எறும்பும் ரோஜாவும்
உதயசங்கர்
உதயசங்கர்
ஒரு
ஊரில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மல்லிகை, முல்லை, பிச்சி, அரளி,
ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, கனகாம்பரம், போன்ற பூச்செடிகள் இருந்தன.
வசந்தகாலம்
வந்து விட்டது.
தோட்டத்தில்
பூக்கள் பூத்துக்குலுங்கின.
பூக்களின்
மணம் தேனீக்கள், தேன் சிட்டுகள், ஈக்கள், எறும்புகள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள்,
என்று எல்லோரையும் அழைத்தது. அந்தத்தோட்டத்தில் ஒரு மூலையில் மண்ணிற்குக் கீழே சிற்றெறும்புக்கூட்டம்
வீடு கட்டிக் குடியிருந்தது. அந்த எறும்புகள் சுறுசுறுப்பானவை. ஒரு விநாடி கூட சோம்பலாய்
இருப்பதில்லை. எப்போதும் ஒற்றுமையாய் இருந்தன. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்புடன்
வாழ்ந்து வந்தன.
அந்தக்கூட்டத்தில்
ஒரு சுட்டி எறும்பு இருந்தது. அந்த எறும்பு யாருடனும் சேராது. தனியாகப் போகும் தனியாக
வரும். யாராவது உதவி கேட்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடும்.
ஒரு
நாள் காலையில் சுட்டி எறும்பு தூக்கம் கலைந்து எழுந்தது. அந்தச் சுட்டி எறும்புக்கு
சரியான பசி. உணவைத்தேடி அலைந்தது. ஒரு ரோஜாச்செடியின் உச்சியில் ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தது.
அந்த ரோஜாவின் வாசனை மூக்கைத் துளைத்தது. சுட்டி எறும்பு எப்படியாவது அந்த ரோஜா இதழ்களில்
உள்ள தேனைக் குடித்து விட வேண்டும் என்று நினைத்தது.
ரோஜாச்செடியில் ஏற வேண்டும். என்ன செய்வது? முட்கள்
குத்தாமல் எப்படி ஏறுவது என்று யோசித்தது. அந்த ரோஜாச்செடியைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போது
காற்று வீசியது. அந்தக் காற்றில் ரோஜாச்செடியின் மீது ஒரு சிறுகுச்சி பறந்து வந்து
சாய்ந்து நின்றது. சுட்டி எறும்புக்கு மகிழ்ச்சி. அந்த குச்சியின் மீது ஏறி நேரே ரோஜாச்செடியின்
உச்சிக்குச் சென்று விட்டது.
மேலே
சென்றதும் வேறு யாரும் அந்தக்குச்சி வழியாக வந்து விடக்கூடாது என்று சுட்டி எறும்பு
நினைத்தது.
உடனே
சுட்டி எறும்பு அந்தக்குச்சியைக் கீழே தள்ளிவிட்டது.
தனியாக
அந்த ரோஜாப்பூவின் உள்ளே இருந்த தேனை வயிறு முட்டக்குடித்தது. வயிறு நிறைந்ததும் சுட்டி
எறும்புக்கு உறக்கம் வந்தது. அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விட்டது.
கண்விழித்துப்பார்த்தால்
சுற்றிலும் ஒரே இருட்டு. வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன. இருட்டைக்
கண்டால் எப்போதும் சுட்டி எறும்புக்குப் பயம். கீழே இறங்கலாம் இருட்டில் எப்படி இறங்க
முடியும்? குச்சியும் இல்லை. சுட்டி எறும்புக்கு அழுகை வந்தது.
“
ஞீம்ம் ஞீம்ம்..நான் வீட்டுக்குப்போணும்… நான் வீட்டுக்குப் போணும்..” என்று அழுது
கொண்டிருந்தது.
அப்போது
திடீரென்று ரோஜாச்செடியின் மீது ஒரு குச்சி தெரிந்தது. அதைப்பார்த்த சுட்டி எறும்பு
யோசிக்கவே இல்லை. வேகம் வேகமாக அந்தக்குச்சி வழியாகக் கீழே இறங்கியது.
அதனுடைய
வீட்டை நோக்கி வேகமாக ஓடியது. பின்னால் ஏதோ சர சரவென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப்
பார்த்தது சுட்டி எறும்பு.
சுட்டி
எறும்பு இறங்கி வந்த குச்சியும் அதன் பின்னால் வந்து கொண்டிருந்தது.
திகைத்து
நின்ற சுட்டி எறும்பைச் சுற்றி சிற்றெறும்புக்கூட்டம்.
எல்லோரும்
சுட்டி எறும்பைத் தூக்கித் தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
கண்டு
பிடித்தோம் சுட்டியைக் கண்டு பிடித்தோம்
கண்டு
பிடித்தோம் சுட்டியைக் கண்டு பிடித்தோம்
என்று
பாட்டுப்பாடின. சுட்டி எறும்பு என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?
சுட்டி
எறும்பு எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லிக் கொண்டே இருந்தது.
நன்றி - மாயாபஜார்
( 5+ குழந்தைகளுக்கான கதை )
அருமை
ReplyDelete