Tuesday, 14 February 2017

தீபாவளிக்கடவுளின் அருள்

தீபாவளிக்கடவுளின் அருள்

உதயசங்கர்
60-70 களில் கோவில்பட்டி ஒரு சிறிய நகரம். கோவில்பட்டியில் இரண்டு பெரிய ஸ்பின்னிங் மில்கள் இருந்தன. என்னுடைய அப்பா ஒரு மில்லில் வேலை பார்த்தார். இரண்டிலும் குறைந்தது ஒரு ஐயாயிரம் தொழிலாளிகள் வேலை பார்த்தனர். செப்டம்பர் மாதம் முடிந்தவுடனேயே ஊருக்குள் மில்வேலைக்காரர்களை யார் பார்த்தாலும் என்ன தீபாவளி போனஸ் எப்போ? என்பது மட்டும் தான் கேள்வியாக இருக்கும். போதாத குறைக்கு சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டியாபீசுகளும், வேட்டாபீசுகளும் அதிகமாக இருந்த காலம். மில் போனசைத்தான் பஜாரில் இருக்கிற பெரிய கடைக்காரர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். தீப்பெட்டியாபீசு, வேட்டாபீசு போனஸ் எல்லாம் நடுத்தர, பிளாட்பாரக்கடைக்காரர்களுக்கு விட்டு விடுவார்கள். அமந்து அங்கொன்றும் இங்கொன்றும் ஆளரவத்துடன் வெறிச்சோடிப்போய் இருக்கும் கடைவீதி மில்லில் போனஸ் போட்டாச்சு என்ற மூன்று வார்த்தைகளில் ஏதோ மாயாஜாலம் நடந்த மாதிரி மாறிவிடும். கூட்டம்கூட்டமாக மக்கள் அலைமோதுவார்கள். சிறிசுகள், பெரிசுகள், குமருகள், அவுகளைப்பாக்கதுக்கு குமரன்கள் என்று கடைவீதி மக்கள் திரளாகிவிடும். மகிழ்ச்சி, கோபம், வசவு, வெட்கம், சிரிப்பு, அழுகை, பரிதவிப்பு, என்று மனித உணர்வுகளின் அத்தனை கலவையும் பஜாரில் கொட்டிக்கிடக்கும்.
தீபாவளி, பொங்கல், என்றால் மட்டும் தான் புதுச்சட்டை, டவுசர், பெரும்பாலும் அந்தப்புதுச்சட்டையும், டவுசரும், பள்ளிக்கூட சீருடையாகவே தான் வீட்டில் எடுப்பார்கள். ஏற்கனவே இருக்கிற சீருடை கந்தலாகி தன் உயிரை விடுகிறாப்பில் இருக்கிற போது தான் அடுத்த புதுத்துணி கிடைக்கும். அதுவரை இரண்டு பக்கமும் குண்டியில் கிழிந்த பித்தான் இல்லாத சாயம்போன அரணாக்கயித்தில் தொங்கிக்கொண்டு மானத்தைக் காப்பாத்திக் கொண்டிருக்கிற டவுசரும், சட்டைப்பை கிழிந்து, வெள்ளைநிறம் தன் குணத்தை மாற்றி அழுக்கு நிறத்தில் ஜொலிக்க பித்தான்கள் இல்லாமல் சட்டையில் ஏதோ ஒரு இடத்தில் குத்தியிருந்த ஊக்கு உடம்பையே கண்காட்சியாகக் காட்டும் சட்டையும் தான். பத்து நாளுக்கு ஒருமுறை காதியில் வாங்கிய மஞ்சள்நிற பார்சோப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் ஸ்னானம் நடக்கும். வேறுவழி கிடையாது. அவ்வளவு தண்ணீர் கஷ்டம். எட்டாவது வகுப்பு தாண்டுகிறவரை நாங்கள் யாரும் சட்டை, டவுசரைப்பத்தி கவலைப்படுவதில்லை.
எட்டாவது வகுப்பு தாண்டிய பிறகு தான் துணி எடுத்து தைக்கக்கொடுக்கிற வழக்கம் வந்தது. முதலில் அப்பா வழக்கமாக தன்னுடைய சட்டைகளை அவருடைய நண்பரான  கம்யூனிஸ்ட்தையல்காரரிடம் தான் கொடுப்பார். தோழர் எத்தனை மாதம் கழித்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். முதலில் நானும் அவரிடமே கொடுத்தேன். அவர் அளவு எல்லாம் எனக்கு எடுத்ததில்லை. சீத்தக்குஞ்சி மாதிரி இருந்த எனக்கு எதுக்கு அளவு என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு கௌரவக்குறைச்சலாக இருந்தது. பின்னே புதுத்துணியை தையல்காரர் மஞ்சள்பையிலிருந்து எடுத்து அவர் வைத்திருக்கும் இஞ்ச் டேப்பினால் அளந்து நம்மை ஒரு பார்வை மேலும் கீழும் பார்த்து, டேப்பினால் சட்டைக்கும் டவுசருக்கும் அளவு எடுத்து சட்டைப்பை ஒண்ணு போதுமா? இரண்டு வேணுமா? என்று கேட்க வேண்டும். உடனே இரண்டு பை, தோள்பட்டையில் இரண்டுபக்கமும் பிளாப்புகள் சட்டை பின்னால் ரவுண்டாய் வரணும். டவுசரும் கொஞ்ச டைட்டாய் இடுப்பில் பெல்ட் லூப்புகள் வைக்க வேண்டும். இப்படி இல்லாத நொரநாட்டியம் எல்லாம் சொல்லிட்டு வந்தால் தான் திருப்தி.
அதனால் அழுது புரண்டு என்னுடைய சட்டை, டவுசரை மட்டும் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்திலிருந்த ராஜ் டெய்லர்ஸ் கடையில் கொடுத்தேன். ஓனர் கம் டெய்லர் இளைஞர். எப்போதும் சிரித்தமுகம். என்னைச் சுத்திச் சுத்தி வந்து சட்டை, டவுசருக்கு அளவு எடுத்தார். ஒரு கொயர் நோட்டில் என்னவோ நம்பர்களை எழுதினார். பெயரைக் கேட்டு எழுதிக்கொண்டார். ரெம்பப்பெருமையாக இருந்தது. அப்புறம் போட்டாரே ஒரு குண்டை. ” தம்பி..தீவாளிக்கு முதநா ராத்திரி எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கோ “ அதுவரை இருந்த கம்பீரம் போய்விட்டது. “ அண்ணே..அண்ணே.. சீக்கிரம் கொடுங்கண்ணே.. தீபாவளிக்கு ஊருக்கு போய்ருவம்ணே..” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிப்பார்த்தேன். அவர் தெளிவாய் சொல்லி விட்டார். “ துணி ஏகப்பட்டது கெடக்கு.. எப்படி முடிக்கப்போறேன்னு தெரியல.. தம்பி தெரிஞ்ச பையனா இருக்கேன்னு தான் வாங்குறேன்…” என்று பிகு பண்ணினார். என்ன செய்ய முடியும்? ஒருவேளை முடியாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டால்? “ அண்ணே தீவாளி முதநா கரெக்டா எட்டு மணிக்கு வந்திருவேன்..ரெடியா வைச்சிருங்கண்ணே..” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். தீபாவளி வர இருந்த ஒரு வாரமும் இதே சிந்தனை தான்.
அங்கே போவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றாலும் சும்மா கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்தின் வழியாகப்போவேன். ராஜ் டெய்லர்ஸில் வேலை ரெம்பப்பிசியாக நடந்து கொண்டிருக்கும். அந்தக்கடை ஓனர் என்னைப்பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அவருடைய வேலையிலேயே கவனமாக இருப்பார். அப்படியே ஏகதேசமாக என்னைப் பார்த்தாலும் சிரித்த முகத்தினால் சிரித்தார். எனக்கு அப்பாடா ஞாபகம் வந்துரும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படியே தீபாவளிக்கு முதல்நாள் மதியத்துக்கு மேல் ஒரு பரபரப்பு வந்து விட்டது. எடுத்துக் கொடுத்த துணி எப்படி சட்டையாக, டவுசராக மாறுது? அப்படி மாறிய துணியின் கௌரவமே உயர்ந்து விடுமே. எப்பேர்ப்பட்ட கலை! எனக்கு என்னுடைய துணிகளின் உருமாற்றத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஏழு,ஏழரைக்கெல்லாம் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்துக்கு அருகில் போய்விட்டேன். கோவிலுக்கு முன்னால் தெருவிளக்கு வெளிச்சத்தில் பம்பரக்குத்து விளையாடிக் கொண்டிருந்த பையன்களை வேடிக்கை பார்த்தேன். பின்னர் நானாக காலத்தைக் கணித்து கடைக்கு முன்னால் போய் நின்றேன். பார்த்தால் என்னை மாதிரி ஒரு பத்துப்பேர் கடையை அடைச்ச மாதிரி அங்கே நின்று கொண்டிருந்தார்கள். தையல் மெஷின்களின் சத்தம் வேகமாகக் கேட்டது. நான் முண்டி முன்னால் போய் டெய்லர் கண்ணில் படுகிற மாதிரி நின்றேன். ஆளாளுக்கு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் தையல் மிஷினில் வேலை செய்து கொண்டே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டைம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே நம்பிக்கை குறைந்து விட்டது. என்றாலும் முற்றிலும் போய்விடவில்லை. எப்படியும் நமக்கு தைச்சி வச்சிருப்பார், நாம தான் ஒரு வாரத்துக்கு முன்னால் கொடுத்திருக்கிறோமே என்ற என் எண்ணத்தை நசுக்கிக் கொண்டு ஒரு குரல் கேட்டது. பதினைஞ்சி நாளைக்கு முன்னால கொடுத்தது… ” அப்பவே முடியாதுன்னு சொல்லியிருந்தா வேற டெய்லரைப்பாத்திருப்பம்ல. “ அவ்வளவு தான் எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது. நான் அழுகிற குரலில், “ அண்ணே என்னோட துணி தைச்சாச்சா? “ என்று கேட்டேன். அவர் “ என்ன துணி? “ என்றார். “ சுமதி என் சுந்தரி ஆரஞ்சு கலர் கட்டம்போட்ட சட்டை, ஊதாக்கலர் டவுசர்,..” என்று அவசர அவசரமாகச் சொன்னேன். அவர் காஜா போட்டுக்கொண்டிருந்த பையனிடம், “ டேய் தம்பி சொல்ற துணியைப் பார்ரா..” என்று சொன்னார். சில நிமிடங்களில் அப்படியே அலுங்காம குலுங்காம என் துணியைத் தூக்கிக்கிட்டு வந்து எங்கிட்டே காண்பித்து ” இதா “ என்றான். நான் தலையாட்டினேன். எனக்கு அழுகை வரத்தொடங்கியது.
” எப்பண்ணே கிடைக்கும் ? “ என்று கேட்டேன். அப்போது அவர் எனக்கு கடவுளாகத்தெரிந்தார். அவருடைய ஒரு வார்த்தையில் தான் என்னுடைய எதிர்காலம் இருக்கப்போவதைப்போல அவர் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இறுக்கமான முகத்திலிருந்த வாயைத் திறந்து, “ காலையில் ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கோ “ என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் அழுகையை அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் சொன்னேன். அவ்வளவு தான் என்னுடைய என்னை வசவுக்காடு உரித்து விட்டார்கள். அத்துடன் என்னைக் கூட்டிக்கொண்டு ராஜ் டெய்லர்ஸ் கடைக்குப் போய் அந்த டெய்லருக்கு வசவு. அவ்வளவு தான். டெய்லர் அண்ணன் பயந்து விட்டார். எல்லாவேலையையும் நிறுத்தி விட்டு என் துணியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். அப்படியே,” எக்கா நீங்க வீட்டுக்குப்போங்க..தம்பி இருக்கட்டும்..கொடுத்து விடுதேன்..” என்று சொல்லி என்னுடைய அம்மாவை அனுப்பி வைத்தார். அதன் பிறகு இரண்டு மணிநேரம் இருந்து வாங்கிட்டு தான் வந்தேன்.. புது சட்டை டவுசரை வாங்கிட்டு வீட்டுக்கு வரும்போது அம்மா பலகாரம் சுட அடுப்பில் சட்டியைப் போட்டிருந்தாள். சும்மா சொல்லக்கூடாது. அவசர அவசரமாகத் தைத்திருந்தாலும் அம்சமாக தைத்திருந்தார் அந்த அண்ணன். அதற்குப் பிறகு கல்லூரி முடியும் வரை அவரிடம் தான் என்னுடைய துணிகளைத் தைத்தேன். என்றாலும் அந்தத் தீபாவளிக்கு நான் அடைந்த பதட்டமும் கிடைத்தபிறகு நான் அடைந்த மகிழ்ச்சியும் இன்று வரை அடைந்ததில்லை.

இது ஆயத்த ஆடைகளின் காலம். மொத்த மனிதர்களையே அளவுகளால் பிரித்து ஏற்கனவே தைக்கப்பட்ட துணிகளுக்குள் மனிதர்கள் புகுந்து கொள்கிற காலம். ஆனால் ஒவ்வொருவருடைய தனித்துவமான உடல் அளவுகளுக்கு ஏற்ப அளந்து அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலில் தைத்து கொடுக்கிற தையல் கலைஞர்களை மட்டுமல்ல..அவர்களுக்கும் சமூகத்துக்கும் இடையில் இருந்த உறவையும் கூட ஆயத்த ஆடைகள் அருகிப்போகச் செய்து விட்டன. இப்போதும் ராஜ் அண்ணன் இருக்கிறார். பழைய கிழிசல்களைத் தைத்துக் கொண்டு..பழைய துணிகளை ஆல்டர் செய்து கொண்டிருக்கிறார். அவர் கண்களில் பழைய கனவுகளின் சாயம் நிறமிழந்து விட்டது. அவரும் ஒரு காலத்தில் கலைஞனாக இருந்திருக்கிறார் என்ற சாயல் அவர் பழைய துணிகளிலும் செய்கிற ஜாலங்களில் தெரியும்.
நன்றி- அந்திமழை

1 comment:

  1. 90களின் குழந்தைகள் பெறாத அனுபவம்... :-(

    ReplyDelete