Sunday, 2 August 2015

அருள், அனுபூதி, சாமியாடுதல்..பேயாடுதல் உண்மை என்ன?

 

உதயசங்கர்

meditation

ஆடி மாதம் தொடங்கி விட்டால் அநேகமாக நாட்டார் தெய்வக்கோவில்களில் கொடைவிழாக்கள் தொடங்கி விடும். ரண்டனக்கு..ரண்டா..ரண்டனக்கு ரண்டா.. என்று நையாண்டி மேளம் முழங்கும். தீபாராதனைகள், குலவைச்சத்தம், கொட்டுச்சத்தம் முழங்கும் போது ஏய்ய்ய்ய்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..என்ற சத்தத்துடன் அங்கங்கே அருள் வந்து சாமியாடுவார்கள். சில சாமிகள் ஓட்டமும் சாட்டமுமாக நாக்கைத்துருத்திக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஆட, சில சாமிகள் அமைதியாக நின்ற இடத்திலேயே முகத்தை சுளித்து கோணிக்கொண்டு உடம்பு மட்டும் அதிர நிற்பார்கள். பொம்பிளை சாமிகளோ கேட்கவே வேண்டாம்..தலைமுடி விரித்து தலையைச் சுழட்டி அமானுஷ்யக்குரலில் வீல்..வீல்..என்று கத்தியபடியே ஆடுவார்கள். நாட்டார் தெய்வக்கோவில்களில் மட்டும் தான் மாடசாமி, கருப்பசாமி, சுடலை, அய்யனார், சாஸ்தா, இசக்கி, பேய்ச்சி, பேராச்சி, போன்ற சாமிகள் ஆடும். ஒரு நாளும் பெருந்தெய்வக்கோவில்களில் யாருக்கும் அருள் வருவதில்லை. சாமி ஆடுவதில்லை. நெல்லையப்பர், மீனாட்சியம்மன், காமாட்சியம்மன், காசி, ராமேஸ்வரம், கேதாரிநாத், பத்ரிநாத் கோவில்களில் யாரும் சாமி ஆடுவதில்லையே ஏன்? கிறித்தவர்களின் ஜெபக்கூட்டங்களிலும் வழிகிற கண்ணீர் தெரியாமல் அருள் வந்ததைப்போல நெஞ்சில் அடித்து ஆடுவதும், ஏதோ ஒளியைப் பார்த்ததாகவோ, கேட்காத காது கேட்டதாக, நடக்க முடியாத கால்களில் பெலம் வந்து நடந்ததாக, எல்லோருக்குள்ளும் இருக்கிற சாத்தானை விரட்டிட இரவு முழுவதும் பாட்டு, ஜெபம், என்று நிகழ்த்தப்படுகிறது. அங்கேயும் அருள் வருகிறது. சாமி ஆடுகிறது. என்ன அங்கே கருப்பசாமி அருள்! இங்கே யேசப்பா அருள்!

இன்னும் கொஞ்சம் எலைட் பார்ட்டிகள் தியானம், மனஒருமை, அப்பாலை தியானம் , (TRANSCENDENTAL MEDITATION ) ஒன்றுமற்ற நிலை, ஆதி உணர்வு, என்று கிளம்பி பூஜ்யம், சூன்யம், யோகி, அவதாரம், அம்மா, மாதா, என்று விதவிதமாக நாமகரணம் சூடிய நவீன சாமியார்களிடம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களும் தங்களுடைய பங்குக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்து கோடீசுவரர்களாக பொம்பிளைப்பொறுக்கிகளாக, கேடிகளாக, மொள்ள மாறி, முடிச்சவிக்கிகளாக மாறி சமூகத்திலும், அந்தஸ்துக்குரியவர்களாக்கி விடுகிறார்கள். இவர்களை நோக்கி தங்களுடைய அமைதி தேடி தியானம் செய்ய போனவர்களும் தியானத்தின் போது ஏதேதோ வண்ணங்கள், காட்சிகள், தெரிந்ததாக சொல்கிறார்கள். சிலர் வெறுமையாக ஒன்றுமில்லாததாக இருந்ததாக சொல்கிறார்கள். கிறித்துவ ஜெபக்கூட்டங்களைப் போலவே கூட்டாகத் தியானம், ஆட்டம், பாட்டம், என்று கார்களில் வந்திறங்கி கொண்டாடுகிறார்கள். லட்சாதிபதிகள் முதல் கோடீசுவரர்கள் வரை வாடிக்கையாளர்கள். இவர்களில் நம்மூர் அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும் உண்டு.

இதல்லாமல் இன்றைய சினிமா டிரண்டாக இருக்கும் காத்து, கருப்பு, பேய், பிசாசு, வேறு ஆட்களைப் பிடித்தாட்டுகிறது. கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் விதவிதமாக பேயோட்டுபவர்கள், குட்டிச்சாமியார்கள், குறி சொல்பவர்கள், என்று ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது. பெரும்பாலான மக்கள் மேலே சொன்ன அத்தனையையும் முழுமனதாக நம்புகிறார்கள். சிலர் எல்லாவற்றையும் நம்பியும் நம்பாமலும் இருக்கிறார்கள். சிலர் காத்து, கருப்பு, பேய்பிடித்தல், அருள்வந்து, சாமியாடுதலைக் கேலி செய்தாலும் தியான வகையறாக்களை நம்புகிறார்கள். சமூகம் நவீனமாக நவீனமாக பழமை, மரபு சார்ந்த அத்தனை நம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் அறிவியல் விளக்கம் கொடுக்கும் பணி ஜோராக நடை பெறுகிறது. பழமை மீது எல்லோருக்கும் ஒரு காதல் (NOSTALGIA ) இருக்கிறது. அதனால் பழமை போற்றும் பக்திமணம் பத்திரிகைகள் தொடங்கி அனைத்து தொலைக்காட்சி, சினிமா, சமூகம் எல்லாவற்றிலும் இருக்கிறது. சரி இவற்றையெல்லாம் நம்புவதா? நம்பாமல் இருப்பதா? கண்முன்னால் நடக்கிறபோது எப்படி நம்பாமல் இருக்க முடியும். உண்மை தான்.

மனிதன் விசித்திரமானவன். ஏனெனில் லட்சக்கணக்கான வருடங்களாக பரிணாம வளர்ச்சி பெற்ற அவனுடைய மூளையின் புதிர்களை அவன் இப்போது தான் அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறான். ஆனால் சில ஆயிரம் வருடங்களுக்குள்ளாகவே அவன் கணக்கிலடங்காத ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த அருள், சாமியாடுதல், எல்லாவற்றுக்கும் காரணம் உளவியல் நோய் தான் என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்?

ஆதி மனிதன் இயற்கையின் உற்பாதங்களை, தன்னைச்சுற்றி இருந்த சூழ்நிலையின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாததினால் எல்லாவற்றையும் வழிபட்டான். நோய், மரணம், எதைப்பற்றியும் அவனுக்குத் தெரியவில்லை. இறந்தவர்களும் உயிரோடு தங்களுடன் இருப்பதாக நம்பினான். இந்த நம்பிக்கை அப்போது அவனுக்கு அவனுடைய வாழ்க்கைச்சூழ்நிலைக்கு ஆறுதலாக இருந்தது. கூடுதலான பலம் சேர்த்தது. இறந்தவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலாக வைத்து வழிபட்டான். இறந்தவனின் பாவனைகளையோ, குரலை, போலச் செய்தான். இதன் மூலம் அவனுடைய ஆவி இன்னொருவன் மீது இறங்கி இருப்பதாக நம்பினான். ஆவி இறங்கியதாகச் சொல்லப்பட்டவன், அல்லது சாமியாடுபவன் உள்ளமுக்கப்பட்ட உணர்வுகள் பீறிடும்போது சாமியாடுகிறான் அல்லது பேயாடுகிறான்.

மனிதமனதில் அதாவது மூளையில் மூன்று நிலைகள் உள்ளன. 1. வெளிமனம்( CONSCIOUS MIND ) 2.உள்மனம்( SUB CONSCIOUS MIND ) 3.ஆழ்மனம் ( UNCONSCIOUS MIND ). இவற்றில் வெளிமனம் லௌகீக நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்கிறது. உள்மனம் வெளிமனத்திற்கும் ஆழ்மனத்திற்கும் பாலமாக இருக்கிறது. ஆழ்மனதில் உள்ளமுக்கப்பட்ட ஆசைகள், கோபம், வஞ்சம், பகைமை, பாலுணர்வு எண்ணங்கள் எல்லாம் தாங்க முடியாத நெருக்கடியின் போது பீறிடுகிறது. இது ஒரு மனப்பிறழ்வு நோய். ஆக சாமியாடுதல் அல்லது பேயாடுதல் மனப்பிறழ்வு நோய்க்கூறுகள் தான். உளவியல் அறிஞர் ஃபிராய்டின் கருத்துப்படி மனிதமனதின் பண்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1.இத் ( id ) – இன்பம் 2.ஈகோ ( Ego ) - நடைமுறை 3.சூப்பர் ஈகோ( Super Ego ) – நீதி. இத்துக்கு இன்பம் ஒன்று தான் குறி. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத்தூண்டும். சூப்பர் ஈகோவைப் பொறுத்தவரை எதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று ஈகோவுக்குச் சொல்கிறது. நீதி,நேர்மை இவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் இது தான் மனசாட்சி. ஈகோ இத்தையும் சமாளித்து சூப்பர் ஈகோவையும் சமாளிக்கிறது. இந்த ஈகோவே சூழ்நிலையின் ஆதிக்கத்தை எதிர்த்தோ, அனுசரித்தோ செயலாற்றுகிறது. ஈகோ பலவீனமடையும் போது இத் ஆதிக்கம் செலுத்துகிறது. மனப்போராட்டங்கள் அதிகரிக்கிறது. மனப்பிறழ்வு நோய் உருவாகிறது.இத், ஈகோ, சூப்பர் ஈகோ, இந்த மூன்றும் சமநிலையில் இயங்கும்போது மனிதன் சக்தி வாய்ந்தவனாக சமூக நியதிகளுக்குக் கட்டுப்பட்டவனாக வாழ்கிறான்.

சரி. ஆனால் சாமியாடுபவர்களுக்கும் பேயாடுபவர்களுக்கும் சில காட்சிகள், உருவங்கள் தெரிகிறதே. அது எப்படி? இந்த மாயத்தோற்றங்கள் எப்படி உருவாகிறது? அதே போல தியானத்தின் போது நான் என்னும் உணர்வு மறைந்து இந்த பிரபஞ்சத்தோடு கலந்து விட்ட உணர்வு தோன்றுகிறதே. அது எப்படி? என்று சிலர் கேட்கலாம். அவர்கள் அனுபவித்தது உண்மை தான். அந்த அனுபூதி நிலைமைக்கும், சாமியாடுகிற அல்லது பேயாடுகிற தன்னிலை மறந்த நிலைமைக்கும், ஜெபக்கூட்டங்களில் ஒரு அரை மயக்கநிலையில் யேசப்பாவை பார்த்ததாகச் சொல்லும் நிலைமைக்கும் காரணம் நம்முடைய மூளையின் செயல்பாட்டில் ஏற்பட்ட மாறுபாடே. நம்முடைய கேட்கும் திறன், பேசும் திறன், நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகிற திறன் மூளையின் ஒரு பகுதியான ” டெம்போரல் லோப் “ ( TEMPORAL LOBE ) என்னும் பகுதிக்கு உள்ளது. இந்தப்பகுதி சரியான முறையில் செயல்படாத போது, வலிப்பு நோயின் போது, விசித்திரமான அநுபவங்கள் ஏற்படுகின்றன என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி மைக்கேல் பெர்சிங்கர். அதேபோல கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் நாட்டு நரம்பியல் விஞ்ஞானி விலயனூர் ராமச்சந்திரன் மின் அதிர்வுகளால் டெம்போரல் லோப் பகுதிக்கும் மூளையின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் போது இறை உணர்வுகள் பொங்குகின்றன என்கிறார். மைக்கேல் பெர்சிங்கர் மூளையில் காந்தப்புலத்தை உருவாக்க வல்ல ஒரு தலைக்கவசத்தின் மூலம் எந்த நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்களை அவரவர் கலாச்சாரப்பின்புலத்தில் அவரவர்களுடைய கடவுள்களை பார்க்க வைத்தார். டேவிட்சன் என்ற விஞ்ஞானி ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே கவனம் குவிக்கப்படும் போது திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகிற பாரிடல் லோப் ( PARIETAL LOBE ) செயலிழந்து போவதைக் கண்டறிந்தார். இதனாலேயே தியானத்தின் போது ” தான் ” என்பது இல்லாமல் பிரபஞ்சத்தோடு கரைந்து விட்ட பரவசஉணர்வு ( இறையுணர்வு ? ) தோன்றுகிறது. ஆக பாரிடல் லோப் செயலிழந்து போவதனால் தோன்றுவதே இத்தைகைய பிரம்மை. மூளையின் உட்பகுதியில் இருக்கும் பீனியல் சுரப்பி ( pienial gland ) யிலிருந்து வெளிவரும் டைமெதில்டிரிப்டா மைன் என்ற வேதிப்பொருள் மாயத்தோற்றங்களை உருவாக்க வல்லது என்கிறார் ரிக் டிராஸ்மேன் என்ற அறிவியல் அறிஞர். இதோடு போதைப்பொருட்களான கஞ்சா, அபின், ஹெராயின் போன்றவற்றை உபயோகப்படுத்தும் போது இந்த டெம்போரல் லோப் தூண்டப்பட்டு மாயக்காட்சிகளும், மாய ஒலிகளூம் கேட்கின்றன. சில நவீன சாமியார்கள் தங்களுடைய ஆசிரமங்களில் ஏன் கஞ்சாவைப் பயன்படுத்துகிறார்கள் தெரிகிறதா?

அருள், சாமியாடுதல், பேயாடுதல், தியானம், இறையுணர்வு கடவுளின் தோற்றம் எல்லாம் மூளைக்கோளாறுகளே. தவிர வேறு எந்த புண்ணாக்கும் இல்லை. தேவை நல்ல மருத்துவச்சிகிச்சை. அறிவியல் நோக்கு, பகுத்தறிவுச்சிந்தனை, வேறொன்றுமில்லை.

துணை நூல் – காத்து கருப்பு- நேயம் சத்யா

sami

3 comments:

  1. அருமையான கட்டுரை!
    பெண்களை மட்டும் ஏன் பேய் பிடிக்கிறது? சிலர் அந்த பேயை ஓட்ட எளிய வழி இருக்கு என்கிறார்கள். பெரியவர்கள் சொல்லும் போது நம்பாமல் இருக்கமுடியவில்லை. நாளை இதை ஒட்டி ஒரு இடுகை போடுகிறேன்!

    ReplyDelete
  2. மிகவும் நல்லதொரு கட்டுரை. schizophrenia எனப்படும் உளச்சிதைவு நோய் ஏற்படுவோருக்கு இவ்வாறான பேய் பிடித்தல், சாமியாடுதல் போன்றவைகள் ஏற்படுமாம். பணத்தாசை மிக்க சாமியார்கள் இவற்றோடு சேர்த்து அருள் தருவது, யாகங்கள் செய்வது, இன்ன பிற பரிகாரங்கள் பிண்ணாக்குக்கள் என சேர்த்து பணம் பண்ணுகின்றனர் அவ்வளவே.

    ReplyDelete
  3. அருமையான விழிப்புணர்வு கட்டுரை ஐயா
    நன்றி

    ReplyDelete