகந்ததாக இருக்கும். வாழ்வின்
ஓட்டத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து நம்முன் வைக்கிறார் காமுத்துரை. அதில் அவர் தலையீடு
செய்வதில்லை அல்லது அவருடைய தலையீடு நமக்குத் தெரியாமலிருக்க மாயாஜாலம் செய்கிறார்.
பக்கம் பக்கமாக விவரணைகளின் மூலம் கதை சொல்லும் காலத்தில் உரையாடல் மூலமாக மட்டுமே
கதை சொல்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டுமே விவரணை செய்கிறார். உரையாடல் மூலமாக
கதையை நகர்த்திச் செல்வதில் சமீபகாலத்தில் மிகச்சிறந்த சிறுகதையாளராக காமுத்துரையே
திகழ்கிறார். அனைத்துக் கதாபாத்திரங்களும் உரையாடல்வழி வெளிச்சம் பெறுகிறார்கள். தங்களுடைய
தனித்துவமான அடையாளங்களை உரையாடல்கள் மூலமாகவே பெறுகிறார்கள். உரையாடல்கள் மிக இயல்பாக
இருக்கின்றன. இப்படித்தான் பேசியிருக்க முடியும் என்பது போல. நிறையப் பேசுகிறார்கள்.
பேச்சின் மூலம் எல்லாப்பிரச்னைகளையும் தீர்த்து விடலாம் என்பது போல பேசுகிறார்கள்.
பேச்சின் மூலம் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிவிட யத்தனம் கொண்டவர்களைப் போலப் பேசுகிறார்கள்.
சாரமாகச் சொல்வதானால் காமுத்துரை இந்த வாழ்வின் நீடித்த கணங்களை அல்லது தருணங்களைக்
விவரிக்கிறார். காட்சிப்படுத்துகிறார் அப்படிக்
காட்சிப்படுத்தும்போது அவர் எங்கும் தன்னைக் காட்டிக் கொள்வதில்லை. எதிர் எதிரான கருத்துக்களையும்
பேச வைக்கிறார். திரைக்குப் பின்னால் இருக்கிறாரோ என்று தேடிப் போனால் அங்கும் இல்லை.
கதாபாத்திரங்கள் சுயமாக இயங்குவது போலத்தான் தெரிகிறது. அப்படியானால் காமுத்துரை எங்கே?
அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் முன்வைக்கும் கோணத்தில், கதாபாத்திரங்களில்,
உரையாடல்களில், கதைகளின் தொடக்க வரிகளில், முத்தாய்ப்பான முடிவு வரிகளில் என எங்கும்
நிறைந்திருக்கிறார். யாரும் அவ்வளவு சுலபமாய் கண்டு பிடிக்க முடியாதபடி. ஒளிந்து கொண்டிருக்கிறார்.
கலையின்
விசித்திரங்களை கண்டு வியந்தபடி… மீண்டும் மீண்டும் கதாசாகரத்தில் முத்துக்குளித்தபடி….
மகத்தான கலைஞன் காமுத்துரை..இந்தக் கதைகளை வாசிக்கும் நீங்களும் உணர்வீர்கள்!
……..
No comments:
Post a Comment