Showing posts with label செவ்வியல் பதிப்பகம். Show all posts
Showing posts with label செவ்வியல் பதிப்பகம். Show all posts

Friday, 5 June 2026

மின்மினிப்பூச்சிகளாக ஒளிரும் கதைகள்

 

மின்மினிப்பூச்சிகளாக ஒளிரும் கதைகள் - என்றுமுள இசை





ளைக்காமல் தொடர்ந்து எழுத்துப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கும் உதயசங்கரின் சமீபத்திய குறுகுறுங்கதை நூல்என்றுமுள இசை”. சின்னஞ்சிறு மின்மினிக் கதைகளாக 49 கதைகள். செம்மலர், சிறுகதை காலாண்டிதழ் போன்ற இதழ்களில் அவ்வப்போது வெளிவந்தவை. செவ்வியல் பதிப்பகம், மருத்துவர் . நவீனாவின் பொருத்தமான சிற்றோவியங்களோடு வெளியிட்டிருக்கிறது.

கையடக்கக் குறுநூல்.

வழக்கமாகச் சொல்வதுதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, சின்னஞ்சிறு கதைகள் வழியாக, மின்மினிப் பூச்சிகளின் ஒளிர்தல் போல அவை வரலாறு, தத்துவம், மனோவியல், இயற்கை எனச் சகல திசைகளிலும் ஒளித் துகள்களை வீசுகின்றன.

காந்தி, பகத்சிங், சேகுவேரா, நிறவெறியை எதிர்த்துப் போராடித் தூக்கிலிடப்பட்ட கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ், சிலிக் குயில் பாப்லோ நெரூதா என வரலாற்று நாயகர்கள் சின்னஞ்சிறு பத்திகள் கொண்ட கதைகளின் வழியாகப் புத்துயிர் பெறுகிறார்கள்.

அழியாச் சித்திரமாக வாசக நெஞ்சங்களில் நிறைகிறார்கள்.

கவிதைக்கும், கதை நடைக்கும் இடையில் இத்தகைய குறுங்கதைகள் நடக்கின்றன. ஆதியில் நீர்வாழ் மீன், தன் துடுப்புகளைக் கால்களாக்கித் தரையில் நடக்கத் தொடங்கிய காலத்தின் இடைநிலை போல இந்தக் கதைகளின் வடிவங்கள் அமைந்துள்ளன.

பார்வைஎன்றொரு கதை:

அவள் என்னை மட்டுமே பார்ப்பதாக நினைத்தேன்.
காதலிப்பதாக நம்பினேன்.
நான் தான் அவளுடைய உலகமென்று கருதினேன்.
அவள் இந்த உலகம் பெரியது என்றாள்.”

இவ்வளவுதான் கதை. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் வடிவத்திலான ஜென் கதைகள் இத்தகைய கதைகளுக்கான மூல ஊற்றுகள். மக்கள் வழக்காறுகளிலும் இதுபோன்ற குறுங்கதைகள் ஏராளமுண்டு.

சமயத்தில் இத்தகைய கதைகள், ஒரு பெருங்கதையின் இடைப் பகுதியில் இருந்து உருவப்பட்ட பத்திகள் போன்ற வடிவத்தையும் அடையும் அபாயமுண்டு. புதுக்கவிதை என்பதை மடக்கி மடக்கி எழுதும் வசனமாகவும் ஹைக்கூ கவிதைகளை மூன்று வரியில் எழுதப்படும் எதாகிலுமான வார்த்தைகளாகவும் புரிந்து கொள்ளப்பட்ட அபாயம் போல.

-
ஸ்ரீரசா

வெளியீடு: செவ்வியல் பதிப்பகம்,
57/83,
இந்திரா நகர், மரக்காணம் சாலை,
திண்டிவனம் – 604001.

தொடர்புக்கு - 9488406868

நன்றி - செம்மலர் 

Friday, 20 March 2026

தெறிப்புகளின் கலை - என்றுமுள இசை

தெறிப்புகளின் கலை

உதயசங்கர்.



வாழ்வின் கணங்களின் பின்னத்தில் மின்னி மறையும் தெறிப்புகளின் கலை தான் குறுங்கதைகளென்று நம்புகிறேன். மின்னல் ஒளியில் தரிசனமாகும் முழுச்சித்திரமும் அதன் முரண்களுடன் வெளிப்பட்டு மறைந்து விடுகிறது. அந்தச் சித்திரம் கோட்டுச்சித்திரமாக இருக்கலாம். நீர்வண்ண ஓவியமாக இருக்கலாம். தைலவண்ணத்தில் பழைய வாசனையுடன் இருக்கலாம். துடிப்பான வண்ணங்களுடன் நம்மைக் கொலை செய்யத் துணிந்தவையாக இருக்கலாம். தேய்ந்த வண்ணங்களின் அழுகையாக இருக்கலாம். இன்னும் முதிராத கன்னியின் முதிராமோகமாக இருக்கலாம். யாசகம் கேட்கும் தொனியில் இருக்கலாம். குழந்தையின் அழுகுரலாகவோ, கொஞ்சும் சிரிப்பொலியாகவோ இருக்கலாம்.

கவிதைக்கு நெருக்கமாக, புதிர்வழியின் வாசலாக, விடுகதையின் பகிடியாக, ஜென் தியானமாக, ஒரு கை கடலாக, பலூனில் சிறைப்பட்ட காற்றாக, இரு கை கூட்டுக்குள் ஒளிரும் சுடராக, வரலாற்றின் நினைவாக, வாழ்வின் முரணை உணர்த்தும் எறும்பின் கடியாக இருக்கும் குறுங்கதைகள் உங்களுக்கு வேறொன்றாகவும் அனுபவம் தரலாம்.

சாத்தியங்களின் அசாத்தியங்களை எழுதிப்பார்க்கும் துடிப்பே இந்தக் கதைகள். ஏற்கனவே நூல்வனம் வெளியீடாக வெளியான அசைவற்று மிதக்கும் நிழல் என்று குறுங்கதைகளுக்குக் கிடைத்த நேர்மறை கருத்துகள் கொடுத்த உத்வேகம் பல பரிசோதனைகளுக்கு வழிநடத்தியது.

உலகமுழுவதும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் காலம் காலமாக எழுதப்பட்டுக் கொண்டிருந்தாலும் சமீபகாலமாகவே தமிழில் இதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கிறது.

என்றுமுள இசை குறுங்கதைகள் தொகுப்பு உங்களுக்கு வேறுபட்ட இலக்கிய அனுபவத்தைக் கொடுக்குமென்று நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பினை பலமுறை வாசித்துத் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட தோழர்.கமலாலயன், தோழர்.கண்ணன் எழுத்தாளர்.சரிதாஜோ, ஆகியோருக்கும் இந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகளை வெளியிட்ட செம்மலர், சிறுகதை காலாண்டிதழ், பத்திரிகைகளுக்கும் நன்றி. இந்தத் தொகுப்பில் கோட்டோவியங்களை வரைந்து கொடுத்த என்னுடைய அன்பு மகள் மருத்துவர்..நவீனாவுக்கு அன்பு. நூலை அழகாக வடிவமைப்பு செய்யும் தோழர். லார்க் பாஸ்கரனுக்கும் இயல் பதிப்பகத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

மின்னலின் ஒளிக்கோட்டில் உங்களை ஒரு கணம் முழுதாய் காணுங்கள்.


வெளியீடு - செவ்வியல் பதிப்பகம்

தொடர்புக்கு - 9488406868