குழந்தைகளின் அற்புத
உலகில் – மதிப்புரை
ஜெ. பொன்னுராஜ்
உதயசங்கரின் “குழந்தைகளின் அற்புத உலகில்” நூலை
வாசிக்க வாசிக்க அது என்னை குழந்தைகளின் எதார்த்தமான உலகிற்கு கூட்டிச்சென்றது.
“ஒழுங்கு கண்டிப்பு” என்ற பெயரில்
என் இளமையின் சந்தோசமான பொழுதுகளை தொலைத்துவிட்டிருந்த நான் இந்நூலை வாசிப்பதன்
மூலம் எனக்குள் ஏதோ ஒரு நிறைவை
தேடிக்கொள்கிறேன்.
நிலா வெளிச்சத்தின் விளையாட்டுக்கள், நிலாச்
சோறு எல்லாம் ‘படிப்பு’ என்ற அலையில் அடித்துக்கொண்டு போய்விட்டது. டாக்டராக, பொறியாளராக
தங்கள் குழந்தைகளை பார்க்க ஆசைப்படும் பெற்றோர்கள்; அவர்களின் மன உலகை ஒரு நாளாவது
ஊடுருவிப் பார்த்ததுண்டா? அவர்களின் அசாத்திய கற்பனை திறனை, அறிவியல் விஞ்ஞான
சிந்தனையை, விளையாட்டு ஆர்வத்தை இப்படி எல்லாவற்றையும் கூர்மழுங்கச் செய்யும்
அத்தனையும் செய்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் வாழ்வை, அன்பைத்
தொலைத்து எப்போதும் ஒரு இறுக்கத்தையே சிக்கெனப் பிடித்து, அதே கண்டிப்பை தம் குழந்தைகள்
மீது திணித்தும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பியும் கணக்கு
தீர்க்கிறார்கள்.
குழந்தைகளின்
செயல்பாடுகளில் கோடிப்புதையல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வாழ்தலின் இன்பத்தை நோக்கியே
குழந்தைகளின் சிறகுகள் விரிந்து பறக்கிறது. தங்கள் உலகத்தில் அனுமதியின்றி
நுழையும் எவரையும் எதிர்த்து கலகம் செய்கின்றன குழந்தைகள். அதை புரிந்து கொள்ளாமல்
வன்முறை ஆயுதங்களால் அடக்கி ஒடுக்குகிறோம். என்றும் சூதும் வாதும் அறியாத குழந்தைகளிடம் அத்துமீறும்
அவலத்தில் தொடங்குகிறாம். வேறெங்கும் செலுத்த முடியாத அதிகாரத்தை குழந்தைகள் மீது
செலுத்த, அந்த குழந்தைகள் தாம் ஒரு தனித்துவம் மிக்க தனி உயிர் என்ற உரிமையை
இழக்கிறார்கள் என்ற வரிகளை வாசிக்கும் போது நிர்க்கதியாய் நிற்கும்
நிராயுதபாணியின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நினைவில் வருகிறது. தங்களுடைய
அறிதலின் தாகத்தை கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற அதிகாரத்தின் கரங்களுக்குள்
உள்ளொடுங்கிப்போகிறார்கள் குழந்தைகள். இதனால் பெரியவர்களாகும் போது சமூகத்தில்
நடக்கிற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மந்தமான மனநிலைக்கு ஆளாகிறார்கள் என
இன்றைய சமூக நிலையின் வேர்முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுகிறார்.
குழந்தைகளுக்கு தான் செய்த காரியங்களை விட, அதன் எதிர்வினையாக
நடக்கின்ற அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, அடிப்பது போன்ற விளைவுகள் ஆழ்மனதில்
பதிந்துவிடும். பயந்து நடுங்குகிற அதன் உள்ளம் தன் வாழ்நாள் முழவதும் அந்த
நடுக்கத்தை மறப்பதில்லை என்று சொல்லி, குழ்ந்தைகளிடம் குழந்தையாகவே பேசிப்
பழகவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார். அடிவயிற்றிலிருந்து எழும் குரலில்
பேசுகிறோ, அற்பம் என்றோ அற்புதம் என்றோ குழந்தைகள் உலகில் இல்லை. குழந்தை மனம்
பெரியவர்களுக்கு தெரியாத ரகசியமாக இருக்கிறது என வியந்து போகிறோம். ஒரு பத்து கிலோ
புத்தகப்பையை சுமந்து சாலையை கடக்க காத்திருக்கும் குழந்தைகளின் முகத்தை என்றாவது
ஒரு நாள் உற்று கவனித்திருக்கிறோமா? அதில் தெரியும் நிராதரவான உணர்வை உணர்ந்திருப்போமா
என குழந்தைகள் பக்கம் நின்று இடைவாரை உருவி சுழட்டுகிறார்.
எப்படி எதிர்பார்ப்பின்றி, பிரதிபலன் பாராது அன்பை வெளிப்படுத்துகின்றன குழந்தைகள்
என்றும் சொல்கிறார். ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்துவமாக ஓர் ஆளுமை
மறைந்திருக்கிறது என குழந்தையின் ஆளுமையை வெளிப்படுத்துகிறார். பெரியவர்களாலேயே ஓரிடத்தில்
ஒரு ஐந்து நிமிடம் உட்காரமுடியாத போது குழந்தைகளை வெளியில் விளையாடவிட மறுத்து
அருமைக் குழந்தைகளை எதிர்கால நோயாளிகளாக்கும் அறியாமை, குழந்தைகள் கேட்பது
அனைத்தையும் வாங்கிக்கொடுக்கும் மனநிலையால், கேட்டால் எல்லாம் கிடைக்குமென்ற விபரீதமான,
முரட்டுத்தனமான பிடிவாத குணத்திற்கு இட்டுச்செல்லும் சூழல்களை அலசுகிறார்.
அடக்கியே வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் மிக சுலபமாக ஏமாற்றப்படுவதற்கும்
இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆளாகும் என ஆராய்ச்சி மணியடித்து ஊருக்கு அறிவிக்கிறார்.
கிட்டிப்புல், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி கள்ளன் போலீஸ், பாண்டி என எண்ணற்ற கூடி
விளையாடும் விளையாட்டுக்கள் காணாமல் போய், வீடியோ கேம்ஸ் போன்ற குழந்தையின்
மனநிலைக்கும் எதார்த்தத்திற்கும் சற்றும் சம்மந்தமில்லாத விளையாட்டுக்களே
குழந்தைகளுக்கு கிடைக்கின்றன என்பதை யோசிக்க வைக்கிறார். தொலைக்காட்சி போன்ற நவீன
சாதனங்கள் பெருகி, திண்ணை கதைசொல்லிகள் காணாமல் போனாலும் குழந்தைகள் கதைகளை
சிருஷ்டிப்பதை கூர்ந்து பார்க்கிறார்;.
நம்முடைய குழந்தைகளை தொலைக்காட்சி, சினிமா, நடிகர்கள் என யார் யாரோ வளர்க்க
அனுமதிக்கும் நாம், என்றாவது நம்முடைய குழந்தைகளை நாம் தான் வளர்க்க வேண்டும் என
நினைக்கிறோமா என்ற கேள்வி சுரீரென்கிறது. குழந்தைகளுக்கு கதைகள் மிகவும்
பிடிக்கும். கதை கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம், ஒர்முகத்தன்மை, கற்பனை திறன்
வளர்ந்து யதார்த்த வாழ்வில் திகைப்பும் அதிர்ச்சியும் குழந்தைகள் அடைவதில்லை எனும்
போது நாம் தவற விட்ட தருணங்கள்தான் எத்தனை எத்தனை.
எல்லா குழந்தைகளையும் அவர்களது படைப்பூக்கம், திறமை, விருப்பம் சார்ந்து
அரவணைத்து ஊக்குவிப்பதாக இன்றைய கல்விமுறை இல்லை என சுட்டுவிரலை நீட்டுகிறார்.
எப்போதும் ஓட்டமும் சாட்டமும் பேச்சும் கேள்விகளுமாய் இருக்கிற குழந்தைகளை, கையில்
அடிஸ்கேலுடன் அடக்கி ஒடுக்கி கையை கட்டி வாயை பொத்தி உட்கார வைத்து வசக்கும்
நர்சரிகளில் விடும் நிலையை பார்த்து கவலை கொள்கிறார்.
இப்படி
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை பிடுங்கிவிட்டோம். கேள்விகளில்லா உலகத்தில் அவர்களை
ஊமைகளாக்கிவிட்டோம். கேள்விகளின்றி வாழ்க்கையா என கேள்வி கேட்கிறாh; நம்மைப்
பாh;த்து. அனைத்தையும் அறியும் தீராத தாகம் வளரும் குழந்தைகளிடம் இருக்கும். அந்த
ஆர்வத்தை, குறுகுறுப்பை, அர்ப்பணிப்பை செடியின் வேரில் வெந்நீர் ஊற்றுவது போல
முரட்டுத்தனமான கல்விமுறையில் அழிக்கின்றனர். கேள்விகளே இல்லாமல் பதில்களை மட்டும்
குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர் என கோபமாய்
சொல்லி, எந்தக் குழந்தையும் குதூகலமாக பள்ளிக்குச் செல்வதில்லை என்பதை
காரணத்தோடு பேசுகிறார்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் வளர்கிறது. சமூகத்தின்
பொதுப்புத்தியிலுள்ள வேலை, சம்பளம், பாதுகாப்பு போன்றவற்றால் குழந்தைகளின்
தனித்தன்மைகளை அலட்சியப்படுத்துகிறோம். பள்ளிகள் உடல் மனோரீதியிலான துன்பங்களை
தரும் அதிகாரத்தால், குழந்தைகளின் தனித்தன்மைகளை அழிப்பதாக சொல்லும் கூற்றை நாம்
ஏற்கத்தான் வேண்டும். எந்த விமர்சனமுமில்லாமல் சமூகத்தின் அடக்குமுறைகளை
சகித்துக்கொள்ளும் பொறுமையை நம்முடைய கல்வித்திட்டம் தருகிறது என இன்றைய சமூக
நிலைக்கான காரணங்களை வேர்தேடி போகிறார்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியில்லை. குழந்தைகள் வீட்டிலும்
வெளியிலும் பள்ளிகளிலும் சமூகத்திலும் ஒடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள்
தங்கள் குழந்தைமையை தொலைத்தவர்கள் என்று சாட்சியாக நின்று சொல்கிறார்.
குழந்தைகள் மனித இனம் தழைக்க, நீடித்திருக்க வந்த அற்புத மலர்கள். ஒவ்வொரு
குழந்தையும் இந்த சமூகத்தின் பொக்கிஷம். அன்பே உருவான அவர்களிடமிருந்து
கற்றுக்கொண்டு சுதந்திரமான பங்கேற்புள்ள கல்வியை அவர்களுக்கு கொடுத்து
ஏற்றத்தாழ்வுகளில்லாத சமத்துவமான ஒரு சமூகத்தை அவர்களிடம் கொடுப்பது நம் கடமை என
தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்.
“குழந்தைகளின் அற்புத உலகில்” என்னும் இந்த அற்புத நூல் ஒவ்வொரு பெற்றோரும்
வாசிப்பதன் மூலம், விடியலுக்கான நேரம் நெருங்குகிறது என்பதோடு, முழுவதும்
லயிக்காமல் கழித்துவிட்ட தன் குழந்தைமை காலத்தை சீர்தூக்கிப் பார்த்து ஒப்பீடு
செய்கிற ஒன்றாகவும் பிரகாசிக்கிறது.
வெளியீடு - என்.சி.பி.ஹெச்
இந்த நூலை வாசிக்கும் ஆர்வம் என்னுள் எழுகிறது.
ReplyDelete